கச்சேரி முடிந்து நானும் என் மனைவியும் வீட்டுக்கு கிளம்பினபோது ஓடி வந்து என் மனைவியின் கையைக் குலுக்கினாள் சினேகிதி மாலதி. "இந்த வருஷம் தியாகராஜ உத்சவத்தில நீதான் ம்யுசீஷன் ரிசப்ஷன் கமிட்டி சேர்மனாம். இப்பத்தான் டாக்டர் தியாகு சொன்னார்."
"நானா" என்றாள் என் மனைவி வாயெல்லாம் பல்லாக.
"வாழ்த்துக்கள்" என்று ஈனசுரத்தில் முனகினேன்.
"இவருக்கு என்ன பதவியாம்" என்றாள் என்னைக் காட்டி.
"தெரியல. ஆனா ஏதோ போஸ்டிங் இருக்கு. உங்க பேரும் டாக்டர் தியாகு லிஸ்டுல இருக்கு. உங்க பேருக்கு எதிர ஏதோ மோ ன்னு போட்டிருந்துது. சரியா படிக்க முடியல"
"மோகன்ராம் மெமோரியல் ம்யூசிக் அவார்டு கமிட்டியா" என்றேன் ஆவலோடு.
இல்லை என்றாள். "வாங்கோ. தன்னால தெரியும். இப்ப நமக்கு நேரமாச்சு. போகலாம்"
போன மாச இசை நிகழ்ச்சி முடிவில் செக்ரட்டரி ரங்கராஜன் அறிவிப்பு விடுத்தார். "அடுத்த மாசம் நம்ம சபையில் வழக்கம்போல தியாகராஜ உத்சவம் பண்ணப்போறோம். கிளீவ்லாண்டு வர மூணு நாலு பெரிய வித்வான்கள் இங்க வரதா இருக்கு. சிறப்பாக் கொண்டாட தன்னார்வத் தொண்டர்கள் வேணும். உங்க பேரைக் கொடுத்தால் உங்களுக்கு ஒரு பொறுப்பு தருவோம். சபாவுக்கு உங்கள் உதவி அவசியம் தேவை. தயவு செஞ்சு பேர் குடுங்கோ.."
"நாம சபாக்கு ஏதும் செய்யறதில்ல. நம்ம பேரைக் கொடுக்கலாம்" என்று மனைவியிடம் சொன்னேன்.
"வேண்டாத வம்பை விலைக்கு வாங்காதீங்கோ. இருநூறு பூரி பண்ணிண்டு வான்னு சொல்லுவா. உசிரு போயிடும். ஏதோ வந்தோம், கச்சேரி கேட்டோம்னு போகாம..."
எனக்கு ஆர்வக் கோளாறு. "ஒரு சின்ன சமூக சேவை செய்யறதுல என்ன தப்பு. பூரி கேட்டா வசதிப்படாது. உப்மா பண்றேன்னு சொல்லிட்டாப் போச்சு. வா"
அவள் முழு சம்மதம் இல்லாமலே எங்க ரெண்டு பேர் பேரையும் கொடுத்து விட்டேன்.
இப்ப அவளுக்கு வித்வான்கள் ரிசப்ஷன் கமிட்டி சேர்மன் பதவி. எனக்கு என்ன தரப்போறாங்களோ. அவங்களத் தன் வீட்டில தங்க வைக்கற வேலை மட்டும் வேண்டாம். அதுக்கு மெம்பர்களிடையே அடிதடியே நடக்கும். "சுபா தாவணி போட்ட நாளிலயே எங்களுக்கு தெரியும். எங்காத்துக்கு வந்து கொலுல பாடி நானே என் கையால அவளுக்கு கடலை சுண்டல் கொடுத்திருக்கேன். அதனால எங்க வீட்லதான் தங்கணும்" என்பார் ஒரு மாமி. "நாங்களும் சங்கீத பரம்பரைதான். தியாகராஜர் எங்களோட மூதாதையாக்கும். அதுனால எங்க வீட்ல தங்கறதுதான் சரி" என்பார் இன்னொருத்தர். அதிகம் பிரபலமாகாத பாடகர்னா யாரும் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏதாவது ஒரு கல்லூரி மாணவனிடம் சொல்லி யுனிவர்சிடி அபார்ட்மெண்டில் தங்க வைக்கும்படி ஆகும்.
