வெந்தயக்கீரை தொக்கு
தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை - 1 கட்டு
மிளகாய் வற்றல் - 6
வெந்தயம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் (அ) கடுகு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
திடீர் புளி - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வெந்தயக்கீரையைக் கழுவி இலைகளை உருவி ஒரு துணியில் உலர்த்தவும். அதைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் காய்ந்தபின் மிளகாய் வற்றல், 1 1/2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு, வெந்தயம் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு அதே எண்ணெயில் நறுக்கிய வெந்தயக்கீரை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்.

வறுத்த மிளகாய் உளுத்தம்பருப்பு வெந்தயத்தை, உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் ரவைபோலப் பொடித்துவைத்துக் கொள்ளவும். பின்னர் வதக்கிய கீரையைப் புளியுடன் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல் மையாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் மீதி எண்ணெயை விட்டு மிதமான தீயில் கடுகு, மீதி உள்ள உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துக்கொண்டு, அரைத்த கீரை விழுதையும் பொடித்த மிளகாய்க் கலவையயும் போட்டுச் சுருளக் கிளறவும். தேவையான காரத்திற்கேற்ப மிளகாய் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.

சற்றே கசப்பாக இருந்தாலும் தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com