'ஸ்ருஷ்டி' நாட்டியக் குழுவின் அமெரிக்க உலா
'ஸ்ருஷ்டி' நாட்டியக் குழுவினர் தமது நடனங்களை அமெரிக்காவின் பதினான்கு நகரங்களில் அரங்கேற்றி உலா வருகின்றனர். பரதநாட்டியம், ஒடிஸி, மணிபுரி ஆகிய மூன்றுவகை நடனங்களும் ஒருங்கே அந்தந்த நடனத்தில் கைதேர்ந்தவர்களால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது இந்நாட்டிய விழா. ஒரிகன், ஐடஹோ, டெக்ஸஸ், கலி ஃபோர்னியா, இல்லினாய்ஸ் போன்ற பல ஊர்களில் மேடையேறிய பின்னர், இறுதி நிகழ்வை அக்டோபர் 10 அன்று சிகாகோ விலுள்ள லெமாண்ட் திருக்கோவிலில் நிகழ்த்தவுள்ளனர். ஸ்ருஷ்டியின் நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயந்தி ராமன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக போர்ட்லேண்ட், ஒரிகானில் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். இக்குழுவின் பிரதான நடன வடிவமைப் பாளர் டாக்டர். ஜெயந்தி. அவருடன் பரதநாட்டிய வல்லுனரான ஷ்ரத்தா பாலு, ஒடிஸி வல்லுனர் மதுஸ்மிதி மொஹந்தி மற்றும் யுதிஷ்டர் நாயக், மணிப்புரி தவில் நிபுணர்களான புரோஜன் சிங், டோம்பா சிங் ஆகியோர் உட்படப் பத்துப் பேர் கொண்ட குழுவினர் இந்தக் கலைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காந்தி சுந்தர்,
சிகாகோ

© TamilOnline.com