பேராசிரியர் நினைவுகள்: கதலி முதல் காணி வரை
இப்போது, பாரதியின் சொல்லாட்சியில் இரண்டு வேறுபட்ட, எதிரெதிரான நிலைகளைப் பார்த்திருக்கிறோம். ஒன்று, கதலி என்ற மிக அரிய பயன்பாடு. மற்றது காணி என்ற மிகப் பரவலாக அறியப்பட்ட, ஆனால் பெரும்பாலும் 'இதன் பொருள் இன்னது' என்று உணர முடியாத, ஒரு நூறு ஆண்டுகளுக்குள் வழக்கொழிந்து போயிருக்கும் சொல்லாட்சி. கதலி என்ற சொல்லை 'ஒருவகை மான்' என்ற பொருளில், தமிழிலக்கியத்தின் நெடும்பரப்பில் யாருமே பயன்படு்த்தியதாகத் தெரியவி்ல்லை. இந்தச் சொல்லோடுதான் இத்தொடரின் முதல் கட்டுரை தொடங்கியது. இப்படி யாருமே பயன்படுத்திருக்காத காரணத்தால்தான், மிக அரிதினும் அரிதான பயன்பாடுகளையெல்லாம் தொகுத்து, ஏழு தொகுதிகளாக, வையாபுரிப் பிள்ளை போன்ற பேரறிஞர்களெல்லாம் ஒரு பெருங்குழுவாக அமைந்து, திரட்டி, வகுத்துத் தொகுத்துத் தெளிவுபடுத்தியிருக்கும் சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகனில்கூட 'ஒருவகை மான்' என்ற பொருள்விளக்கம் இடம்பெறாமல் போயிருக்கிறது என்பது வெளிப்படை. பாரதிக்கு முற்பட்ட இலக்கியம் வரையிலே தோய்ந்தெழுந்து தொகுத்த அப்படிப்பட்ட அறிஞர்களுடைய கண்ணில்கூட இந்தப் பொருளில் ஒரு பயன்பாடு, தமிழிலக்கியத்தில் சிக்கியிருக்கவில்லை. இருந்தால், விளக்கியிருப்பார்கள். லெக்சிகன் மட்டுமல்ல, தமிழில் மற்ற எந்த நிகண்டிலும் இந்தப் பொருள்விளக்கம் அகப்படவில்லை.

ஒரு கவிஞனின் சொல்லாட்சி, அவனுடைய கல்விப் பயிற்சியை எடுத்துக் காட்டும் உரைகல். ஒருவன் தெரிந்துதான் ஒரு சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறானா, அல்லது பொருளை விளங்கிக் கொள்ளாமலேயே, ஏதோ போகிற போக்கில் தன் காதில் விழுந்திருக்கும், கேள்விப்பட்டிருக்கும் சொற்களையெல்லாம் ஆண்டிருக்கிறானா என்ற தீர்மானத்துக்கு வருவதற்கான கருவிகளில் மிக முக்கியமானது அவனுடைய சொல்லாட்சி (usage). ஒரு கவிஞன் ஆண்டிருக்கும் சொற்களின் அடிப்படையில்தான் அவனுடைய சொல்லடைவு (vocabulary) எப்படிப்பட்டது, அதன் வீச்சு எப்படிப்பட்டது என்பவற்றை விளங்கிக்கொள்ள முடியும். மிகச் சில கவிஞர்கள் மட்டுமே இப்படிப்பட்ட மிகமிக அரிதிலும் அரிதான சொற்களையும் அறிந்து, அவற்றைப் பயன்படுத்தவும் செய்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் yclept என்றொரு மிக அரிய சொல் உண்டு. 'அழைக்கப்படுவதான; பெயரை உடைய (called, named) என்ற பொருளை உடைய சொல் அது. ஆங்கில இலக்கியத்தில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கும் மிகமிக அரிய கவிஞர்களில் ஒருவராக மில்டனைச் சொல்கிறார்கள். மகிழ்ச்சியைப் பற்றி அவன் இயற்றிய லாலக்ரோ (L'Allegro) என்ற கவிதையில், மகிழ்ச்சிக்கு உரிய தேவதையை வரவேற்கும்போது

But com thou Goddes fair and free,
In Heav'n yclept Euphrosyne,
And by men, heart-easing Mirth....

