சங்கல்பா நாட்டியப் பள்ளியின் 'யாத்ரா'
செப்டம்பர் 11, 2010 அன்று சங்கல்பா நாட்டியப் பள்ளியின் நிறுவனரும் இயக்குனருமான நிருபமா வைத்யநாதன் தயாரித்தளித்த 'யாத்திரை - ஒரு பயணம்' என்ற நாட்டிய நிகழ்ச்சி பாலோ ஆல்டோ கப்பர்லி அரங்கத்தில் நடந்தது. சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் ஃப்ரீமாண்டில் சங்கல்பாவை நிறுவி நடத்தி வருகிறார் நிருபமா.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இளைய மாணவிகள் கம்பீர நாட்டையில் மல்லாரி ஆடினார்கள். உற்சவ மூர்த்திகள் கோவில் பிரகாரங்களை வலம் வந்து கோவிலுக்குள் செல்லும் கண்கொள்ளாக் காட்சியைத் தத்ரூபமாகச் சித்திரித்தனர். அடுத்து வந்தது நந்தனாரின் 'தில்லைப் பயணம்'. நந்தனார் கண்ட அம்பலவாணரின் ஆனந்த நடத்தைக் கண்ணெதிரே கண்டனர் அரங்கத்தினர். வசந்தா ராகத்தில் 'நடனமாடினார்' பதத்திற்கு மாணவியர் ஆடிய நடனம் அற்புதம். நந்தனாரின் பயணத்தில் அடுத்து வந்த கட்டம் 'சிதம்பர தரிசனமா?' (முகாரி). நந்தனார் தில்லை வந்து சேர்ந்தபின் பாடும் 'வருகலாமோ ஐயா?' (மாஞ்சி). மாணவியரின் அபிநயம் நம்மைக் கண்கலங்க வைத்தது.

நிகழ்ச்சியின் மையமாக, வந்தது திருப்பதி யாத்திரை. பந்துவராளியில், மதுரை கிருட்டிணன் இயற்றிய 'எங்கும் நிறைந்த பரம்பொருளே' என்ற பத வர்ணத்திற்கு ஆதி தாளத்தில் ஆடி அப்நயித்தார்கள் நிருபமாவும், அவருடைய நான்கு மாணவிகளும். நாம் இருப்பது கலிபோர்னியாவிலா, திருப்பதி மலைப் பாதையிலா என்று பிரமிக்க வைத்தது இந்த நடனம். மேலும் வர்ணத்தில் நிருபமாவும் ரோஷினாவும் மாபலியையும், த்ரிவிக்ரமனையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள். இடைவேளைக்குப் பின் நிருபமா, சுஜாதா விஜயராகவனின் 'நீலகண்டரே வாரும்' என்ற பாட்டின் அபிநயத்தில் தற்கால மனிதனின் முன்னேற்றத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவைத் தைக்கும்படி ஆடினார். பெண் ஒருத்தி கயிலைக்குப் பயணித்து அன்று ஆலகால விஷத்தை விழுங்கிய திருநீலகண்டரை அணுகி, 'நீர் பூலோகத்திற்கு வந்து அங்குள்ள மாசுகளை சுத்தம் செய்தீரானால், உண்மையிலேயே உம்மால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்றும், மகாவிஷ்ணுவைவிட நீர்தான் உயர்ந்தவரென்றும் ஒப்புக் கொள்கிறேன்' என்று சிவபெருமானோடு உரையாடுவது வேடிக்கையாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது.

லதாங்கியில் அமைந்த தில்லானா உழைப்பும் உறுதியும் முன்னேற்றப் பயணத்தின் இன்றியமையாத அம்சங்கள் என்பதைச் சித்திரித்தது.

முடிவாக வந்த 'கண்டு கொண்இருக்கும் ஜனங்களே ' (ராகமாலிகை) என்ற மலையாளப் பாட்டுக்கு வாழ்க்கையின் நிரந்தரமற்ற தன்மையை உணராத மானுடன் கொள்ளும் பேராசைகளையும் பொறாமைகளையும் படம் பிடித்துக் காட்டினார் நிருபமா.

ஆஷா ரமேஷ் (பாட்டு), வித்யா பாலன் (நட்டுவாங்கம்), என். நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோரின் பங்களிப்பு வெகு சிறப்பு.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com