பேராசிரியர் நினைவுகள்: மேருவைப் பறிக்க வேண்டின்...
பாரதி பாடல்களை எப்படிப் பொருள் விளங்கிக் கொள்ளாமலே படித்து, ஏதோ விளங்கிக்கொண்ட பாவனையில் இருக்கிறோம் என்பதை இந்தப் பகுதியில் பல சமயங்களில் விளக்கியிருக்கிறேன். ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான் என்ற இடத்தில் 'கொடி, தாழ்மரம்' ஆகிய சொற்களின் பயன்பாடு குறுகிக்கொண்டே போகும் காரணத்தால் குள்ளச்சாமியைப் பற்றிய அந்த அடிகளை நாம் விளங்கிக் கொள்வது எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்று பாரத்தோம். அப்படித்தான் குயில் பாட்டில் 'வேடர் வாராத விருந்துத் திருநாளில்' என்ற இடத்தில், வேடர்களுக்கு விருந்துத் திருநாள் என்றால் வழக்கத்தைவிட அதிகமாக அல்லவா பறவைகளைச் சுடுவார்கள், வேடர் வாராத விருந்துத் திருநாளில் மற்ற பறவைகளெல்லாம் புடைசூழ, மேனி புளகமுற இந்தக் குயில் பாடுகிறதே, இது எப்படி சாத்தியம் என்று குழம்பிய பிறகே, விருந்து என்றால் 'புதுமை' என்பதுதான் முதற்பொருள்; அந்தச் சொல்லுக்கு நாம் இழந்துவிட்ட பொருள் என்பதை இன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இவற்றையெல்லாம் பல சமயங்களில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். 'பாரதி பாடல்கள் எளிமையானவைதாம். அதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ஆனால், 'நமக்கு எல்லாம் விளங்கிவிட்டது' என்ற உணர்வோடு பாரதியை அணுகாதீர்கள். காரணம், அவனுடைய சொல் ஆளுமை, சொல் அடங்கல், அடர்த்தி அவ்வளவு வலியது. அவனையே அறியாமல் வந்து விழுந்திருக்கும் அரிய ஆட்சிகள் ஒருபுறம் என்றால், அவன் காலத்தில் சரளமான புழக்கத்தில் இருந்து, இப்போது நாம் மறந்தும் இழந்தும் விட்ட சொற்கள் அனேகம். ஆகவே, 'நாம் புரிந்து கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்' என்ற எச்சரிக்கை உணர்வோடு அவனை அணுகுங்கள்' என்பது அவருடைய சொற்பொழிவுகளின் அடிநாதமாக ஒலித்துக் கொண்டே இருந்தது. கோமல் சுவாமிநாதன் அவர்கள், பேராசிரியரைக் கொண்டு பாரதியின்மேல் ஒரு தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். 'சுபமங்களா' பத்திரிகை மிக வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த காலம் அது். இந்தக் கருத்துகளை எல்லாம் வலியுறுத்திப் பேசியவர், தன்னுடைய நெடுநாள் கனவான பாரதி ஆய்வடங்கலைப் பற்றியும் குறிப்பிட்டார். பாரதி பாடல்கள் எப்படிப்பட்ட பதிப்பாக வெளிவரவேண்டும் என்பதற்கான முதல் வரைபடம் அது. (பின்னால், சீனி விசுவநாதன் அவர்களுடைய பதிப்பு அவருடைய கனவில் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்தது என்பது வேறு விஷயம்.)

