தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. புவனாவுக்கு இந்த வருஷம் தலைதீபாவளி. தாயில்லாப் பெண் என்று அவ்வப்போது சொல்லிக் காட்டும் மாமியார் "ஏம்மா! புவனா? உனக்குத் தலை தீபாவளின்னு உன் அண்ணனுக்குத் தெரியுமா? அம்மான்னு ஒருத்தி இருந்தா இந்த சம்பிரதாயமெல்லாம் தெரியும். ஏன் சொல்றேன்னா, நாம பகப்படுத்தணுமாங்கறதுக்காகக் கேட்டேன்" என்றாள்.
அண்ணா வந்து ஆடிப் பண்டிகைக்கு அழைத்துப் போய் புடவை ரவிக்கை என்றெல்லாம் சீர் செய்து அனுப்பி வைத்ததை இதற்குள் மாமியாருக்கு எப்படி மறந்து போயிருக்க முடியும்? புவனாவின் கண்களில் நீர் தளும்பியது. "நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கண்ணைக் கசக்க ஆரம்பிக்கறே? என் ஒரே பிள்ளை பட்டு வேஷ்டி வைரமோதிரம்னு ஜாம்ஜாம்னு தலைதீபாவளி கொண்டாடிட்டு வந்தான்னா அது எவ்வளவு பெருமையா இருக்கும் எனக்கு". சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதைக் கேட்டுக்கொண்டே வந்த கண்ணன் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளே போய்விட்டான்.
"அப்பாடா, நல்லவேளை பிள்ளையின் காதில் விழவில்லை" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தாள். புவனா வேகமாகக் கண்ணனைப் பின்தொடர்ந்தாள்."இதோ பாருங்கோ"என்று ஆரம்பிக்குமுன் "உஷ்!" என்று வாயில் விரலை வைத்து எதுவும் பேச வேண்டாம் என்று ஜாடை செய்துவிட்டுப் போய்விட்டான். கண்ணனின் எதிலும் பட்டுக் கொள்ளாத இந்தப் போக்குத்தான் சிலசமயங்களில் புவனாவுக்கு எரிச்சலூட்டியது, என்றாலும் வேறு வழியும் தெரியவில்லை.
அன்று காலை. புவனாவின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அண்ணா ரகு மனைவி ஜானகியுடன் இறங்கினான். அவர்களைப் பார்த்தவுடன் புவனாவுக்கு வைர மோதிரம் பட்டுவேஷ்டி என்று தன் மாமியார் அண்ணா, மன்னியிடம் ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயம். வந்தவர்களை வரவேற்கவும் தோன்றவில்லை.
புவனாவைத் திரும்பிப் பார்த்த கண்ணன் அவள் முகத்தில் தெரிந்த கலக்கத்தைப் புரிந்துகொண்டு வெகு சகஜமாக "வாங்கோ, வாங்கோ சௌக்யமா?" என்று வரவேற்றுச் சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தினான்.
புவனாவின் பக்கம் திரும்பி "என்ன புவனா! வந்தவாளை வான்னுகூடச் சொல்லாமல் திகைச்சுப் போய் நின்னுட்டே, தீபாவளி வர்றதே மறந்து போச்சா?" என்று கேட்டுவிட்டு ரகுவின் பக்கம் திரும்பினான்.'"என்ன நான் சொன்னது சரிதானே ரகு, தீபாவளிக்கு அழைக்கத்தானே இந்த விசிட்?" என்று வெளிப்படையாக விகல்பமில்லாமல் கேட்டான்.
அப்படியே உள்பக்கம் திரும்பி "அம்மா! இங்கே யார் வந்திருக்கா பாரு?"என்று குரல் கொடுத்தான். "யாரு? ஜானகியா, வா சௌக்யமா? தீபாவளி பக்கத்தில வந்தாச்சுன்னு நேத்திக்கித்தான் புவனாகிட்டே சொன்னேன்” பேசியபடியே ஜானகி நீட்டிய பூ, பழங்களை வாங்கிக் கொண்டாள்.
