சுஷ்மிதா ஸ்ரீகாந்த் பரதநாட்டிய அரங்கேற்றம்
செப்டம்பர் 25, 2010 அன்று, விரிகுடாப் பகுதியின் பிரபல 'லாஸ்யா' நடனப் பள்ளியில் பயிலும் செல்வி சுஷ்மிதா ஸ்ரீகாந்தின் அரங்கேற்றம், சான்டா க்ளாரா நகரில் மிஷன்சிடி சென்டர் அரங்கில் நடந்தது. தேர்ந்த நடனக் கலைஞரும், லாஸ்யாவின் இயக்குனருமாகிய திருமதி வித்யா சுப்ரமணியன் அளித்த செம்மையான பயிற்சி சுஷ்மிதாவின் நடன அசைவுகளில் நன்கு தெரிந்தது. கம்பீர நாட்டையில் ஒலித்த மல்லாரியுடன் அரங்கேறிய சுஷ்மிதா, 'முதாகராத்த மோதகம்' என்ற விநாயகர் துதியுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார். தொடர்ந்து சங்கராசாரியர் இயற்றிய சிவபெருமானைப் போற்றும், 'நாகேந்திர ஹாராய' என்ற பஞ்சாட்சரத்திற்கு நடனமாடினார். பல கரணங்களைச் சிறப்பாக அபிநயித்தார். குறிப்பாக விக்னங்களை விலக்கும் விநாயகர், இடது பதம் தூக்கிய ஈசன், பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன், அமுதத்தை வர்ஷிக்கும் தேவி ஆகிய தெய்வங்களின் தோற்றங்களை மிக அழகாக அபிநயித்துக் காட்டினார். நடன நிகழ்ச்சியின் உச்சம் 'சாமிக்கு சரி எவ்வரே' எனும் சங்கராபரண ராக வர்ணம். பாஸ்கர சேதுபதி மன்னரின் புகழை அவர் மீது தீராக் காதல் கொண்ட நாயகி எடுத்துரைப்பதாக அமைந்த இந்த வர்ணத்திற்கு, நாயகியின் உணர்ச்சிகளை சுஷ்மிதா, அழகிய முகபாவங்களால் சிறப்பாக வெளிப்படுத்தினார். இதற்கு வித்யா சுப்ரமணியனின் நடன அமைப்பும் வெகு சிறப்பு.

மலர்ந்த புன்னகையும் கவர்ச்சியான கண்களும் சுஷ்மிதாவின் நடனத்துக்கு பெரும் பலம். கலைமாமணி எஸ்.கே. ராஜரத்தினம் அவர்களது இசையிலும் நடன அமைப்பிலும் உருவான கல்யாண வசந்தம் தில்லானா நிகழ்ச்சிக்கு நிறைவூட்டியது. திருமதி ஆஷா ரமேஷின் குரலில் ஒலித்த பாடல்கள் இசை விருந்தாக அமைந்தன. வித்யா சுப்ரமணியம் (நட்டுவாங்கம்), நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோரின் பக்கவாத்தியம் நடனத்திற்கு மெருகூட்டின.

அருணா கிருஷ்ணன்,
சன்னிவேல், கலிபோர்னியா

© TamilOnline.com