கடந்த ஜூன் மாதம் சான் ஹோஸேயிலிருந்து கிளம்பி சிங்கப்பூர் வந்து தங்கிவிட்டு, ஜூலையில் சென்னைக்குப் புறப்பட்டோம். என் பெண் எங்களைச் சென்னைக்கு ஏற்றிவிட சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு வந்திருந்தாள். புக்கிங் கவுண்டரில் இருந்த பெண்மணி எங்கள் டிக்கெட்டைப் பார்த்து விட்டு 2 பெட்டிகளைத்தான் நீங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியும் என்றார். எங்களுக்கு அதிர்ச்சி. நாங்கள் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டோக்கியோ வழியாக சிங்கப்பூர் வந்த டிக்கட், போர்டிங் டிக்கட் யாவும் காண்பித்து, 4 பெட்டிகளைச் சட்டப்படி எடுத்துச் செல்லலாம் என்றால் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. உடனே என் பெண் ஆபீஸ் வேலையாக டோக்கியோ சென்றிருந்த தன் கணவரைக் கூப்பிட்டுப் பேசிவிட்டு, டியூடி மானேஜரையும் நேரில் பார்த்துப் பேசிவிட்டு வந்தாள். கிட்டத்தட்ட 40 நிமிடம் காத்திருந்தோம். என் பெண் திரும்பி வந்ததும், உங்கள் 4 பெட்டிகளையும் அனுமதிக்கிறோம். தாமதத்துக்கு வருந்துகிறோம் என்றனர். அப்பாடா என்று பெருமூச்சுடன் கிளம்பினோம்.
நடந்த வாக்குவாதம் இந்தியா செல்லும் வழியில் சிங்கப்பூரில் தங்கிவிட்டு 2, 3 நாளில் கிளம்பினால் லக்கேஜ் யாவும் எடுத்துச் செல்லலாம். அதிகம் தங்கினால் தலைக்கு 1 பெட்டிதான் என்றனர். என் பெண் அவர்களிடம் வாதாடி 10 வருடமாக எனது கணவர், நான், குழந்தைகள் உங்கள் ஏர்லைன்ஸில் தான் பயணம் செய்கிறோம் என்று கூறியதற்கு, நீங்கள் கோல்டு கார்ட் மெம்பர் என்பதால் மேலும் ஒரு பெட்டியை அனுமதிக்கிறோம்; 3 பெட்டிகள் எடுத்துச் செல்ல முடியும்; ஒரு பெட்டியை நீங்கள் எடுத்துச் சென்றுவிடுங்கள் என்று சொல்ல, உடனே என் பெண், நாங்கள் சிங்கப்பூரில் ஆபீஸ் வேலை ஒப்பந்தம் 10 வருட காலம் முடித்துவிட்டுத் திரும்ப யூ.எஸ். போகப் போகிறோம். என் பெற்றோரின் பெட்டியை யார் எடுத்துச் செல்வார்கள்? சிங்கப்பூரின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவித்து ஜி.எஸ்.டி. சலுகையும் கொடுத்து உதவுகிறீர்கள். இனிமையான நினைவுகளுடன் திரும்பிச் செல்லும் நேரத்தில் என் வயதான பெற்றோர்களிடம் கெடுபிடி செய்தால் பயணமே வருத்தத்தை அதிகரித்துவிடும் என விவாதித்த பின்னர் 4 பெட்டிகளையும் அனுமதித்தனர்.
சென்னை விமான நிலையத்திலும் ஒரு வேடிக்கை. கஸ்டம்ஸ், இமிக்ரேஷனை முடித்து விட்டு, எங்கள் பெட்டிகளை இறக்கித் தள்ளுவண்டியில் எடுத்து வந்த பையன் என்னிடம், உங்கள் பெட்டியில் சிங்கப்பூரிலிருந்து தங்கம், எலக்ட்ரானிக் சாமான் கொண்டு வந்திருக்கிறீர்களா எனக் கேட்டான். காரணம், எனது கறுப்பு நிறப் பெட்டியில் வெள்ளை சாக்பீஸால் குறியிடப் பட்டிருந்தது. ஸ்கேன் பண்ண ரெடியாக நின்று கொண்டிருந்த பெண்மணி, என்னை பெட்டியைத் திறக்கச் சொன்னதும், ஸ்கேனில் பார்த்தபோது எனக்குப் புரிந்து விட்டது. என் பெண் கல்யாணத்தின் போது நாங்கள் வாங்கித் தந்த ஈயச் சொம்பை உபயோகிப்பதே இல்லை என்று கூறி என்னிடம் திரும்பத் தந்து விட்டாள். அதை டவலில் சுற்றி வைத்திருந்ததைப் பார்த்ததும் அந்தப் பெண்மணிக்கே சிரிப்பு வந்து விட்டது. தங்கம் கிராம் 2000 ரூபாயைத் தொடும் நிலை வந்திருக்கும்போது, யாரால் சொம்பு நிறையத் தங்கம் வாங்கி வர முடியும் என்றேன். அவளும் சிரித்தவாறே சிரமப்படுத்தியதற்கு மன்னிக்கவும் என்றாள். அப்பாடா என பெருமூச்சு விட்ட பின்னர், விமான நிலையம் விட்டு வெளியே வந்தோம்.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிபோர்னியா |