"கண்ணன்! அம்மாவையும் புவனாவையும் அழைச்சுண்டு தீபாவளிக்கு முதல் நாளே வந்துடணும். நேர்ல அழைக்கத்தான் வந்தேன்" என்றான் ரகு. பெரிய புஸ்வாணம் கொளுத்தி வச்ச மாதிரி கண்ணனின் அம்மா முகமெல்லாம் ஒளிர்ந்தது. வாயெல்லாம் பல். பாசம் பொங்கும் குரலில் "ரகு. அவர் காலமானதுக்கப்புறம் நான் புதுசு கட்டிண்டு பண்டிகைன்னு எதுவும் கொண்டாடறதில்லே. ஏதோ நமக்கிருக்கிறது ஒரே பிள்ளை அதுக்கு குறை வைக்கக் கூடாதுன்னு புதுசு வாங்கிக் குடுத்து ஒரு பாயசம் வச்சுப் பரிமாறுவேன். அதனாலே நான் வரல்லே, கண்ணனும் புவனாவும் வருவா...” அவளுக்கு இன்னும் பேச விஷயங்கள் நாக்கு நுனியில் காத்திருந்தன.
ஆனால் கண்ணன் புவனாவை வந்தவர்களுக்குக் காப்பி கொண்டுவரச் சொல்லி உள்ளே அனுப்பிவிட்டு, "அம்மா! வாசல்லே யாருன்னு பாரு?" என்று அர்த்தத்தோடு அவள் பக்கம் பார்த்தான். அவனைப் பெற்றவள் ஆச்சே, அவளுக்கா புரியாது அவன் பார்வை. இங்கிருந்து நகரலாம் என்று அர்த்தம். வேறு வழியில்லாமல் வாசல்பக்கம் போனாள். கண்ணன் ரகுவிடம் நெருங்கி அவன் காதருகே போய் ஏதோ சொன்னான்.
தீபாவளிக்கு முதல் நாள். கண்ணனும் புவனாவும் இரண்டு பெரிய பெட்டிகளுடன் ரகுவின் வீட்டை அடைந்தார்கள். பெட்டிகளை ரகுவிடம் நீட்டினான் கண்ணன். "இதென்ன?” என்பதுபோல் ரகு அவனைப் பார்த்தான். "நானும் வழி நெடுக இவரைக் கேட்டுப் பார்த்தேன். அது சஸ்பென்ஸ்னுதான் சொன்னாரே தவிர என்னன்னு சொல்லவேயில்லை" என்றாள் புவனா தன் பங்குக்கு.
"புவனா இப்போ நீ அட்டைப்பெட்டியைத் திறக்கலாம். எல்லாரும் பார்க்கலாம்," என்றான் கண்ணன். சொன்னதுதான் தாமதம் உடனே பரபரவென்று பிரித்தாள் புவனா. அழகான இரண்டு பட்டுப் புடவைகள், இரண்டு பட்டு வேஷ்டிசட்டை, ஒன்பது கஜம் புடவை ஒன்று. எல்லோரும் அசந்து போய் நின்றனர். “இன்னும் கூட ஒரு சர்ப்ரைஸ் இருக்கே" என்று தன் பையிலிருந்து அழகான வெல்வெட் பெட்டிகள் இரண்டை வெளியே எடுத்து ரகுவின் கையில் தந்து "திறந்து பார்" என்றான் கண்ணன். ஜொலிக்கும் வைர மோதிரங்கள்! “ரெண்டுமே உனக்கில்லே. ஒண்ணுதான் உனக்கு. இன்னொண்ணு எனக்கு" சொல்லிவிட்டுச் சிரித்தான் கண்ணன்.
உணர்ச்சிப் பெருக்கில் ரகுவின் பார்வையைத் திரையிட்டு மறைத்தது ஆனந்தக் கண்ணீர். "எனக்குப் பேச்சே வரமாட்டேங்கறது கண்ணா. எத்தனை நல்ல மனசு உனக்கு" என்றவன் அவனை அப்படியே இறுகத் தழுவிக் கொண்டான். என்ன ரகு இப்படி உணர்ச்சி வசப்படலாமா? நீயும் என்கூடப் பிறந்த சகோதரன் மாதிரி. உனக்கு அம்மா அப்பா இல்லேன்னாலும் அந்த ஸ்தானத்திலே இருந்து தங்கைக்குக் கல்யாணம், சீர்செனத்தி எல்லாம் செஞ்சிருக்கே. உனக்கும் மேலே ஜானகி . இப்படிப்பட்ட ஒரு அண்ணாவும் மன்னியும் கிடைக்க புவனா ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்.
