பத்ரிநாத்தில்...
1972ல் தேசிய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தபோது அதன் இயக்குனராக இருந்தவர் மகாராஷ்டிரப் பிரிவைச் சேர்ந்த முதுநிலை அதிகாரியான சாத்தே. மிகவும் சுறுசுறுப்பானவர். வரலாற்றில் பெயர்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது போன்றவற்றில் ஈடுபட எங்களுக்கு உற்சாகமூட்டினார். மலையேற்றப் பயிற்சி எங்களுக்குப் பயனுள்ள அனுபவங்களைக் கொடுத்தது. ஓர் அணியாகச் செயலாற்றும் உணர்வை மனத்தில் பதிய வைத்ததுடன், அச்சுறுத்தும் சூழ்நிலையை எதிர்த்து நிற்கும் வல்லமையையும் அது தந்தது.

நடைப்பயணத்தில் ஆர்வம் காட்டிய சிலரில் நானும் ஒருவள். என்னுடன் ஒரிசா பிரிவைச் சேர்ந்த இ.ஆ.ப. அதிகாரியான சுபாஷ் பாணியும் இணைந்து கொண்டார். அவர் கற்றவர், இலக்கியப் படைப்பாளர், பாடல் இயற்றுபவர், நாட்டிய ஆசிரியை கூட. அத்துடன் I.A.S. தேர்வில் இந்திய அளவில் மூன்றாவதாக வந்தவர். அகாடமியில் அநேக நாடகங்களை இயக்கி இருக்கிறார். நானும் அதில் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். டெல்லியில் தொழில்முறை நடிகர்கள் நடித்ததைவிட எங்கள் நாடகம் சிறப்பாக இருந்ததாகப் பலர் பாராட்டினார்கள்.

நான் ஒரு நாடகத்தில் பதின்மூன்று வயதுப் பள்ளி மாணவியின் பாத்திரத்தில் நடித்தேன். பள்ளத்தாக்கில் இருந்த திபேத்திய பள்ளிக்குச் சென்று வெள்ளையும், நீலமும் கொண்ட சீருடையை இரவலாக வாங்கி வந்தது இன்றும் நினைவில் உள்ளது. பாணி பாண்டிச்சேரி அன்னையின் தீவிர பக்தர். இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து எனது சிறந்த நண்பராக இருக்கிறார். எங்களுடன் இருந்த மற்றொரு நபர் உ.பி. பிரிவைச் சேர்ந்த திரிவேதி. ஒரு நாடகத்தில் எனது தந்தையாக நடித்தவர். என்னிடம் எப்போதும் அப்படியே நடந்து கொண்டார். இன்னும் ஒருவர் நவீன் பாஜ்பாய். எதையும் விரைவில் கிரகித்துக் கொள்பவர், அதிகம் பேசாதவர். பல நாடகங்களில் எனது நண்பராக நடித்தவர்.

நான் அங்கு செய்த பேருந்துப் பயணத்தை என்னால் மறக்கவே முடியாது. ஆட்டங்கண்டு கடகடத்துப் போன அந்த பஸ்ஸின் பாதியில் காய்கறிகள், உருளைக் கிழங்கு மூட்டைகள், பலவகைக் கோழிகள் அடைத்துக் கொண்டிருக்கும். மறுபாதி மனிதத் தலைகளால் நிரப்பப்பட்டிருக்கும். பேருந்தின் இரண்டு ஓரத்திலும் இரண்டு நீள பெஞ்சுகள். அதன் மத்தியில் பிடிமானம் கிடையாது. இதனால் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் விழ வேண்டும் அல்லது தலைகுப்புறக் கீழே விழவேண்டும். சாலை குறுகலாக, மேடுபள்ளங்கள் நிறைந்து இருந்தது. சில சமயம் பஸ் ஒரு அடி உயரத்திற்கும் மேல் எழும்பித் துள்ளிக் குதித்தது.

ஒரு பேரழகியின் கதை

மறுநாள் நாங்கள் சுமார் 20 மைல் தொலைவில் உள்ள சீன எல்லைக்குச் சென்றோம். அங்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் விருந்தினராக ஒருநாள் தங்கினோம். அந்த நாள் முழுவதும் அருவி, சிற்றாறுகளில் குளிப்பதிலும், துப்பாக்கி சுடக் கற்றுக்கொள்வதிலும், சளைக்காமல் உருளைக்கிழங்கு சாப்பிடுவதிலும் கழிந்தது.

எங்கள் அணியில் நான் ஒரே பெண். எனக்கு முகாமின் படைத்தலைவர் திரு. சிங் அவர்களின் கூடாரம் ஒதுக்கப்பட்டது. அவர் மேஜையின் மீது பேரழகி ஒருத்தியின் படத்தைக் கண்டேன். அவள் அவரது மனைவியாகவோ, நண்பராகவோ அல்லது இவருடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பவளாகவோ இருக்கலாம் என்று நினைத்தேன்.

