கமலா ஹாரிஸ், அனு நடராஜன் என்னும் பெயர்கள் இன்றைக்கு அமெரிக்கத் தமிழ் வம்சாவழியினரின் வெற்றிப் பெயர்களாக ஒலிக்கின்றன. சென்ற இதழில்தான் இவர்களது நேர்காணல்களைப் பெருமிதத்தோடு தென்றல் வெளியிட்டது. இந்த இதழ் இவர்களது வெற்றியைப் பறைசாற்றுகிறது. அதேபோல டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன் (பார்க்க: தென்றல், ஆகஸ்ட் 2009) கனெக்டிகட் மாகாண அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியல், பொதுவாழ்வு, அறிவியல், இலக்கியம், கலைகள் என்று எல்லாத் துறைச் சாதனையாளர்களையும், வயது வேறுபாடின்றி இனம்கண்டு, தேடிப்போய்ப் பெருமைப்படுத்தியுள்ளது தென்றல், சென்ற பத்து ஆண்டுகளில்.
விளையாட்டுப் போல ஓடிவிட்டன பத்து ஆண்டுகள்! தென்றல் வந்த வழியைத் திரும்பிப் பார்க்கச் சுவையாக இருக்கிறது. எத்தனை பேரின் உழைப்பு இதில். எல்லோருமே எதிர்பார்ப்பு இல்லாமல் செய்கிறவர்கள்தாம். சளைக்காமல் எழுதுகிறவர்கள், மாதம் தவறாமல் தமக்கு வரும் தென்றல் கட்டுக்களைக் கொண்டுபோய் தத்தம் பகுதியில் உள்ள கடைகளில் வைத்து வருகிறவர்கள், விளம்பரதாரர்கள்; யாரைச் சொல்வது, யாரை விடுவது? ஆனால் தென்றல் குழுவினரின் விழிப்பான சேவையும் இதில் குறிப்பிடத் தக்கது. தரம் குறையாமல், சுற்றியுள்ள ஏராளமானவற்றில் எதைத் தருவது எதைத் தவிர்ப்பது என்னும் திண்டாட்டமான தேர்வில் மாதாமாதம் சலிக்காமல் ஈடுபட்டு, அட்டையோ மொழிநடையோ, சற்றும் அழகு குன்றாமல் வடிவமைத்து--ஓர் இதழைப் படைப்பதில்தான் எவ்வளவு சிரமம். ஆனால் வாசகரின் ஒரு நல்ல வார்த்தை அத்தனை சிரமத்தையும் மறக்கடித்துவிடும்.
ஆரம்ப காலத்தில் தென்றலின் பக்கங்களை நிரப்புவதே கடினமாக இருந்ததுண்டு. அப்போதும்கூட அதற்காகக் குப்பையால் தென்றல் பக்கங்களை நிரப்பியதில்லை. அப்போதிருந்தே ஆர்வம் குன்றாமல் எழுதிவரும் கதிரவன் எழில்மன்னன், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சரஸ்வதி தியாகராஜன், எல்லே சுவாமிநாதன், என்று பட்டியல் நீளும். அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் தம்மருகே நடக்கும் நிகழ்வுகளை விவரித்து எழுதி, படங்களோடு அனுப்பும் அன்பு உள்ளங்களின் உழைப்பினால்தான் ஏழு கடலுக்கு அப்பால் இந்தியக் கலாசாரம் எவ்வளவு செழித்து வளருகிறது என்பது வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. அது மட்டுமல்ல, ஒரு பகுதியின் புதுமையான நிகழ்ச்சிக் கருத்து வேறொரு பகுதியைச் சென்றடைந்து வளம் கூட்டுகிறது. அவர்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி.
வாசகரின் நல்லெண்ணம் என்ற வருவாயை மட்டுமே ஈட்டுகிற தென்றல் அதன் விளம்பரதாரர்களின் ஆதரவு மட்டும் இல்லாவிட்டால் பத்தாண்டைத் தொட்டிருக்கச் சாத்தியமே இல்லை. மெயில்பேக்/கோமளவிலாஸ் தர்மராஜ், பண்டிட் ரவிச்சந்திரன், Amex பத்ரு வலானி, பீமாஸ் செல்வராஜ் வேணுகோபால், நாச்சா சுப்பிரமணியன், நியூ இண்டியா பஜார் ஹேமந்த், மயூரியின் சம்பத்குமார், ஸ்ரீக்ருபாவின் விஷால் ரமணி என்று பலரும் தொடக்கத்திலிருந்தே தென்றலுக்குத் தோள் கொடுத்து நின்றிருக்கிறார்கள். இத்தனைப் பொருளாதாரச் சூறாவளியின் அலைக்கழிப்பிலும் தென்றல் காலூன்றி நிற்கிறதென்றால் இவர்களின் வலுவான ஆதரவுதான் காரணம். எல்லா விளம்பரதாரர்களுக்கும் தென்றலின் நன்றிகள்.
தமிழ்நாட்டு நாடகங்களை அமெரிக்க மண்ணில் அரங்கேற்றுவது என்ற தடத்தை மாற்றி, இங்கிருந்து தமிழ் நாட்டுக்குத் தனது நாடகங்களை ஆண்டுதோறும் கொண்டு சென்று நிரம்பி வழியும் அரங்குகளில் நடத்தி வரும் 'க்ரியா' தீபா ராமானுஜம் இந்த இதழின் சாதனை நாயகி. சிறுவர் படைப்புகளுக்காக சாஹித்திய அகாடமி வழங்கும் முதல் 'பால சாஹித்திய புரஸ்கார்' விருதைத் தமிழுக்காகப் பெற்றுள்ள மா. கமலவேலன் மற்றொரு சாதனையாளர். வலது கை பக்கவாதத்தால் தாக்கப்பட்ட போதும் இடது கையால் ஓவியம் வரைந்து, திறனை மீட்டெடுத்த மூத்த ஓவியர் கோபுலுவின் நேர்காணல் இந்த இதழை அணி செய்கிறது. சிறுகதைகள், முன்னோடி என்று வண்ணக் கலவையாக வந்து உங்கள் கரங்களை அடைகிறது இந்தப் பத்தாண்டு நிறைவுச் சிறப்பிதழ்.
வாசகர்களுக்குக் கோலாகலமான தீபாவளி வாழ்த்துகள். பண்டிகை நாளில் ஒருவருக்கேனும் உதவுங்கள். உண்மையான மகிழ்ச்சியை அடையுங்கள்.
நவம்பர் 2010 |