"இவ்வளவு பேசற நீ ஏன் வைரமோதிரம் பட்டு வேஷ்டின்னு சாஸ்திரம் பாக்கறே ஏன் சிம்பிளா இல்லேன்னு" கேக்கறியா இதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு. என் அம்மாவின் சந்தோஷத்துக்காக. இப்பக்கூட நீங்க அழைக்க வந்தபோது என்ன சொன்னா? எனக்கு எதுவும் வேண்டாம்னுதானே சொன்னா. எனக்காகவே வாழ்ந்திண்டிருக்கா. சின்ன வயசிலிருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சவ. என் அப்பா போனப்பறம் உறவு மனுஷான்னு யாரும் நெருங்கி வரலே. தனியா போராடினவ. ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கா. நான் படிச்சு முன்னுக்கு வந்துட்டேன். தலைதீபாவளி பிரமாதமா கொண்டாடினான் என் பிள்ளைன்னு சந்தோஷப்பட ஆசைப்படறா. அவ ஆசைக்காகத்தான் என் செலவிலேயே எல்லாத்தையும் வாங்கினேன். நீயும் இப்போதான் வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கே. ஜானகி மட்டுமென்ன 60 வயசு கிழவியா? புவனாவைப் போலத்தானே. ஊர் உலகத்தைப் போல தீபாவளிக்கு என் அப்பா வீட்டுக்குப் போகணும்னு சொல்லியிருந்தா முடியாதுன்னு சொல்ல முடியுமா உன்னால்?”
இதற்குள் புவனா குறுக்கிட்டு "இரண்டாவது காரணத்தை இன்னும் சொல்லலியே" என்றாள். "அவசரப்படாதே, அது என்னன்னா புரட்சிகரமான விஷயங்களையெல்லாம் சொல்லி அம்மாவுக்குப் புரியவைக்க முடியாது. புரியவச்சு மனசை மாத்தறதெல்லாம் நடக்காத காரியம். அப்படிப் புரிஞ்சுண்டு மனசை மாத்திக்கிற வயசைத் தாண்டினவ அம்மா. ஏதோ இருக்கிற கொஞ்சகாலம் சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே. ரகுவுக்கும் செலவு வைக்கக்கூடாது அம்மாவுக்கும் ஏமாத்தம் இருக்கக் கூடாதுன்னுதான் எல்லாச் செலவையும் நானே ஏத்துண்டு அதை சஸ்பென்ஸா வச்சிருந்தேன். நேத்தைய தலைமுறையான அம்மாவையும் அனுசரிச்சிண்டு இந்த நம்ம தலைமுறை நடைமுறைகளையும் புரிஞ்சுண்டு ஒரு பாலமா இருந்தா சந்தோஷமா இருக்கலாம் என்பதுதான் இரண்டாவது காரணம். நான் சொல்றது சரிதானே ரகு?” என்று கூறிவிட்டு கண்ணன் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான்.
"அது சரி, அண்ணாவுக்கு இந்த ஏற்பாடெல்லாம் முன்னாலேயே தெரியுமா?" புவனா ஆவலோடு கேட்டாள்.
"தீபாவளிக்கு அழைக்க வந்தபோது ரகுவிடம் நான் என்ன சொல்லி வச்சிருந்தேன் தெரியுமா! தலைதீபாவளிக்கு எனக்குப் பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் நானே வாங்கிண்டு வறேன். பணத்தைப்பத்திப் பின்னால் பேசிக்கலாம்னு சொல்லியிருந்தேன்."
"என் உணர்ச்சிகளைப் புரிஞ்சுண்டு எனக்கு ஆதரவாப் பேசாத உங்களை ‘அம்மாகோண்டு’ன்னு தப்பா நெனச்சிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க" என்று சொல்லி விசும்பியபடி கண்ணன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் புவனா.
டாக்டர் அலர்மேலு ரிஷி |