நான் சிங்கிடம் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தேன். கதையின் சோகமான பகுதி இது. அவள் அவருடைய நீண்டகால நண்பராக இருந்தவள். பஞ்சாபியான அவர் கூர்கியான அந்தப் பெண்ணைப் ப்ல எதிர்ப்புகளையும் மீறி மணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு விபத்தில் அவள் இறந்து போய்விட்டாள். பிறகு அவர் தானாகவே தொலைவிலுள்ள நாட்டின் எல்லைப் பகுதிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து விட்டார். இந்தத் துயரக் கதையைக் கேட்ட நாங்கள் சிங்கின் நல்ல நண்பர்களாகவும் அவர்மீது பாசம் கொண்டவர்களாகவும் ஆகிவிட்டோம்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் உதவியுடன் சீன எல்லைவரை சென்று சீன மலைத் தொடர்களைப் பார்த்தோம். பின்னர் ஒரு பஸ்ஸில் புறப்பட்டோம். அது எங்களை பத்ரிநாத் கொண்டு போய்ச் சேர்த்தது. அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அதிகாலையில் எங்களது பயணத்தைத் தொடங்கினோம். ஏராளமான யாத்ரீகர்கள் எங்களுடன் வந்தனர். வயதான ஆண்களும் பெண்களும் டோலியிலும், சிலர் சவாரியிலும் சென்றனர். சிலர் எங்களைப் போல நடந்து வந்தனர். இங்கு கங்கை அலக்நந்தா என்ற பெயரில் குன்றிலிருந்து கீழ்நோக்கி மிகுந்த வேகத்தில் பாய்ந்து ஓடுகிறது. இந்த நதியின் ஓரமாகப் பாதை மேல்நோக்கிச் செல்கிறது. அது மிகவும் குறுகலானது. சில இடங்களில் ஒருவர் பின் ஒருவராகத்தான் நடக்க முடியும். மூச்சு விடுவதும் சிரமம். ஆனால் பாதை நெடுகிலும் தேநீர் கிடைத்தது. சிறிய உணவகங்களும் ஆங்காங்கே இருந்தன. அங்கு தங்குகிறவர்களுக்கு இடமும் போர்வையும் கடையில் கொடுத்தார்கள். ஒரு கடையில் மதிய உணவு உண்டோம். எப்போதும்போல ஆலுவும் ரொட்டியும் என்றாலும் அதிர்ஷ்டவசமாக, வீட்டில் கடைந்த புதிய வெண்ணெய் அன்று எங்களுக்குக் கிடைத்தது. அதன் ருசியை இன்னும் என் நாவில் உணர்கிறேன்.

கேதாரத்தில்

பாதையில் அலக்நந்தா ஒருபுறமும், பனிமூடிய உயரமான மலைத்தொடர்கள் மறுபுறமுமாக எங்களைக் கவர்ந்தன. இறுதியாக கேதார்நாத்தை அடைந்தோம். பள்ளத்தாக்கு பச்சைக் கம்பளம் விரித்த சமதளமாக இருந்தது. சரிவான ஓரிடத்தில் ஒரு சிறு கோவில் இருந்தது. நாங்கள் அக்கோவிலுக்கு விரைந்தோம். ஒரு அர்ச்சகர் ஆராதனை நடத்திக் கொண்டிருந்தார். அவர் தன் கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டு, தன்னைச் சிவன் கழுத்தில் உள்ள பாம்பாக எண்ணிக்கொண்டு தன் உடம்பை வளைத்து வளைத்து ஒருவகைப் பாம்பு நடனத்துடன் தீப ஆராதனை நடத்தினார். அர்ச்சகரின் பக்திப் பரவசத்தாலும் கடவுளுடன் ஒன்றி அவர் செய்த ஆராதனையாலும் நாங்கள் வசீகரிக்கப்பட்டோம்

கர்நாடக மாநிலத்தின் லிங்காயத்து வகுப்பினர் கேதார்நாத் கோவிலில் ஆராதனை செய்யும் உரிமை பெற்றிருப்பதைப் பின்னர் நான் தெரிந்து கொண்டேன். ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தலைமை அர்ச்சகர்களில் ஒருவர் எப்போதும் நேபாளத்தில் இருந்து வந்தவராக இருப்பார். ஏழுமலையான் கோவிலில் பரம்பரை உரிமை உள்ள அர்ச்சகர்களாகத் தமிழ் அய்யர், அய்யங்கார் அதாவது சைவ, வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதேபோல வட இந்தியாவில் உள்ள சில முக்கியமான கோவில்களில் சேவை செய்யக் கேரள நம்பூதிரிப் பிராமணர்கள் உரிமை பெற்றிருக்கின்றனர். பரந்து விரிந்த நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக இந்த மத நிறுவனங்கள் ஒன்றுபடுத்தும் சக்தியாகவே விளங்கி வந்திருக்கின்றன என்பதையே இவை காட்டுகின்றன.

மறுநாள் காலையில், பார்வதியுடன் சிவபெருமான் வசிக்கும் கைலாச பர்வதத்தின் மீது சூரியன் உதயமாவதைக் காண விரும்பி அதிகாலையிலேயே கண் விழித்தோம். கோவிலுக்கு நடந்து சென்றோம். திரும்பும்போது சில சாதுக்கள் ருத்ராட்சமாலை, ஸ்படிகம், சாளக்கிராமம், மூலிகைகள், சுறுசுறுப்பூட்டும் இயற்கைப் பொருள்கள், ரத்தினக் கற்கள், துளசி மாலை ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

நான் நிறைய ருத்ராட்சங்களைப் பொறுக்கினேன். பெரிய மஞ்சள் கல் பதித்த ஆரம் வாங்கினேன். நாகரீக அணிகலன் என்று ருத்ராட்ச மாலையையும் என் மாமனார் அனுமதிக்கும் வரையில் அணிந்திருந்தேன். புதிதாக மணம் செய்து கொண்டவர்கள் அதை அணியக்கூடாது என்று சொல்லி, பின்னர் அதை அகற்றி விட்டார்கள். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு கீழிறங்கும் பயணத்தைத் தொடங்கினோம். இரண்டு இரவும் பகலும் கடந்து பஸ் பத்ரிநாத்தை அடைந்தது.

(தொடரும்)

ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com