டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள எல் பாஸோவைச் சேர்ந்த தமிழர் ஹேமா முள்ளூர் (பார்க்க: தென்றல், ஆகஸ்ட் 2008). அங்குள்ள KFox தொலைக்காட்சி நிலையத்தில் செய்தியாளராகப் பணிபுரிகிறார். மாலை 6.00 மணி மற்றும் 9.00 மணி எஃப்.எம். அலைவரிசையில் செய்தி அலசலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது சாதனையைக் கௌரவிக்கும் வண்ணம் ஹேமாவிற்குத் தொலைக்காட்சித் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற விருதான எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது ஹேமாவுக்கு வழங்கப்படக் காரணம் அவர் தொகுத்தளித்த இரண்டு நிகழ்ச்சிகள். ஒன்று, நவம்பர் 2009ம் ஆண்டு எல் பாஸோ நகரைச் சூறையாடிய 116 மைல் வேகத்தில் அடித்துக் கொண்டிருந்த சூறாவளி பற்றிய செய்திகளை இடைவிடாமல் தொகுத்து வழங்கியதற்காக. அதற்கு 'சிறிய பகுதிகளுக்கான சிறந்த மாலை நேரச் செய்தி ஒளிபரப்பு' (Best Evening Newscast for a Small Market) என்ற பிரிவில் 'முதல் லோன் ஸ்டார் எம்மி' (First Lone Star EMMY) KFox-இன் News At Six பிரிவுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவதாக “டெக்ஸாஸ் ஹெரிடேஜ்” என்ற பகுதியில், "BIGGS Fly Girls; Heroines of the sky" என்ற ஆவணப்படத்துக்கும் 'லோன் ஸ்டார் எம்மி' வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் உள்நாட்டுப் பெண் விமானிகளின் சேவைகளும், அவர்கள் எவ்வாறு ஆண்களை இரண்டாவது மகா யுத்தத்திற்குத் தயார்படுத்தினர் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. போர் முடிந்த பின்பு இப்பெண்மணிகளின் சேவை வரலாற்றில் இடம்பெறாமல் போனது. இச்செய்தியை வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த டாகுமெண்டரி. இப்பெண்மணிகளின் பெயர்களை ஃபோர்ட் பிளிஸ் நகரில் உள்ள சாலைகளுக்குச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எல் பாஸோவிலுள்ள சுயேச்சைப் பள்ளி வாரியம் ஒன்று, தனது கலைகள் கட்டிடம் ஒன்றிற்கு இப்பெண்களின் பெயர்களைச் சூட்ட உள்ளது.
ஷானா ஸீக்லர் என்பவர் தயாரித்த இந்தச் செய்திப்படத்தை KFox TVயில் தொகுத்து வழங்கியவர் ஹேமா முள்ளூர். டெக்ஸஸ் அஸோசியேட் பிரஸ் (Texas Assosited Press) மற்றும் ஹூஸ்டன் பிரெஸ் கிளப்பின் (Houston Press Club) சிறந்த டாகுமெண்ட்ரிக்கான முதல் இடத்தையும் இந்நிகழ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: காந்தி சுந்தர் |