பாரதி பாடல்களின் பதிப்பில் நிறையக் குளறுபடிகள் உள்ளன என்பது அவருடைய கருத்தாக இருந்தது. (பேராசிரியர் மரணமடைந்தது 1996ல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.) அவருடைய கருத்துகளில் பலவற்றைச் சீனி விசுவநாதனும் 'பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற அவருடைய அண்மை வெளியீட்டில் குறித்திருக்கிறார். என்னுடைய ஓடிப்போனானா புத்தகத்தில் இந்த ஆய்வுக் குளறுபடிகள் பலவற்றை நானும் சொல்லியிருக்கிறேன். இப்படி, பாரதி பாடல்களின் அளவில் உள்ள ஆய்வியல் மாறுபாடுகளை வகைப்படுத்த வேண்டும் என்பது அவருடைய கருத்துகளில் ஒன்று. அடுத்ததாக, ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியான குறிப்புரை இருக்கவேண்டும் என்றும் விரும்பினார். உதாரணமாக 'மாஜினியின் சபதம்' என்ற பாடலுக்குக் கீழேயோ அலலது அதைத் தொடர்ந்தோ, மாஜினி யார், எந்த தேசத்தில், எப்போது வாழ்ந்தவர், ஏன் இப்படி ஒரு சபதத்தை மேற்கொண்டார், இந்தச் சபதத்துக்கும் இந்திய தேச விடுதலைப் போருக்கும் என்ன தொடர்பு என்பன போன்ற தகவல்கள் இடம்பெற வேண்டும்; கரும்புத் தோட்டத்திலே பாட்டு என்றால், ஃபிஜித் தீவு எங்கே இருக்கிறது, எந்தக் காலகட்டத்திலிருந்து தமிழ்ப் பெண்கள் அங்கே போய்க் குடியேறி, அடிமைகள்போல் அல்லல்படுகிறார்கள், எந்தக் குறிப்பிட்ட நிகழ்வு அல்லது செய்தி பாரதி இந்தப் பாடலை எழுதக் காரணமாக இருந்தது என்பன போன்ற விவரங்கள் இடம்பெற வேண்டும்; பாஞ்சாலி சபதம் என்றால், அதில் இடம்பெறும் பாத்திரப் பெயர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கவேண்டும். வாலிகன் யார், ஏகலவ்யன் யார், புருமி்த்திரன் யார், தேவலர் அசிதர் என்றெல்லாம் முனிவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடுகிறானே, அவர்கள் யார், அவர்கள் சொன்ன நூலில் சூது கண்டிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறானே, அவர்கள் இயற்றிய நூல் எது என்பன போன்ற விவரங்கள் எல்லாம் இடம்பெறவேண்டும் என்பவை அவருடைய பதிப்புத் திட்டத்தின் ஒரு பகுதி.

அடுத்ததாக, இப்போது பார்த்தோமே, காணி நிலம், கதலி மான், விருந்து, கொடி, தாழ்மரம் என்றெல்லாம் ரொம்பப் புரிந்துவிட்டது போன்ற பாவனையை நமக்கு ஏற்படுத்தும்--ஆனால் 'இதன் பொருள் என்ன' என்று யோசிக்கத் தொடங்கினால் குழப்பும்--சொற்களையெல்லாம் தொகுத்து, அகர வரிசைப்படுத்தி, ஷேக்ஸ்பியர் அகராதி, மில்டன் அகராதி என்றெல்லாம் இருப்பது போல, பாரதி அகராதி ஒன்று தொகுத்து, பாரதி கவிதைகளுக்குப் பின்னிணைப்பாகச் சேர்க்க வேண்டும். இன்ன சொல், இன்ன பாடலில் இன்ன இடத்தில் இன்ன பொருள் என்ற விவரங்கள் அதில் இடம்பெற வேண்டும் என்பது அவற்றில் முக்கியமான பகுதி. இதை யாரும் இன்னமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'சாத்திரங்கள் பல தேடினேன் - அங்கு - சங்கையில்லாதன சங்கையாம்' என்று ஒரே சொல்லை அடுத்தடுத்து இரண்டு வேறு பொருள்களில் பயன்படுத்துவது--திருவள்ளுவர் செய்யும் சொல்விளையாட்டைப் போல--பாரதிக்கும் வழக்கம்தான். முதல் சங்கைக்குக் கணக்கு என்றும் இரண்டாவது சங்கைக்கு சந்தேகம் என்றும் பொருள் கொள்ளவேண்டும். 'நான் தேடின சாத்திரங்களில் கணக்கற்றவை ஐயத்தக்கு உரியவையாக இருக்கின்றன' என்பதைத்தான் 'சங்கையில்லாதன சங்கையாம்' என்கிறான் என்பதை ஒரு சாதாரண வாசகன் புரிந்துகொள்ள வேண்டுமல்லவா? 'தொல்லை வினைதரு தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே' என்பதில் உள்ள இரண்டு தொல்லைக்கும் இரண்டு வேறு பொருள். இப்படி, பாரதியின் சொல்லடங்கல் தனியாகத் தயாரிக்கப்படவேண்டும் என்பது அவருடைய திட்டம்.