காலையில் போன் வந்தது. என் மனைவிதான் எடுத்தாள். நான் சிரசாசனம் பண்ணிக் கொண்டிருந்தேன்.
"ரொம்ப நன்றி சார். அவருக்கு ஏதாவது உண்டா? அப்படியா. கிரேட். அவர்கிட்ட சொல்லிடறேன். அவரால இப்ப பேச முடியாது. அவருக்கு நம்ம சபாக்கு ஹெல்ப் பண்ணணூம்னு ரொம்ப ஆசை. கட்டாயம் செய்வார். இப்ப தலைகீழா நிக்கறார். இல்ல இல்ல பதவிக்கு இல்ல. யோகா பண்றார். போனுக்கு வர மாட்டார். நான் சொல்லிடறேன்"
நான் அலறிப்புடைத்துக் கொண்டு எழுமுன் போன் துண்டிக்கப்பட்டது.
"ஆரு கூப்பிட்டா"
"டாக்டர் தியாகு. என்னைச் சேர்மனாப் போட்டதைச் சொன்னார். உங்களுக்கும் ஒரு வேலை உண்டாம்"
"என்ன" என்றேன் ஆவலுடன்.
சிரிப்பை அடக்கமுடியாமல் "மோரு சாதம் சப்ளையாம். குழந்தைகளுக்குப் போட ஆள் வேண்டியிருக்காம்."
"இதுல ஏதோ தப்பு நடந்திருக்கு. உனக்குதான் மோர்சாதம். எனக்கு வித்வான் ரிசப்ஷன் கமிட்டி சேர்மனா இருந்திருக்கும். மாத்திச் சொல்லிட்டார் போல."
"இல்லயே இன்னாருக்கு இன்னதுதுன்னு சரியாச் சொன்னார். உங்க வேலை சுலபம்தானே. நானே மோர்சாதம் பிசஞ்சு கொடுத்திடறேன். குழந்தைகளுக்குப் போடுங்கோ"
அதற்குள் சேதி பரவிவிட்டது. ஒரு மாமி போனில் என்னைக் கூப்பிட்டு "கடுகு போடாம மோர்சாதம் பண்ணுங்கோ. என் பேரனுக்குக் கடுகுன்னா அலர்ஜி" என்றாள். இன்னொரு மாமி "கொஞ்சம் ஸவர் கிரீம், ஷவர கிரீம் இல்ல, மறக்காம சேத்துங்கோ. ரெண்டு கப் பாலும் விடுங்கோ. ஃபிரிட்ஜுல வச்சிருங்கோ. இல்லாட்டி சுள்ளுனு புளிச்சிடும்" என்று சமயல் குறிப்பு கொடுத்தாள்.
எனக்கு அவமானம் தாங்க முடியவில்லை. ஏண்டா இந்த விளையாட்டில் மாட்டிக் கொண்டடோம்னு ஆனது.
டாக்டர் தியாகு கறாரான மனிதர். தன்னார்வத் தொண்டன்னு போயிட்டு இது வேணாம் அது குடுன்னு கேட்க கூச்சமாய் இருந்தது.
சர்மா சாரைக் கேட்டால் என்ன?
சர்மா எண்பது வயது முதியவர். சங்கீதத்துல புலி. நல்ல ரசிகர். கமிட்டிகளுக்கு ஆள் செலக்ட் பண்ண அவர்தான் ஐடியா கொடுத்திருக்கணும். அவரைக் கேட்டால்... போய்க் கேட்டேன்.
என்னப்பா. இது பெரிய விசயமா. இதுக்கெல்லாம் காசு பணம் இல்ல. சீட்டுப் போட்டு குலுக்கி தேர்ந்தெடுத்திருக்கா. ஏதோ குடுத்த வேலயப் பண்ணாம..."
