மா. கமலவேலன்
இந்தியாவில் புழங்கும் பலமொழிகளிலும் இருக்கும் சிறந்த இலக்கியங்களை இனங்காணவும், அவற்றின் படைப்பாளிகளை கௌரவிக்கவும், நல்ல நூல்களை மொழிபெயர்த்துப் பிற மொழிப் பிரதேசங்களுக்குத் தரவும் என்று இவ்வாறு ஒரு தேசம் தழுவிய பரந்த நோக்கத்தோடு உருவான அமைப்பு சாஹித்திய அகாடமி. 1954லிருந்து இயங்கி வரும் இந்தத் தேசீய இலக்கிய அமைப்பு முதன்முதலாக 2010ல்தான் சிறுவர் இலக்கியத்துக்கென்று விருதை ஏற்படுத்தியது என்றால், அதை அகாடமியின் குறைபாடு என்று கொள்வதைவிட, இந்திய மொழிகளில் சிறுவர் இலக்கியத்தின் நிலைமையைக் காட்டுவதாகவே கொள்ளலாம். ஆனால், சிறுவர் இலக்கியத்துக்காக 'பால சாஹித்திய புரஸ்கார்' என்ற விருது ஏற்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே அதைத் தமிழ் மொழிக்காகப் பெற்றிருக்கிறார் திண்டுக்கல்லில் வசிக்கும் மா. கமலவேலன்.

ஜனவரி 1, 1943 அன்று அப்போதைய நெல்லை மாவட்டத்திலிருந்த தூத்துக்குடியில் பிறந்தார் கமலவேலன். பெற்றோர் மாணிக்கவாசகம், சூரியவடிவு. கலை இலக்கிய விஷயங்களில் கடும்போட்டி போடும் மாவட்டங்களில் ஒன்றான நெல்லையில் பிறந்த இவர், கல்வி கற்றது, மற்றொன்றான தஞ்சையில். 40 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் வாழ்ந்து வரும் இவர், ஆசிரியப் பணி புரிந்து, ஓய்வு பெற்றிருக்கிறார்.

இவரது முதல் சிறுகதை 1965ஆம் ஆண்டு, முதுபெரும் எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'பிரசண்ட விகடன்' இதழில் வெளியானது என்பதை இன்றைக்கும் புத்துணர்வோடு குறிப்பிடுகிறார் கமலவேலன். “சிறுகதைகள் என் உயிர்மூச்சு' என்று அவர் சொல்லத் தயங்கவில்லை. பிரசண்ட விகடன் குடும்பத்தைச் சேர்ந்த 'ஆனந்த போதினி'யில் தொடர்ந்து இலக்கியக் கட்டுரைகள் எழுதிவந்துள்ளார்.

சிறுவர் இலக்கியம் படைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட கமலவேலன் கண்ணன், கோகுலம், அரும்பு ஆகிய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். தவிர திருச்சி, மதுரை வானொலி நிலையங்களின் 'சிறுவர் பூங்கா'வுக்காக உரைச்சித்திரம், நாடகங்கள் எழுதி வழங்கியுள்ளார். விண்வெளி விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன் ஒய்.எஸ். ராஜன் இணைந்து எழுதிய 'இந்தியா 2020' என்னும் நூலைச் சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கி எழுதியுள்ளார். இந்தத் தமிழ்ப் பதிப்பின் முன்னுரையைக் கலாம் அவர்களே எழுதியுள்ளார்.

