ஒரு ஊரில் ஒரு மீனவன் இருந்தான். அவன் தினமும் காலையிலேயே எழுந்து கடலுக்கு மீன் பிடிக்கப் போவது வழக்கம். அன்றைக்கு வெகுநேரம் காத்திருந்தும் மீனே கிடைக்கவில்லை. அதனால் அவன் மனம் சோர்ந்து இருந்தபோது வலை வேகமாக அசைந்தது. அவசரமாக அதை மேலே தூக்கினான். வலையில் தங்கமீன் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது. அழகோடு மின்னிய தங்கமீனைப் பார்த்த மீனவன், அதை அரசரிடம் கொடுத்தால் நிறையப் பணம் கிடைக்குமே என்று நினைத்தான். அதை வலையிலிருந்து எடுக்க முற்பட்டான்.
அந்த மீன் பேச ஆரம்பித்தது. "மீனவனே. என்னை விட்டுவிடு. நான் ஒரு தேவதை. சாபத்தினால் இப்படி மீனாக இருக்கிறேன். என்னை விட்டுவிட்டால், உனக்கு தினமும் நிறைய மீன் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்றது. "உன் பேச்சை எப்படி நம்புவது? உன்னை அரசரிடம் சேர்ப்பித்தால் எனக்கு நிறையப் பொருள் கிடைக்குமே!" என்றான் மீனவன்.
"கவலை வேண்டாம். நீ தினமும் இங்கு வா! நான் உனக்கு நிறைய மீன்களும் தினம் ஒரு பொன்னும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். இது சத்தியம். என்னை விட்டுவிடு" என்றது. மீனவனுக்கும் அந்த அழகான தங்கமீனைக் கொல்ல மனம் வரவில்லை. அதை வலையில் இருந்து விடுவித்துவிட்டு வீட்டுக்குச் சென்றான். அன்று வெறும் வயிற்றுடன் பட்டினியாகப் படுத்துக் கொண்டான்.
மறுநாள் போனால், நிறைய மீன்கள் கிடைத்தன. அது மட்டுமல்ல, வலையில் ஒரு தங்கக் காசு! தேவதை மீன் வாக்குத் தவறவில்லை என்று நினைத்தான். அதுமுதல் அவனுக்கு தினமும் நிறைய மீன்களும், பொற்காசும் கிடைத்தன. நாளடைவில் பணக்காரனாகி விடவே, போதும் என நினைத்து மீன் பிடிக்கும் தொழிலையே விட்டுவிட்டான்.
பக்கத்து வீட்டில் ஒருவன் வசித்து வந்தான். கருணையே இல்லாதவன். மீனவன் திடீர்ப் பணக்காரன் ஆனது கண்டு பொறாமைப் பட்டான். ஏதாவது புதையல் கிடைத்திருக்கும், அதனால்தான் பணக்காரன் ஆகியிருக்கிறான் என்று நினைத்தான். தானும் மீன் பிடிக்க முடிவு செய்து, மறுநாள் விடிகாலையிலேயே புறப்பட்டுக் கடலுக்குச் சென்றான். வலை வீசிவிட்டுக் காத்திருந்தான். சில மீன்கள் சிக்கின. புதையல் ஏதும் கிடைக்கவில்லை. அவனுக்கு ஆத்திரம் வந்தது. அந்த மீன்களைக் கொன்று கடலில் வீசினான். தினமும் மீன் பிடிப்பதும், புதையல் கிடைக்காமல், கிடைத்த மீன்களைக் கொன்று எறிவதும் வாடிக்கையானது.
ஒருநாள், திடீரென வலை வேகமாக அசைந்தது. அவன் அதை இழுத்தான், ஏதோ ஒரு கனமான பொருள் அதில் மாட்டிக்கொண்டிருந்தது. ஆஹா! மிகப் பெரிய புதையல் சிக்கிவிட்டது என்று நினைத்து, அப்படியே வலையோடு சேர்த்து படகைக் கரைக்குத் திருப்பினான். உதவிக்கு யாரையாவது அழைத்தால் எங்கே புதையலில் பங்கு தரவேண்டுமோ என்று அஞ்சி, தானே வலையைக் கரைக்கு இழுத்து வந்தான். வலையில் ஒரு பெரிய பெட்டி சிக்கியிருந்தது.
பொற்காசுகள் நிறைந்திருக்கும் என்ற மகிழ்ச்சியுடன் அவன் பெட்டியைத் திறந்தான். அதில் ஒரு பட்டுத்துணிச் சுருள் இருந்தது. புதையல் பற்றிய குறிப்பாக இருக்கும் என்று நினைத்து அதை ஆசையோடு பிரித்துப் படித்தான். அதில் 'உயிர்களுக்கு இரங்கு', 'உண்மையாக உழைத்து வாழ்', 'போதும் என்ற மனத்தோடு பொறாமையில்லாமல் வாழ்' - இதுதான் மனித வாழ்க்கைக்குத் தேவையான புதையல் என்று எழுதியிருந்தது.
நல்ல அறிவுரைகளும் புதையல் போலத்தானே!
சுப்புத்தாத்தா |