அந்த வருசம் தியாகராஜ உத்சவத்தில் மூன்று நாள் விழாவுக்கு மூன்று பெரிய சங்கீதக் கலைஞர்கள் பங்கேற்றார்கள். முதல் நாள் சுபா ரங்கநாதன் வாய்ப்பாட்டு, ரெண்டாவது நாள் காயத்ரி தேவி-ரஞ்சனி தேவி சகோதரிகள் வாய்ப்பாட்டு, மூணாவது நாள் கன்னிகா பரமேஸ்வரி வயலின்.
முதல் நாள், சுபா ரங்கநாதன் கச்சேரியில் உட்கார்ந்து கேட்க முடியாமல் நான் மோர்சாதம் போடப் போய்விட்டேன். அமெரிக்காவில் வளரும் இந்தியக் குழந்தைகளுக்கு மோர்சாதம் போடுவது நரக வேதனை. "திஸ் ஈஸ் யக்கி. இது வேணாம். பிட்சா இருக்கா, நூடுல்ஸ் இருக்கா, பாஸ்டா இருக்கா"ன்னு கத்தும். யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தேன்.
மேடையில் சுபாவோடு கைகுலுக்கினாள் என் மனைவி. பளிச் பளிச்சென்று போட்டோக்கள். நாமும் அதிலே போய் ஒரு போட்டோவில வந்தா நல்லாயிருக்கும் என்று தோன்றியது. "கார் சாவி உங்கிட்ட இருக்கா" என்று மனைவியைக் கேட்கிற சாக்கில் மேடையை நோக்கிப் போனேன். போகும் வழியில் இளைஞன் ஒருவன் "சார் இந்த சீட்டை சுபா மேடத்துக்கு கொடுங்கள்" என்று கொடுத்தான்.
கொடுக்கிற சாக்கில் சுபாவோடு ரெண்டு வார்த்தை பேசலாம். சீட்டை சுபாவிடம் கொடுத்தேன்.
சீட்டைக் கையில் வாங்கிய சுபா என்னை முறைத்துப் பார்த்தார். "என்ன சார் இது ? யாம்பேரு மீனாகுமாரி, யாங்கூரு கன்னியாகுமாரி பாட்டை பாடச் சொல்றீங்க. இதெல்லாம் நான் பாடறதில்ல. சீட்டுக் கொடுக்க ஒரு தரம் வேண்டாமா, இது ஒரு புனிதமான ஆராதனை இல்லியா" என்று கத்த, நான் "இல்ல மேடம் இன்னொருத்தர்." என்று குழற, என்னை யாரோ திரைக்கு மறைவுக்கு அனுப்பினார்கள். என் மனைவி வெட்கி மேடைக்குப்பின் ஒளிந்து கொண்டாள்.
மத்த இருநாளும் மேடை அருகே போகாமல் தூரத்திலிருந்து பாட்டு கேட்டேன்.
ஒரு வழியாக தியாகராஜ உத்சவம் நடந்தது. மூன்றாவது நாள் கூட்டம் கலைந்து போனபின் சர்மா சார் முதல் வரிசையில் வீல்சேர் வருவதற்கு காத்திருந்தார்.
என்னைப் பார்த்து புன்னகை புரிந்தார்.
"என்னப்பா மோர்சாதத்தில அசத்திட்டயாமே. குழந்தைகளுக்குப் பிடிச்சிருந்ததாம். அடுத்த வருசமும் நீயே....."
"நன்றி" என்றேன் மெதுவாக. மோர்சாதம் செய்து தந்தது என் மனைவி என்று சொல்லிக் கொள்ளவில்லை.
"அடுத்த வருசம் இந்த வேலை வேண்டாம் சார். ரிசப்ஷன் கமிட்டில போடுங்கோ. ஏன்னா என் மனைவிய விட எனக்கு சங்கீதம் அதிகம் தெரியும்."
"ஆகா பாத்தேனே. சினிமா பாட்டுக்கு சீட்டு குடுத்தவன்தானே நீ"
"இல்ல. வேற எவனோ ஒருத்தன் குடுக்க அது ஏடா கூடமாயிடுத்து"
"அப்படியா. சரி. மூணு நாள் கச்சேரில யார் நன்னாப் பண்ணினா? யாருக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசு தரலாம். சொல்லு"
நான் பதில் சொல்லுமுன் யாரோ அவருடன் பேச வந்துவிட்டார். கொஞ்ச தூரத்தில் வீரராகவன் நின்று கொண்டிருந்தார். அவரும் சர்மா போல சங்கீத ஞானி. பெரிய விமரிசகர். அவர்கிட்டே போனேன். "சர்மா சார் என்ன கேட்டார் உங்களை?" என்றார்.