'சொர்க்கத்தில் யூஃப்ரோஸைன் என்று அறியப்படும் தேவதையே, வா' என்று அழைக்கும்போது அவன் பயன்படுத்தியிருக்கும் இந்த அரிய ஆட்சி, மில்டனுடைய கல்விப் பெருமைக்குச் சான்றாக நிற்கிறது என்று ஆங்கில இலக்கிய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட மிக அரிய ஆட்சியல்லவா இந்த 'கதலி' என்ற சொல்! இப்படி, தமிழிலக்கியத்தில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்படாத ஒரு சொல்லை பாரதி எங்கிருந்து அறிந்தான் என்ற கேள்வி எழுகிறதல்லவா? இந்தச் சொல்லுக்கு 'இருபது அங்குலமே வளர்வதும், சேற்றில் வாழ்வதுமான ஒருவகை மான்' என்று நாநார்த்த தீபிகை விளக்குகிறது. இதையும் எனக்குச் சொன்னவர் ஆசிரியர் நாகநந்திதான். ஆனால், அவர் சொன்ன விளக்கத்தோடு என் தேடல் முடிவடையவில்லை. மஹாபாரதத்தில் உள்ள அரிய பெயர்ச்சொற்களின் பட்டியலில் (Mahabharata Unique Noun List) இந்த 'கதலி' இடம்பெற்றிருக்கிறது. மஹாபாரதம் முழுமையிலும் ஒரே ஓரிடத்தில் மட்டுமே இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தப் பட்டியல் சொல்கிறது. (காண்க: ancientvoice.wikidot.com). பாஞ்சாலி சபதத்தில், என்னென்ன பொருட்களை யுதிஷ்டிரனுக்குப் பற்பல தேசத்து மன்னர்கள் கப்பமாகக் கொண்டுவந்து கொடுத்தனர் என்று திருதிராஷ்டிரனிடத்தில் சொல்லிப் புலம்பும் சமயத்தில் துரியோதனன் பின்வருமாறு சொல்கிறான்:

செந்நிறத்தோல் கருந்தோல் - அந்தத்
திருவளர் கதலியின் தோலுடனே
வெந்நிறப் புலித்தோல்கள் - பல
வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத்தோல்
பன்னிற மயிருடைகள்........

பற்பல விதமான கம்பள ஆடைகள், தோலால் செய்யப்பட்ட உடைகள் இவற்றைக் குறித்த பட்டியலில் இந்த 'கதலி' இடம்பெறுகிறது. இந்த மானுடைய மயிரும், பலவகையான எலிகளுடைய ரோமமும், தோலும், ஆடைகளாக அணியப்பட்டிருக்கின்றன என்பது இந்த இடத்திலிருந்து விளங்குகிறது. ஆனால், இந்த வகையான நுட்பமான விவரங்களை பாரதி எஙகிருந்து பெற்றான்? எல்லாமே கற்பனைச் சரக்கா? கைபோன போக்கில், மனதுக்குத் தோன்றியபடிஎழுதிக்கொண்டு போவதைத்தானே கற்பனை வளம் என்று நாம் விளங்கிக் கொண்டிருக்கிறோம்! இல்லாததை இருப்பதாய்க் கற்பனை செய்வது fantasy என்ற வகையில் அடங்கும். கற்பனை ஆகாது.

இந்தக் கதலி படுத்திய பாடுதான் என்னை வியாச பாரத மூலத்தை எடுத்து வாசிக்கச் செய்தது. வியாச மூலத்தை நான் வாசிக்க இந்த ஒரு சொல்தான் காரணம் என்ற சொல்ல வரவில்லை. இதுவும் ஒரு பெரிய காரணம் என்று சொல்ல விழைகிறேன். இப்படியாகத் தேடித்தேடிதான் வியாச பாரதத்தில் குறிப்பிட்ட அந்த ஸ்லோகத்தைக் கண்டெடுத்தேன்.

கதலி ம்ருகமோகனி க்ருஷ்ண ஷ்யாமருணானி ச..... (சபா பர்வம் 49ம் அத்தியாயம்) என்ற இடத்தின் நேரடி மொழிபெயர்ப்புதான் செந்நிறத்தோல் கருந்தோல் என்ற அடி. இது மட்டுமேயல்லாமல், பாஞ்சாலி சபதம் பெரும்பான்மையும் வியாச பாரதத்தை அப்படியே ஒட்டி நடப்பதுதான். பாரதியே இதைத் தன் முன்னுரையில் 'பெரும்பான்மையாக, இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம்' என்று குறிப்பிட்டிருக்கிறான். ஏதோ அவையடக்கத்துக்காகச் சொல்லிக்கொண்ட ஒன்றன்று இது; பாஞ்சாலி சபதத்தை இயற்ற, தான் மேற்கொண்ட அடிப்படை இன்னது என்று கவிஞன் கொடுத்திருக்கும் சாட்சியுரை.