1970களில் நா. பார்த்தசாரதி நடத்திய இலக்கிய இதழான தீபத்தில் சிறுகதைகள் வெளியாகத் தொடங்கின. அதில் வெளியான 'ஆடு ஒன்று அழைக்கிறது' என்ற சிறுகதை 'இலக்கியச் சிந்தனை'யின் பாராட்டைப் பெற்றது. அப்போது தொடங்கிய இலக்கியப் பயணம் பல பத்திரிகைகளிலும் இன்றுவரை தொடர்கிறது. கலைமகள், கல்கி, குங்குமம், குமுதம், கண்ணதாசன், இலக்கிய பீடம், அமுதசுரபி, குமுதம் ஜங்ஷன், ஆனந்த விகடன், சாவி, இதயம் பேசுகிறது, தமிழரசி என்று இவரது எழுத்துக்களைப் பிரசுரித்த, பிரசுரிக்கும் பத்திரிகைகளின் பட்டியல் நீள்கிறது. குங்குமச் சிமிழ் மாத இதழில் குறுநாவல் ஒன்றும் எழுதியுள்ளார். 'சாவி' நடத்திய மாதச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றுள்ளார். கண்ணதாசன் இதழில் இவர் எழுதிய 'ஆண்டாள் கவிராயர்' கட்டுரைத் தொடர் குறிப்பிடத் தக்கதும், பெரிய வரவேற்பைப் பெற்றதும் ஆகும்.

சிறுகதைகளின் காலம் தேய்ந்துபோன போதும், புனைவிலக்கியமல்லாத நூல்களை எழுதத் தயங்கவில்லை கமலவேலன். இவர் சிறுவர்களுக்காக எழுதிய முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் குறிப்பிடத் தக்கவை. கே.ஆர். நாராயணன் வாழ்க்கைச் சரித நூல் ஒரே சமயத்தில் தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதிப்புக் கண்டது. “பிற நூல்களைப் படித்துவிட்டு மட்டும் நான் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில்லை. அவர்களுடைய ஊர்களுக்குச் சென்று உற்றார், நண்பர்கள் ஆகியவர்களோடு உரையாடிய பின்னரே எழுதுவது என் வழக்கம்” என்கிறார் உழைக்க அஞ்சாத கமலவேலன்.

'பக்க பலம்' என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு கோவை அரசினர் கல்லூரியில் துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 'நம்பமுடியாத நல்ல கதைகள்', 'சிதையாத உண்மைகள்' ஆகியவை திருப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின் பரிசு பெற்றவை. 'நந்தவனப் பூ' என்ற சிறுகதைத் தொகுப்பு கோவை அமரர் லில்லி தேவசிகாமணி அறக்கட்டளைப் பரிசு பெற்றுள்ளது. தமிழ்நாடு கலை இலக்கிய மன்றமும் என்.சி.பி.எச். பதிப்பகமும் இணைந்து நடத்திய போட்டியில் பரிசு பெற்ற நூல் 'கல்லா மனம்'. இவரது சிறுகதை நூல்களை ஆய்வு செய்து 5 பேர் எம்.ஃபில். பட்டம் பெற்றுள்ளனர்.

திருச்சி, மதுரை வானொலி நிலையங்களுக்காகப் பல உரைச்சித்திரங்களை 1970 முதல் தொடர்ந்து எழுதி வருவதோடு பல குறுநாடகங்களையும், நீண்ட நாடகங்களையும் எழுதியுள்ளார். இவை 5 தொகுப்புகளாக வெளியாகியுள்ளன, ஆறாவது தொகுப்பு அச்சில் உள்ளது. இவரது நாடகங்கள் 'அகில இந்திய வானொலி நாடக விழா'க்களில் ஒலிபரப்பாகி உள்ளன.

காந்திகிராமத்தில் இயங்கி வரும் ஊரகப் பல்கலைக் கழகத்தைக் குறித்த 'அண்ணலின் அடிச்சுவட்டில்' என்ற உரைச்சித்திரத்தை மதுரை (பொதிகை) தொலைக்காட்சிக்காக இவரே பேட்டி கண்டு வழங்கியுள்ளார். தவிர 'பொதிகை'க்காக நூல் மதிப்புரைகளும் வழங்கியதுண்டு. கொடைக்கானல் பண்பலை வானொலியில் 'எழுதுவது எளிது' என்ற ஒருமணி நேர நிகழ்ச்சியில் நேரடியாக நேயர்களுடன் உரையாடல் நிகழ்த்தியுள்ளார்.

