சஞ்சய் சந்திரசேகரன் மிருதங்க அரங்கேற்றம்
செப்டம்பர் 12, 2010 அன்று சர்வலகு கலா நிலையம் சார்பில் மாஸ்டர் சஞ்சய் சந்திரசேகரனின் மிருதங்க அரங்கேற்றம் ஃப்ரிமான்ட் ஓலோனி கல்லூரி ஜாக்ஸன் தியேட்டர் அரங்கில் நடைபெற்றது. இசைப்பேரொளி நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களின் கச்சேரியில் சஞ்சய் அரங்கேறியது பெருமைதரும் ஒன்றாகும். ஸ்ரீஹரிநாத் (துணைப் பாட்டு), முல்லைவாயில் சந்திரமௌலி (வயலின்), கார்த்திக் வெங்கட்ராமன் (கஞ்சிரா) எனப் பிரபல வித்வான்கள் கச்சேரிக்குத் துணைநின்றனர். பைரவி வர்ணத்தில் இதமாக ஆரம்பித்த கச்சேரி, கார்த்திகேயனைக் குழைவாக அழைத்ததுடன் களைகட்டியது. தொடர்ந்த தனியில் சஞ்சயின் தேர்ச்சியும் அவரது குரு ரமேஷ் ஸ்ரீனிவாசனின் உழைப்பும் தெரிந்தது சிறப்புரை ஆற்றிய கிளீவ்லண்ட் சுந்தரம் அவர்கள் கூறியதுபோல் ஆழ்ந்த ஈடுபாடு, ஒழுங்கு, பக்தி எல்லாமே சஞ்சயிடம் நிறைந்து காணப்பட்டது. பின்னர் தொடர்ந்த சங்கராபரண ராகம் தானம் பல்லவி இனித்தது. பல்லவியில் சந்தானகோபாலனும் ஸ்ரீ சந்திர மௌலியும் பரிமாறிக் கொண்ட கல்பனா ஸ்வரங்களாகட்டும் அதற்குச் சரியாகச் சஞ்சயும், கார்த்திக்கும் அனாயாசமாக வாசித்ததாகட்டும், எல்லாம் அற்புதம்.

தொடர்ந்தது கச்சேரியின் சிறப்பு அம்சமான சஞ்சயின் தனி ஆவர்த்தனம். சதுஸ்ர நடையில் ஆரம்பித்துப் பின்னர் திஸ்ர நடையில் பல பரிமாணங்களில் வாசித்து மிஸ்ர நடையில் `குறைப்பு'டன் முடிந்தது. அதன் சிறப்பு என்னவென்றால், அன்று வாசித்த `குறைப்பு' 'சதுஸ்ர நடை மிஸ்ர குறைப்பு' என்று விசேஷமாக அழைக்கப்படுவதாகும். இறுதியாக சதுஸ்ர நடையில் மோரா கோர்வையுடன் தனி முடிந்தது. தனி முழுவதும் சஞ்சயும் (மிருதங்கம்) கார்த்திக்கும் (கஞ்சிரா) சரளமாகப் பரிமாறிக் கொண்டனர். மிருதங்க அரங்கேற்றத்திற்கு உச்சகட்டமாக அமைந்தது, சஞ்சய், யதி பற்றிக் கொன்னக்கோலுடன் கொடுத்த விளக்கி அதை வாசித்துக் காட்டியது.

முடிவில் உரை ஆற்றிய மிருதங்கமேதை திருச்சி சங்கரன், சர்வலகு பாணியை விளக்கி, அது இன்றைய கச்சேரிகளில் ஆங்காங்கே அமைந்திருப்பதைப் பாராட்டினார். இதன் பெருமை சர்வலகுவின் கர்த்தாவான சங்கீத கலாநிதி வேலூர் ராமபத்ரன் அவர்களையும் அதைத் தொடர்ந்து ஸர்வலகு கலா நிலையம் மூலமாகப் பரப்பி வரும் ரமேஷ் ஸ்ரீனிவாசன் அவர்களையுமே சாரும். சஞ்சயின் பெற்றோர்களான சந்திரசேகரன், சுதா சந்திரசேகரன் தம்பதியரின் கடும் உழைப்பும் மகனுக்குத் தந்த ஊக்கமும் பாராட்டத் தக்கன.

மஹாதேவன் ஸ்ரீதரன்,
ஃப்ரீமான்ட்

© TamilOnline.com