Irritable Bowel Syndrome என்று பரவலாக அறியப்படும் உணவுக் குழாய் உபாதை பற்றி இப்போது பார்க்கலாமா? அடிக்கடி மலச்சிக்கலும் வயிற்றுப் போக்கும் மாறிமாறி வந்து உடலையும் மனத்தையும் பாதிக்கும் நோய் இது. பெரும்பாலும் பெண்களை, குறிப்பாக இளம் வயதினரை, தாக்கும். முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட பெண்களை பாதிக்கும். சிறுவயதில் நோயின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றினாலும் வயதான பின்னரும் தொடரும். இதன் அறிகுறிகள்:
* மலச்சிக்கல் * வயிற்றுப்போக்கு * உப்புசம் அல்லதுத் வாயுத் தொந்தரவு * வயிற்றுத் தசைப்பிடிப்பு (abdominal cramps) * வயிறு வீங்குதல் (bloating)
இந்த அறிகுறிகள் மாறிமாறி வரலாம். ஒரு சிலருக்கு ஒரே ஒரு அறிகுறி பெரும்பாலும் இருக்கலாம். பலருக்குக் குறிப்பிட உணவுவகை சாப்பிட்டால் ஒருசில அறிகுறிகள் ஏற்படலாம். பெரும்பாலும் பால், தயிர், காபி போன்ற உணவு வகைகளும், வாயுவை அதிகமாக்கும் காய்கறிகளும் பருப்பு வகைகளும் இதைத் தீவிரமாக்கும். எந்ததெந்த உணவுப் பொருளைத் தவிர்க்க வேண்டும் என்பது அவரவர் நோயின் தன்மையை பொறுத்து மாறுபடும்.
நோயின் விசேடத் தன்மைகள் * இந்த நோய்க்குப் பின்விளைவுகள் மிகவும் குறைவு. * உடல் எடை குறைதல், இரத்தம் கலந்த பேதி, சத்துக்கள் குறைவாக உடலில் செல்லுதல் போன்ற பின்விளைவுகள் இந்த நோய்க்குக் கிடையாது. * பல சமயம், மன அழுத்தம் (mental stress) அதிகமானால் நோய் தீவிரமாகும். * இந்த நோயின் தீவிரம் திடீரென்று அதிகமாதலும் குறைதலும் குறிப்பிடத் தக்கவை. * மேற்கூறியபடி, இளம்பெண்களை அதிகமாகத் தாக்கும். வயதானவர்களுக்கு முதன்முறையாக இந்த உபாதை தோன்றுமானால் வேறு ஏதேனும் நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்வது அவசியம்.
நோயின் வகைகள் மேற்கூறிய அறிகுறிகளில், வாயுத் தொந்தரவும் உப்புசமும் பரவலாக காணப்படுகிறது. மலச்சிக்கலும் பேதியும் மாறிமாறி ஏற்படலாம். பலருக்கு இந்த அறிகுறிகள் உட்கொண்ட உணவைப் பொறுத்து மாறுபடும். வாயுப் பிரச்சனை உள்ளவர்கள் பருப்பு, பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளைத் தவிர்க்க வேண்டி வரும். இத்துடன் உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவையும் வாயுவை அதிகமாக்கும். பால் அல்லது தயிர் சாப்பிட்டால் பேதி ஏற்படுபவர்களுக்கு லேக்டோஸ் சகியாமை (Lactose intolerance) இருக்க வாய்ப்பு உள்ளது. வேறு சிலருக்குப் பால் கலந்த காபி, இனிப்பு மிட்டாய்கள், bubble gum ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படலாம். இவர்களுக்கு sorbitol இந்த உபாதையை ஏற்படுத்த வல்லது. பெரும்பாலும் உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனாலும் அதிக மன அழுத்தம் இந்த நோயைத் தலைகாட்டச் செய்யும்.
நோயைத் தவிர்க்கும் முறையும் தீர்வுகளும் இந்த நோயைக் கட்டுக்குள் வைக்கலாம். மன அழுத்தம் அதிகமாகாமல் உடற்பயிற்சி, யோகப்பயிற்சி முதலியவை இந்த நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும். சரியான உணவுப் பழக்கம் மிக அவசியம். அவசரடியாக வெற்றுத் தீனியைத் (junk food) தவிர்த்து சத்துள்ள உணவைச் சமைத்து உண்பது நல்லது. அவசர உலகில் உடனடியாக வேகும் ‘Quick fix' உணவுகள் உபாதையை அதிகமாக்கலாம். வேளாவேளைக்குச் சரியாக உண்பது அவசியம். எடை குறைக்க வேண்டும் என்று பட்டினி கிடப்பது நல்லதல்ல. நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை உண்பது நல்லது. மேலே கூறிய சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இவை தவிர, தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உணவு செரிக்கவும், மலச்சிக்கல் தவிர்க்கவும் இது உதவும். உணவில் நார்ப்பொருள் (fiber) போதிய அளவு இருப்பது உதவலாம். அதே நேரத்தில் சிலருக்கு இது வயிற்றுப்போக்கை அதிகரிக்கலாம். நார்ப்பொருள் என்பது இருமுனைக் கத்தி. அவரவர் உடலுக்கு ஏற்றவாறு இந்த நார்ப்பொருளின் அளவைச் சரிசெய்ய வேண்டும். அதிகமாக நார்ப்பொருள் உண்ணும்போது தண்ணீர் அதிகமாகக் குடிக்க் வேண்டும். இல்லையெனில் வயிற்று வலி, வாயு ஏற்படலாம். காய்கறிகள், பழங்கள், அவற்றின் தோல் ஆகியவற்றில் அதிக நார்ப்பொருள் உண்டு. தவிர, மருந்துக் கடைகளில் Fiber One போன்ற பெயர்களிலும் இவை கிடைக்கலாம்.
மருந்துகள் நோய் தீவிரமாகும்போது மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைப்பர். இவை பெரும்பாலும் உபாதையை நீக்கும் மருந்துகளாகவே உள்ளன. உதாரணத்திற்கு பேதி ஏற்பட்டால் Imodium, மலச்சிக்கல் ஏற்பட்டால் Metamucil போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். ஒருசில வேளைகளில் பெருங்குடல் வேகமாகச் செயல்படாமல் இருக்கவும், தசைப்பிடிப்பைக் குறைக்கவும் சில மருந்துகளைத் தருவதுண்டு. இந்த உபாதைக்கென்று சில மருந்துகள் இருந்தாலும் பின்விளைவுகள் காரணமாக இவற்றை அதிகமாக உபயோகிப்பதில்லை.
Probiotic என்று சொல்லப்படும் மாத்திரைகள் பெருங்குடலில் இருக்கும் நுண்ணுயிர்க் கிருமிகளைச் சரிபடுத்த வல்லவை. இவை ஒரு சிலருக்கு நல்ல நிவாரணம் கொடுக்கலாம். குறிப்பாக உடலில் மற்ற நோய்கள் காரணமாக antibiotics எடுத்துக் கொள்பவர்களுக்கு உணவுக்குழாய் உபாதை அதிகமாகாமல் இருக்க இந்த Probiotic உதவும்.
நல்ல உணவை, அளவாகச் சாப்பிட்டு, போதிய தண்ணீர் அருந்தி, உடற்பயிற்சி செய்து, மனத்தையும் உடலையும் நலமாக வைத்திருக்க வாழ்த்துக்கள்! மேலும் விவரங்களுக்குப் பார்க்க: mayoclinic.com
மரு. வரலட்சுமி நிரஞ்சன், கனெக்டிகட் |