சொல்லவும், கேட்கவும் மிக எளியது போலத் தோன்றுகின்றன அல்லவா? இந்தியாவில் கணினி அறிமுகமானது 1985க்குப் பிறகு. பரவலானது 2000த்துக்குப் பிறகு. நாம் பேசிக்கொண்டிருக்கும் காலகட்டமோ, விண்டோஸ் அறிமுகமே ஆகாத ஒரு காலம். டாஸ் நிரல்கள் மட்டும் இருந்தன. 1990 என்று நினைவு. இதைப் பற்றி அவர் விவாதித்துக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட தொழிலதிபர் ந. மகாலிங்கம் அவர்கள், ஆசிரியரை அழைத்து, ஒரு லட்சம் ரூபாய் தருவதாக வாக்களித்தார். 'உடனடியாக உங்களுக்குத் தேவைப்படும் தளவாடங்கள், உதவியாளர்களை நியமனம் செய்துகொண்டு வேலையைத் தொடங்குங்கள்' என்றார். ஆனால், ஆசிரியருக்கென்று சில உறுதியான போக்குகள் உண்டு. 'எதுவரையில் இந்தத் திட்டத்தின் அடிப்படை வேலைகளைச் செய்துகொண்டு, தயார் நிலைக்கு நான் வரவில்லையோ, அதுவரையில் பணத்தைத் தொடமாட்டேன்' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். வேறு யாராவது அந்த இடத்திலிருந்திருந்தால் நடந்ததே வேறாக இருந்திருக்கும். இதைத் தொடர்ந்து சில பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் கூட்டி ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் கலந்துகொள்ளும் பேறு எனக்கும் கிடைத்தது. அப்போதிருந்த வேர்ட்ஸ்டார் முதலான செயலிகளில் எப்படி indexing செய்யப்படுகிறதோ, அப்படிக் கணினியைப் பயன்படுத்தி இந்தப் பணியை நடத்தி முடிப்பதற்கான அடிப்படை அணுகுமுறைத் திட்டங்களை நான் வகுத்துக் கொடுத்தேன். பாரதி பாடல்களை சாரியை சந்தி விகாரம் பிரித்து் (தேயத்தே என்றால் தேயம் அத்து ஏ என்று பிரிப்பது) கணினியில் ஏற்றிவிட்டால், வேண்டியபடியெல்லாம் தேடி எடுப்பது சாத்தியமாகும் என்பதையும் என் திட்டத்தின் ஒருபகுதியாகக் குறிப்பிட்டிருந்தேன். மீண்டும் சொல்கிறேன், இவையெல்லாம் நடந்தது 1990ம் வருடம் தமிழ் எழுத்துருக்களே அறிமுகமான நிலையிலும், மிகமிக ஆரம்ப நிலையிலும் இருந்தன. எனவே, முதலில் சென்னை திருவான்மியூரில் உள்ள கணினிப் பதிப்பகம் ஒன்றை அணுகினோம். அகராதி வரையில் வெளியிட்டவர்கள் என்பதால் அவர்களுடைய அனுபவமும் இதற்கு உதவும் என்று நம்பினோம். இப்படிப் சொல்சொல்லாகப் பிரித்துக் கொடுப்பது எங்களுடைய வேலை; அதைக் கணினியில் தமிழ் எழுத்துருவாக ஏற்றுவது அவர்கள் வேலை என்று முதலடி எடுத்துவைத்தோம். ஒருவார காலம் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னால் இந்தப் பணிக்கு அவர்கள் கேட்ட தொகை (இருபதாண்டுகளுக்குப் பிறகு இன்றைய சூழலில்) ஏழெட்டு வருட அனுபவமுள்ள மென்பொருள் பொறியாளர் (இந்தியாவில்) ஒருமாத சம்பளமாகப் பெருகின்ற தொகை. இருபதாண்டுகளுக்கு முன்னால் 'சொத்தை எழுதிவை' என்பார்களே, அப்படிப்பட்ட தொகை அது. அதற்கும்மேல் இன்னோர் அதிர்ச்சியையும் கொடுத்தார்கள் அவர்கள். 'வன்பிரதியை மட்டும்தான் தரமுடியும்; மென்பிரதியைத் தரமுடியாது' என்பது அவர்கள் விதித்த நிபந்தனை.