"மூணு நாள் கச்சேரி பாடினவங்களை வரிசைப்படுத்தச் சொன்னார். உங்களைக் கேட்டிருந்தா நீங்க யாரைச் சொல்வீங்க சார்?"
"கன்னிகா பரமேஸ்வரி வயலின் இசைக்குதான் முதல் பரிசு. எல்லாப் பாட்டும் சூப்பர். எந்த ஜென்ம பாபமுங்கிற வரியில எப்படி இழைச்சா பாருங்கோ. சும்மா சொல்லப்படாது. வயலின் நேரில பேசித்து. சுபா பரவாயில்ல. சம்பிரதாயமா பாடிட்டா. செகண்ட் பிரைஸ் குடுக்கலாம். காயத்ரி ரஞ்சனி சும்மா சர்க்கஸ் வேலைதான் செஞ்சா. மூணாம் பரிசுதான்."
"இங்க வா" என்று சர்மா சாடை காட்ட நானும் வீரராகவனும் அவரிடம் போனோம். என் மனைவியும் அங்கே நின்றிருந்தாள் கையில் பாத்திரங்களுடன்.
"கேட்ட கேள்விக்கி என்ன பதில்" என்றார் சர்மா பள்ளிக்கூட வாத்தியார் போல.
"கன்னிகா பரமேஸ்வரி பர்ஸ்டு, சுபா ஸெகண்ட், காயத்ரி ரஞ்சனி தேர்ட். இதான் என் முடிவு" என்றேன். வீரராகவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
"இருக்கட்டும். என்னம்மா நீ என்ன சொல்ற" என்றார் சர்மா என் மனைவியிடம்.
"காயத்ரி-ரஞ்சனி சூப்பர், சுபா பரவாயில்ல, கன்னிகா பரமேஸ்வரி சோபிக்கவே இல்ல" என்றாள் என் மனைவி.
சர்மா வியப்புடன் அவளிடம் "எந்தரோ மகானுபாவலு அந்தரிகி வந்தனமு" என்றார்.
"என்ன சார்"
"இல்லம்மா. கோடங்குடி கோபாலகிருஷ்ண பாகவதர் பேத்திதான்னு நிரூபிச்சுட்ட. நீ சொன்ன இந்த வரிசைதான் என் மனசிலயும் இருக்கு. உன் ரத்தத்துல சங்கீதம் ஓடறதும்மா. சங்கீதத்தோட தராதரம் தெரிஞ்சு வெச்சிருக்கே"
"நான் காருக்குப் போறேன். இந்தப் பாத்திரத்தை கையில சுமக்க முடியல. சீக்கிரம் வாங்கோ" என்று என்னிடம் சொல்லிவிட்டு அவள் நகர்ந்தாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவள் தாத்தா பிரபல பாடகரா. எனக்கே இத்தனை நாள் தெரியாது. கமுக்கமா இருந்திருக்கா.
சர்மா என்னைப் பார்த்தார்.
"உம்பெண்டாட்டி கெட்டிக்காரி. கரெக்டா ஒரே வரியில சொல்லிட்டா பாரு. ரெண்டு பேரு சேர்ந்து லயம் சுருதியோட மாத்தி மாத்தி பாடறது ஒரு சுகானுபவம். ஒருத்தர் கீழ் ஸ்தாயி இன்னொருத்தர் மேல் ஸ்தாயின்னு ரஞ்சனியும் காயத்ரியும் பிச்சு ஒதறிட்டா. சுபா ரங்கநாதன் சரியா எடுபடல. ஜெட் லாக் களைப்பா இருந்துது போல. கன்னிகா பரமேஸ்வரி எடுத்துண்ட பாட்டும் சரியில்ல. புதுசா வந்த மிருதங்கக்காரன் சரியா பொருந்தல. சவுண்டும் சொதப்பிட்டான்."
