தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 10)
இதுவரை:
பொருளாதாரச் சூழ்நிலை சற்றே முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமிருப்பதைக் கண்டோம். வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை வேண்டும்போது மட்டும் உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். நிறுவனத் தகவல் மையங்களை வலைமேகங்களுடன் இணைக்கும் பாலம் என்ற நுட்பத்தை அறிமுகம் செய்து அதன் சில உபதுறைகளான தகவல் பாலம் மற்றும் பாதுகாப்புப் பாலம் பற்றி விவரிப்போம். இப்போது, அந்த வலைமேகக் கணினியின் மற்ற உபதுறைகளில் மூலதன வாய்ப்புப் பற்றிய மேல் விவரங்களைக் காண்போம்.

***


வலைமேகக் கணினிப் பால உபதுறை பல மூலதன வாய்ப்புக்களுடன் பரபரப்பாக உள்ளதே. இன்னும் வேறு வாய்ப்புக்கள் அதில் உள்ளனவா?

உள்ளன. முந்தைய பகுதிகளில், தகவல் ஒன்றாக்கம், பாதுகாப்புப் பாலம் என்னும் உபதுறைகளைப் பற்றிக் கண்டோம். இப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை (monitoring and management), மேகக் கணினிக்குத் தயாரித்து நிலைநாட்டல் (staging and provisioning), மேலும் அறிக்கை மற்றும் பயன்பாட்டு ஒருங்கிணைப்பு (reporting and app integration) பற்றி விவரிப்போம்.

தகவல்மைய அடிப்படை அமைப்புக்களுக்கும், பயன்பாட்டு மென்பொருட்களுக்கும் தேவையான கண்காணிப்பு மற்றும் மேலாண்மைத் துறையில், வலைமேகக் கணினிப் பாலத்துக்கான வாய்ப்புக்கள் பல உள்ளன. பார்க்கப் போனால், தகவல் பாதுகாப்பைவிட இந்தத் துறைதான் இன்னும் அதிக சரித்திரமுடையது. கணினி அமைக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே (ENIAC!) அதைச் சரியாக நிர்வகிக்கவும் சரியாக ஓடுகிறதா என்று மேற்பார்வை பார்க்கவும் கருவிகள் (tools) தேவைப்பட்டன. அதற்கான நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.

பிறகு பல புதுக் கணினித் துறைகளுக்காக புதுக் கருவிகள் தேவைப் பட்டதால் புது நிறுவனங்கள் உருவாகின. பெரும் கணினி காலத்தில் கம்ப்யூட்டர் அசோஸியேட்ஸ் போன்ற நிறுவனங்கள் இருந்தும், சேவைக் கணினித் துறை வளர்ந்ததால் டிவொலி நிறுவனம் வளர்ந்ததைக் குறிப்பிடலாம். அதுபோல் பல உதாரணங்கள். இப்போது, மெய்நிகராக்கம் மற்றும் வலைமேகக் கணினிகளுக்கான நிர்வாகக் கருவிகள் துறையில் புது நிறுவனங்கள் வளரக்கூடிய புதிய வாய்ப்பு உள்ளது.

சில நிறுவனங்கள் ஏற்கனவே இந்த கண்காணிப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் குதித்துள்ளன. அவற்றில் சில, ஒரு வலைமேகம் மட்டுமல்லாமல், ஒரு நிறுவனம், பல வலைமேகங்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதற்குமான கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால், அதனால் இந்த உபதுறைக்கான வாய்ப்பு, காலம் கடந்துவிட்டது என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். தற்போதைய நிலை இத்துறையிம் மிகமிக ஆரம்பகால நிலை. பலர் முயல்வார்கள். பல தவறுகள் நடக்கும். பல பந்தயப் பணங்கள் விரயமாகக் கூடும். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு, பொது வலைமேகம் மற்றும் தனி வலைமேகம் இரண்டுக்கும் சேர்த்து நிர்வகிக்க உதவும் வலைமேகப் பாலக் கருவிகளை உருவாக்க இன்னும் பலமான வாய்ப்புக்கள் உள்ளன.

ஒரு மென்பொருள் நிறுவனத்தின் சொந்தத் தகவல் மையத்தில் மட்டும் பயன்படுத்தவோ அல்லது வலைமேகத்தில் மட்டும் பயன்படுத்தவோ, அதற்குத் தனித்தனியான நிலைநாட்டல் வசதிகளைச் செய்து விடலாம். ஆனால் தற்சமயத்தில், பல மென்பொருட்கள் சொந்தத் தகவல் மையத்தில் பயன்படுத்தப் பட்டாலும், எப்போதாவது மட்டும் வலைமேகத்தில் பயன்படுத்தப் படுகின்றன. அதாவது பேரிடர் (disaster) நேரும்போது அல்லது அவ்வப்போது இன்னும் அதிக அளவு பயன்படுத்தப் பட வேண்டியிருந்தாலாவது மட்டும் வலைமேகத்தில் பயன்படுத்தப் படலாம். அப்படியானால், இரண்டு இடங்களிலும் நிலைநாட்டச் சமமாகத் தயாரிக்க வேண்டும். இந்தப் பாலத் துறை நுட்பத்துக்கான வாய்ப்பும் நிறைய உள்ளது.

