ஹன்ட்ஸ்வில்லில் சேலம் ஸ்ரீராம் கச்சேரி
செப்டம்பர் 18, 2010 அன்று சேலம் ஸ்ரீராம் அவர்களின் இசைக் கச்சேரி, அலபாமாவின் ஹன்ட்ஸ்வில் நகரத்தில் HCCNA (Hindhu Cultural Center of North Alabama) கோவில் அரங்கத்தில் நடைபெற்றது. HICPA (Huntsville Indian Cultural Performing Arts) ஏற்பாடு செய்திருந்த இக் கச்சேரியில் திரு. பிரசாத் மந்திரரத்தினம் வயலினும், டாக்டர். ராஜப்பா ஏகாம்பரம் மிருதங்கமும் திறம்பட வாசித்தனர்.

ஹம்சத்வனி வர்ணத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்த ஸ்ரீராம், அடுத்து புரந்தரதாஸர் கிருதிக்கு எடுத்துச் சென்ற விதம் அருமை. வேகமாகவும், விறுவிறுப்பாகவும் துக்கடாக்களை இடையிடையே பாடியது, ஸ்ரீராமின் சங்கீத அனுபவத்தையும், பயிற்சியையும் உணர்த்துவதாக இருந்தது. சுத்த தன்யாசியை விஸ்தாரமாக ஆலாபனைக்கு எடுத்த ஸ்ரீராம் ரசிகர்களை இசைப் பிரவாகத்தில் கிறங்கடித்தார். அவருக்கு ஈடாக பிரசாத் வயலினைக் கையாண்டார். ஆங்காங்கே உதிர்ந்த ஹிந்துஸ்தானி சங்கதிகள் அவருக்கே உரித்தான தனித்திறமையாகும்.

யாருக்கும் சளைத்தவர் நானல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார் டாக்டர். ராஜப்பா. மிருதங்கத் தனியாவர்த்தனத்தில் பார்வையாளர்களை எழுந்திருக்கா வண்ணம் கட்டிப் போடமுடியும் என்பதை இங்கும் நிரூபித்தார்.

ரஞ்சனி, ஹரி காம்போஜி ராக ஆலாபனைகள் நிரவலுடன் கூடியதாகக் கச்சேரிக்கு மெருகூட்டின. தில்லானா, ராகம், தானம், பல்லவியுடன், மங்களம் பாட, கச்சேரி நிறைவடைந்தது. நல்லதொரு நிகழ்ச்சியை வழங்கிய HICPA தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பாராட்டுக்கள்.

பிருந்தா ஐயர்,
ஹண்ட்ஸ்வில், அலபாமா

© TamilOnline.com