என் மனைவியின் சங்கீத அறிவுக்குக் கிடைத்த பாராட்டில் உள்ளூர வெந்தேன்.
வீரராகவன் முகம் கருத்திருந்தது. "என்னை என் வீட்ல டிராப் பண்ணமுடியுமா. பக்கத்திலதான்" என்று என்னிடம் கேட்டார்.
காருக்குப் போகும் வழியில் "சர்மா சாருக்கு வயசாயிடுத்து. காதும் மந்தம் என்னத்தைக் கேட்டாரோ. இது மாதிரி தீர்ப்பு சொல்லியிருக்கார். எனக்கு சம்மதப் படல" என்றார்.
அரங்கிலிருந்து காருக்குப் போக மூன்று நாலு நிமிஷம்தான் ஆயிருக்கும். ஆனால் அதற்குள் ஏன் தன் முடிவு சர்மாவின் முடிவிலிருந்து வித்தியாசமானது என்பதை விளக்க வீரராகவன் டெக்னிகலாக ஏதோ சொன்னார். லயம், சுருதி, ராக லட்சணம், ராகபேதம், ரிஷபம், காந்தாரம் என்று ஏதேதோ.
இந்த வார்த்தைக்கெல்லாம் எனக்கு ஸ்பெல்லிங்கே தெரியாது. அப்புறம்னா அர்த்தம் தெரிய. வீட்டுக்குப் போய் கர்நாடிக் ம்யூசிக் ஃபார் டம்மீஸ் நெட்ல கிடைக்கிறதான்னு பார்க்கணும் என்று நினைத்துப் பேசாமல் தலையாட்டினேன்.
காரில் போகும்போது என் மனைவி முன் சீட்டில் இருக்க, வீரராகவன் பின் சீட்டில் இருந்தார். வழியில் அவர் பேசவில்லை. வீட்டில் இறக்கி விட்டதும் "நன்றி" என்று சொன்னவர், சற்றுத் திரும்பி காருக்குள் என் மனைவியைப் பார்த்தார்.
"மேடம்.... கர்நாடக ராகலட்சணம்னு புத்தகம் போட்டிருக்காரே கோடங்குடி கோபாலகிருஷ்ண பாகவதர். அவர் பேத்தியா நீங்க.... சர்மா சார் சொன்னாரே."
"இல்ல. எங்க தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதர் சாடையில இருப்பார்னு சர்மா சார்கிட்ட முன்னே ஒரு தடவை சொல்லியிருக்கேன். அதை அவர் தப்பா புரிஞ்சிட்டு.."
"ஓ அப்படியா..நீங்க ரஞ்சனி தேவி காயத்ரி தேவி பர்ஸ்ட், சுபா செகண்ட், கன்னிகாபரமேஸ்வரி தேர்ட்னு சங்கீத ரீதியில எப்படி தேர்ந்தெடுத்தீங்கன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆசையா இருக்கு"
"இதுக்கு ஏன் சங்கீதம் வேணும் சார்.... அவா டிரஸ்ஸைப் பார்த்தேளா.. ரஞ்சனி கருப்பு புடவை மஞ்சள் ப்ளவுஸ். காயத்ரி மஞ்சள் புடவை கருப்பு ப்ளவுஸ்..என்ன சூப்பர் காம்பினேஷன். அதுனால பர்ஸ்ட்ன்னேன், சுபா நெக்லஸ், ஜிமிக்கி, தோடுன்னு அசத்தினாலும் பட்டுப்பொடவை சுமார் ரகம், கன்னிகா பரமேஸ்வரி ஏதோ பழந்துணி மாதிரி சாயம்போன பச்சையில் பொடவை. பார்க்க சகிக்கல"
நான் காலை பிரேக்கிலிருந்து எடுத்து விட கார் மெதுவே நகர்ந்தது.
வீரராகவன் "இனிமே கேப்பேனா கேப்பேனா" என்று புலம்பி, முடியைப் பிய்த்துக்கொண்டு எலக்டிரிக் லைட் கம்பத்தில் தலையை முட்டிக் கொள்ளும் காட்சி கார் கண்ணாடியில் தெரிந்தது.
எல்லே சுவாமிநாதன் |