நாட்யா வழங்கிய 'பத்மா'
ஆகஸ்ட் 30, 2010, திங்களன்று சிகாகோவின் பிரபல நாட்யா டான்ஸ் தியேடர் Padma-The Evening Rose என்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை Jay Pritzker Pavilion (Chicago's Millennium Park) அரங்கில் நடத்தியது.

பிரம்ம கமலம் என்னும் அரிய மலர் நள்ளிரவில் ஒரே ஒருமுறை மலர்ந்து அன்றிரவே வாடிவிடுவது. தாமரை மலர்களிலேயே மிகச் சிறந்த மணம் கொண்டதான இந்த மலர், தூய்மை, இளமை, ஆறுதல், உயிர்ப்பித்தல் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுவது. விநாயகரின் தோற்றத்தை கதைக்கருவாக வைத்து பிரம்ம கமலத்தின் சிறப்புகள் இந்த நிகழ்ச்சியில் வெளிக்கொணரப் பட்டன. இந்தப் பூவின் தன்மைகளைக் குறியீடாகத் தன்னகத்தே கொண்ட 'பத்மா' என்ற நாட்டிய நாடகத்தை நாட்யாவின் கலை இயக்குனர் ஹேமா ராஜகோபாலன் வடிவமைத்துள்ளார். இதில் கிருத்திகா ராஜகோபாலன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

கிருத்திகாவின் அலாரிப்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து புஷ்பாஞ்சலியும் கணேச துதியும் இடம்பெற்றன. பாகவதத்தில் இடம்பெறும் 'காளிங்க நடனம்' தில்லானாவாக வழங்கப்பட்டது. அடுத்து, ஐரோப்பிய இசைவல்லுனர் ஷோபான் (Frederic Chopin) வடித்த ஷெர்ஸோவின் சில பகுதிகளுக்கு ஆடிய நடனம் புத்துணர்வைத் தந்தது.

மேலும் விவரங்களுக்கு: www.natya.com

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com