அதாவது, உட்கார்ந்து, சொல்சொல்லாகப் பிரித்து, எந்தச் சொல் எந்தப் பாடலில் வருகிறது என்ற மலையைப் புரட்ட வேண்டியது எங்கள் வேலை. அந்த மலையைப் புரட்டியபிறகு, அதைப் புகைப்படமெடுக்கிற 'மிகக் கடினமான' வேலை அவர்களுடையது. அப்படிச் செய்தாலும், எங்களுக்கு வன்பிரதி (காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட hard copy) மட்டும்தான் கிடைக்கும். கணினியில் இட்டுப் பயன்படுத்தக்கூடிய மென்பிரதி (soft copy) கிடைக்காது. அதை அவர்கள் வைத்துக்கொள்வார்கள். பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது சொல்லாமலேயே குழந்தைக்குக்கூட விளங்கும். 'எழுந்திருங்கள் ஹரி...' என்றவாறே கிளம்பிவிட்டார் ஆசிரியர். 'இந்தப் பணிக்குக் கணினியைப் பயன்படுத்தினால், பிற்காலத்தில் பலவகைப்பட்ட ஆய்வுகளுக்கு இந்த மென்பிரதியைப் பயன்படுத்தலாம்' என்ற எண்ணத்திலிருந்த எனக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. மென்பிரதி இல்லாமல் இந்தத் திட்டத்தை என்ன செய்வது? அப்போதோ, தமிழுக்கு எழுத்துரு கூடச் சரிவர அமைந்திராத நேரம். இருவரும் சோர்ந்து, மனமுடைந்து திரும்பினோம். கணினியாக்கல் என்பது இந்தப் பதிப்புத் திட்டத்தில் வெறும் வரைபடம் மட்டும்தான். இதை அடிப்படையாக வைத்து ஏராளமான கட்டுமான வேலை செய்தாக வேண்டியிருந்தது. கட்டுமான வேலையை எளிதாக்கப் பார்த்தால், வரைபடம் வரையும் வேலையில் பெரும்பகுதியை நாங்கள் செய்துவிட்ட பிறகு, அதற்கு விண்மீனைப் பறித்தெடுக்கும் கூலியைக் கேட்டால் என்ன செய்வது. என்னதான் நா. மகாலிங்கம் அவர்கள் உதவி செய்தாலும், செலவுக்கு ஓரளவி்ல்லையா? நாம் மெலியார் என்றல்லவா நினைத்துவிட்டார்கள்? இல்லாவிட்டால் இப்படியொரு எளிய வேலைக்கு இவ்வளவு கடினமான நிபந்தனைகளை விதிப்பார்களா? வன்பிரதியை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது, என்ன செய்ய முடியும்? எனக்கு மனம் நொறுங்கியே போய்விட்டது.

'விடமாட்டேன். கவலைப்படாதீங்க' என்றார். இன்னொரு கணினி நிறுவனத்தாரிடம் போகலாம் என்கிறார் போலிருக்கிறது. அவருடைய திட்டமோ மகேந்திர பர்வதத்திலிருந்து இலங்கைக்குள் தாவிக்.குதித்த அனுமன் மேற்கொண்ட அளவுக்கு 'மிக எளிய' முயற்சியாக இருந்தது. 'செய்கிறேன்' என்று புன்னகைத்தார்.

மேருவைப் பறிக்க வேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின்
நீரினைக் கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின் பல வினைச் சில சொல் ஏழாய்!
யார் எனக் கருதிச் சொன்னாய் இராவணற்கு அரிது என்?' என்றான்


என்று கேட்ட ராவணன் நினைவுதான் வந்தது எனக்கு. அவர் குணத்தால் ராவணன் அல்லர் என்பது ஒன்றுதான் வித்தியாசம். அவர் மேருவைப் பறித்த கதையைச் சொல்கிறேன்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com