அப்படியானால், 'ஒருவகை மான்' என்ற பொருளில் பாரதி பயன்படுத்தியுள்ள 'கதலி' என்ற சொல் எதைக் காட்டுகிறது? பாரதிக்கு வியாச பாரதத்தில் இருந்த நேரடிப் பயிற்சியைக் காட்டுகிறது. இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய பாரதத்திலேயே ஒரேயொரு இடத்தில் மட்டும் இடம்பெற்றுள்ள இந்தச் சொல், பாஞ்சாலி சபதத்தில் இடம் பெற்றது எவ்வாறு? அதுவும், அந்தச் சொல் வியாச மூலத்தில் எங்கே இடம்பெற்றிருக்கிறதோ, அதே இடத்தில் அதே பொருளில், அதே சூழலில்! மில்டனுடைய பாடலில் yclept என்ற சொல் இடம்பெற்றிருப்பதை வைத்து, அவனுடைய கல்வித் திறத்தையும், சிறப்பையும் அளவிடுகிறார்கள் என்றால், பாரதியுடைய ஆழ்ந்த தமிழ், வடமொழிப் புலமைக்குச் சான்றாக அல்லவா இந்த 'கதலி' விளங்குகிறது? தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்று ஏழெட்டு மொழிகளில் பாரதிக்கு இருந்த பெரும்புலமைக்குச் சான்றளிக்கும் மிகச் சிறிய, ஆனால் மிகமிக வலுவான இடம், சொல், 'கதலி'. இதுவரையில் வெளியிடப்பட்ட லெக்சிகனில் இல்லாவிட்டாலும், இனிமேல் வரப்போகும் பதிப்புகளிலாவது இந்தச் சொல்லுக்கு இப்படி ஒரு பொருளிருக்கிறது; இதற்கு பாரதியின் பாடல் ஆதாரம் என்ற விளக்கம் இடம்பெற வேண்டாமா? இப்படியல்லவா ஆங்கில அகராதிகள், தம் சொல்லடைவை விரிவுபடுத்திக் கொள்கின்றன! நாமோ, நம்முடைய மேம்போக்கான பார்வையின் காரணமாக, இப்படியொரு மகோன்னதமான கவிஞன் மிகப்பல அரிய ஆட்சிகளைத் தன் கவிதைகளில் பெய்திருப்பதையும், அவனுடைய சொல்லடைவின் அடர்த்தி இன்னது என்பதனை உணர்ந்து, அதன் துணையோடு நம்முடைய அகராதிகளை வளப்படுத்திக் கொள்ளவும் தவறுகிறோம். 'பாரதி பாட்டு எளிதானதுதான். ஆனால், அவனுடைய சொல்வீச்சு, சொல்லடைவு, பிரமிக்கத்தக்க அளவு மிகப்பெரிது. காரணமில்லாமல் சாமிநாத சர்மா போன்ற பேரறிஞர்கள் பாரதியை 'அவன் ஒரு விராட் புருஷன். அவனை உன் சுண்டுவிரலால் அளவிட முயலாதே' என்று சொல்லிவிடவில்லை..

இப்படி, கதலி தொடங்கி, காணி வரையில் பேராசிரியர் நாகநந்தி அவர்களுடைய வழிகாட்டலால், பாரதியின் பாடல்களைப் படிப்பதற்கும், உணர்வதற்கும், அனுபவிப்பதற்குமான அடிப்படைப் பாட்டை எங்களுக்கு அமைத்துத் தரப்பட்டது. பாரதியை அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய விதத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே இதுவரையில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். கம்பனையும் வள்ளுவரையும் அவர் அறிமுகப்படுத்தியதைப் பற்றியும் சொல்லவேண்டும். சொல்கிறேன். அதற்கு முன்னால், பாரதி சொல்லடைவு தயாரிப்பதற்காக அவர் பட்ட பாடுகளையும், நான்காவது முறை மாரடைப்பு ஏற்பட்ட சமயம், 'இதற்குமேல் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது. அதற்குள, இந்தப் பணியை முடித்துவிடவேண்டும்' என்று தனி ஒரு மனிதராக அவர் ஆஸ்திரேலியாவில் இருந்த சமயத்தில் மேற்கொண்ட முயற்சிகளையும், அதற்கு முன்னால் இந்தியாவில் இருந்த சமயத்தில் பாரதி சொல்லடைவு, ஆய்வடங்கல் தயாரிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், அதில் எனக்கிருந்த சிறு பங்கையும், தொழிலதிபர், வள்ளல், திரு நா. மகாலிங்கம் இந்த முயற்சிகளுக்குத் தோள்கொடுக்க முன்வந்ததையும்..... இன்னும் சிலவற்றையும் பற்றியெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது.

சொல்கிறேன். அதன் பிறகாவது, அவர் விட்டுச் சென்றிருக்கும் பணிகள் பூர்த்தியடையட்டும்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com