சோயா அவரையில் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், நார்ப்பொருள், ஒற்றைநீர்மக் கொழுப்பு, பலநீர்மக் கொழுப்பு, புரதம் ஆகியவை உள்ளன. தீங்கு விளைவிக்கும் திண்மக் கொழுப்பின் அளவு குறைந்து காணப்படுகிறது. சில அமெரிக்க அங்காடிகளில் உறைநிலையில் இந்த சோயா பீன், எடமாமெ என்ற பெயரில் கிடைக்கும். இதை வைத்துப் பலவகை உணவுப் பண்டங்கள் எளிதாகச் செய்யலாம். ஒரு கிண்ணம் சமைத்த சோயா பீனில் 300 கலோரி ஆற்றல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சோயா பீன் குருமா தேவையான பொருட்கள் எடமாமெ - 1 கிண்ணம் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம் தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம் இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி சோம்பு 1 - தேக்கரண்டி பட்டை - சிறிய துண்டு மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி பால் - 1 கிண்ணம் முந்திரிப் பருப்பு- 5 பாதாம் பருப்பு - 5 கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய்- 2 தேக்கரண்டி கொத்துமல்லித் தழை
செய்முறை: எடமாமெவை நுண்ணலை அடுப்பில் வேகவைத்துக் கொள்ளவும். பாலுடன் சேர்த்து முந்திரி, பாதாமை மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, பட்டை போட்டு பொரித்து, பின் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு தக்காளி, வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வேகவைத்த சோயா அவரையை இதில் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் இதில் அரைத்த பால் கலவையைச் சேர்த்து பத்து நிமிடம் நன்றாகக் கொதிக்க விடவும். சேர்ந்து வந்ததும் தளர்த்த வேண்டுமென்றால் இன்னும் சிறிது பாலோ அல்லது தண்ணீரோ சேர்த்துக் கொதிக்க விட்டு, இறக்குமுன் கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன், பாஸ்டன் |