சரி நிர்வாக உபதுறையை விடுத்து அடுத்த மேகப்பாலத் துறைக்கு வருவோம். அதாவது, அறிக்கையளித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் (reporting and integration). நிறுவனங்கள் தமது சொந்தத் தகவல் மையங்களில், பல பத்தாண்டுகளாகப் பயன்பாட்டுப் பொருட்களை ஒருங்கிணைத்து, அவற்றின் தகவல் துளிகளை அலசி ஆராய்ந்து தமது வணிகத்துக்கு வேண்டிய அறிக்கைகளைத் தயாரிக்கும் வசதிகளைச் செய்து வைத்துக் கொண்டுள்ளன. இவ்வறிக்கைகள், வருட, கால்வருட, மாதா மாதம் மட்டுமல்லாமல், இந்நொடியில் என்ன நடக்கிறது என்று தெரியும் அளவுக்கு நுட்பம் வளர்ந்துள்ளது. இந்நிலையில், திடீரெனெ, தொழிலுக்கு வேண்டிய தகவல்களை உருவாக்கும் சில மென்பொருட்கள் வலைமேகத்துக்கு நகர ஆரம்பித்து விட்டதால், சில பிரச்சனைகள் எழுந்துள்ளன.

வலைமேகத்திலுள்ள தகவல் துளிகளையும் சொந்த மையத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல் துளிகளையும் ஒரே அறிக்கையில் எப்படி இணைப்பது என்பது ஒரு பிரச்சனை. மேலும் பயனர் மற்றும் தகவல் கட்டமைப்பு (data strucutres) சம்பந்தப்பட்ட மாற்றங்களை இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் எப்படி செய்வது என்பது மற்றொரு பிரச்சனை. இப்படிப்பட்ட பல பிரச்சனைகளைத் நிவர்த்திக்க வேண்டி, அறிக்கை மற்றும் ஒருங்கிணைப்புத் துறையில் பல புதிய நுட்பங்களை உருவாக்கும் தேவை உருவாகியுள்ளது.

அறிக்கை ஒருங்கிணைப்புத் துறை என்பது, நிறுவனத் தகவல் மையங்களிலேயே மற்ற உபதுறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகவும் புதியது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பல பயன்பாட்டு மென்பொருட்களை ஒருங்கிணைக்கவும், அவற்றின் தகவல் துளிகளைச் சேர்த்த அறிக்கைகளை உருவாக்கவும், நிஜநேர வணிகக் கண்காணிப்பை அளிக்கவும் (real time busiess monitoring dash board) பெருமுயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், வெளியில் செயல்படும் வலைமேகப் பயன்பாடுகளுடன் ஒருங்கிணைக்கவும், அவற்றின் தகவல் துளிகளை அறிக்கைகளில் சேர்க்கவும், இன்னும் பலப்பல புது நுட்பங்கள் தேவையாகின்றன. அதனால் இந்த உபதுறையில் முதலீட்டு ஆர்வம் அதிகமாக உள்ளது!

பயன்பாட்டு மென்பொருட்கள் இருக்கட்டும், வலைமேக ஊடகங்கள் என்றீர்களே அதைப் பற்றி...?

சரி, அவற்றைப் பற்றியும் கூறுகிறேன். ஊடக விநியோகக் கடப்பு (media distribution data traffic) மிகமிக அதிகமாக, சுனாமி போல் வளர்ந்து வருகிறது. இதைத் தங்கள் தகவல் மையங்களிலிருந்து அளிப்பது பெரும்பாலான நிறுவனங்களுக்குச் சாத்தியமில்லை. அதனால் பெரும்பாலும், அக்கமாய் (Akamai) போன்ற தகவல் மற்றும் ஊடக விநியோகச் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சேவைகளைத் தகவல்/ஊடகம் மட்டுமன்றி, பயன்பாட்டு மென்பொருட்களையும் தங்கள் அளிப்பு மையங்களில் (delivery centers) வைத்து அளிக்கும் துறையில் விரிவாக்கி வருகின்றனர். இதையும் ஒரு வலைமேகப் பாலமாகக் கருதலாம்.

ஊடக விநியோகத்தில் இன்னொரு புதுப்போக்கு, சின்னத் திரைத் தொலைக் காட்சியாக (television shows) மட்டுமல்லாமல், இணையம் மூலமாகவே திரைப்படங்களையும், காட்சித் தொடர்களையும் (serial shows) அளிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கான Brightcove போன்றத் ஊடக மேலாண்மைச் சேவைகளும் (media management systems) வலைமேகத்தில் வந்துள்ளன.

ஏற்கனவே பல நிறுவனங்கள் இத்துறைகளில் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. ஒன்றிரண்டு மட்டுமே வெற்றிகரமாக வளர்ந்து வருகின்றன. AT&T, Verizon போன்ற பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இத்துறையில் இறங்க ஆரம்பித்துள்ளன. புதிதாக ஒரு தகவல்/ஊடக விநியோகச் சேவை அல்லது ஊடக மேலாண்மை நிறுவனத்தை ஆரம்பிப்பது கடினம். ஆனால் இத்துறைக்குத் தேவையான விளம்பரமளித்தல் (ad servers) போன்ற சிறிய உபதுறைகளில் புரட்சிகரமான புதுத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் வாய்ப்பு இன்னும் உள்ளது.

சரி, அலசியது போதும். இத்துறை உங்களுக்கு பரபரப்பளிக்கிறதா? காத்திருப்பது ஏன்? வணிகத் திட்டத்தை உருவாக்குங்கள்; மூலதனம் தேடுங்கள்!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com