23 சிறுவர் நூல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 பல்சுவைத் தொகுப்புகள், 6 வானொலி நாடகத் தொகுப்புகள், 11 வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று தனது 67ஆம் வயதிலும் சளைக்காமல் எழுதிவரும் கமலவேலன் “எனது நினைவில் வாழும் இலக்கியப் பிதாமகர், வழிகாட்டி” என்று வல்லிக்கண்ணன் அவர்களைக் குறிப்பிடுகிறார். தீபம் நா. பார்த்தசாரதி, சாவி இருவருமே தனது எழுத்தார்வத்துக்கு ஊக்கம் தந்த மேதைகள் என்கிறார்.

“சிறுவர் இலக்கியம், பெரியோருக்கான படைப்புகள் என்று எல்லாவற்றையுமே ஒரே பெயரில் எழுதாதீர்கள்” என்று இவருக்கு அறிவுரை தந்தவர்கள் உண்டு. “அதனால் என்ன? சத்யஜித் ராய், ரவீந்திரநாத் தாகூர் போலப் பலரும் ஒரே பெயரில் எல்லா வயதினருக்கும் எழுதியதுண்டே. நான் அவர்களைப் போலப் பெரிய மேதையாக இல்லாமலிருக்கலாம், ஆனால் கமலவேலன் என்ற பெயரிலேயே எழுதுவதையே விரும்புகிறேன்” என்கிறார் இந்த நல்லாசிரியர் விருது பெற்ற சொல்லேருழவர். அறிவொளி இயக்கத்தின்கீழ் கிராமப்புறங்களில் முதியோர் கல்விக்காக உழைத்தமைக்காக இவருக்கு 'மால்கம் ஆதிசேஷையா' விருதும் தரப்பட்டுள்ளது.

தற்போது சாஹித்திய அகாடமியின் சிறுவர் இலக்கியப் பரிசைக் கமலவேலனுக்குப் பெற்றுத் தந்துள்ள சிறுவர் நாவல், 'அந்தோணியின் ஆட்டுக் குட்டி'. இது ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. ஒரு சாலைப் பாதுகாப்பு வாரவிழாவுக்குத் தலைமை தாங்கிய திரு. சி. சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். “சாலை விபத்துக்களில் பெரும்பாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலேயே இறக்கிறார்கள். வேலூர்-ஓசூர் சாலையில் நடைபெற்ற ஒரு கொர விபத்தில் இதை நான் நேரில் பார்த்தேன். அடிபட்டவர்களைத் தமது வாகனங்களில் ஏற்ற யாரும் முன்வரவில்லை. அப்புறம் நானே என் போலீஸ் ஜீப்பை வழியை மறித்து நிறுத்திக் கட்டாய உதவி பெற்றோம்” என்று கூறியதைக் கேட்ட கமலவேலனின் மனதில் இந்த நாவலுக்கான விதை விழுந்தது. “ஒரு கருத்துக் கிடைத்தால் நான் அவரசரமாக எழுதிவிடமாட்டேன். அப்படியே அதை மனதில் ஊறப்போடுவேன். சரியான காலத்தில் அது கனிந்து எழுதத் தகுந்ததாகும். அப்போதுதான் எழுதுவேன்” என்கிறார் தனது திடமான, அழகிய தமிழ் உச்சரிப்பில்.

இந்த நவம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் புதுதில்லியில் சிறுவர் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதாக “பால சாஹித்திய புரஸ்கார்” பெறும் மா. கமலவேலன் அவர்கள், மேலும் சிறப்பான நூல்களைத் தந்து, இன்னும் அதிக கௌரவங்களைப் பெறுவார் என்பதில் சற்றும் ஐயம் இல்லை.

மதுரபாரதி

© TamilOnline.com