சான் ·பிரான்சிஸ்கோ - ·பெப்ருவரி 9, 2006
கலி·போர்னியா மாநிலப் பொதுக்கல்வி கண்காணிப்பாளர் ஜாக் ஓ'கான்னல் கலி·போர்னியாவின் ஆறாம் வகுப்பு சமூக மற்றும் வரலாற்றுப் பாடநூல்களில் தொடர்ந்து வந்திருக்கும் சிறுமைப்படுத்தும் பிழைகள் கூச்சமளிப்பவை என்றார்.
நியூ கலி·போர்னியா மீடியா என்ற சிறுபான்மை ஊடகங்களின் கூட்டணி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து ஜாக் ஓ'கான்னலச் சந்திக்கத் தென்றலுக்கு வாய்ப்புக் கிட்டியது. இப்படிப்பட்ட பிழைகள் எத்தனையோ அறிஞர்களையும் தாண்டி இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்திருப்பது எப்படி என்று தென்றல் கேட்டதற்கு, பிழைகள் தொடர்ந்து வந்திருப்பது தவறுதான் என்று ஏற்றுக் கொண்டார். முன்னால் செய்த பிழைகளைத் திருத்தக் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக மேலும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் சில மத இயக்கங்கள் தங்கள் குறுகிய மதக்கோட்பாடுகளைப் பாடநூல்களில் திணிக்க முயற்சி செய்து வருவது பற்றிப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும், சில பெற்றோர்களும் கவலை தெரிவிப்பது பற்றிக் கேட்டதற்கு, வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்ற தனக்கே இதற்கான தீர்வு தெரியவிலை என்றார் ஜாக் ஓ'கான்னல்.
பல பல்கலைக்கழக நிபுணர்களோடு கல்வித்துறை சேர்ந்து இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணக் கடும் முயற்சி செய்கிறது என்றார் அவர். ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாடத்திட்ட வாரியம் எல்லோருக்கும் ஏற்புடைய கருத்துகள் எவை, ஆறாம் வகுப்பு மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை என்பதைப் பற்றி நிபுணர்களோடு கலந்து தீர்மானிக்க முயலும் என்று உறுதியளித்தார்.
எப்போது இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு உண்டாகும் என்ற செய்தியாளர் கேள்விக்கு, 'வெகு விரைவில்' என்று விடையளித்தார் ஓ'கான்னல். பாடநூல் பதிப்பாளர்கள் புத்தகங்களை வெளியிடக் காத்துக் கொண்டிருப்பதால், இதற்கான தீர்வுகளைக் காலம் தாழ்த்தாமல் விரைவாகக் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பிப்ரவரி 27, 2006 அன்று நடக்கவிருக்கும் பொதுமக்கள் மன்றத்தில் இந்தச் சிக்கல் மேலும் அலசப்படும் என்று தெரிகிறது. இந்துமத அணிகள், தலித் அணிகள், சமயச் சார்பற்ற அணிகள் என்று பல அணிகள் தத்தம் பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றன.
பல இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் பேசும் மக்கள் இருப்பது கலி·போர்னியாவின் வளர்ச்சிக்கு ஆதாயம் என்றார் ஓ'கான்னல். கலி·போர்னியர்களின் மொழிகள், பண்பாடுகள், மரபுகளைப் புரிந்து கொள்ளும் திறமை உலகமயமாக்கலில் கலி·போர்னியாவுக்கு மேலும் வளர்ச்சி தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சீன, இந்திய, இஸ்பானிய மொழிகள் பள்ளிகளில் கற்பிக்கப்படுமா என்ற தென்றல் கேள்விக்கு, அவை மட்டுமல்ல பன்னாட்டுக் கலாசாரங்களைப் பள்ளிகளில் பகிர்ந்து கொள்ள மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
உலகப் பொருளாதாரத்துக்கு வித்திட்ட சிலிகன் வேல்லி இந்த முயற்சிகளுக்குத் துணை புரியும் என்றார் ஓ'கான்னல். குறுகிக் கொண்டிருக்கும் உலகத்தோடு நாம் பின்னிப் பிணைந்திருக்கிறோம் என்ற உணர்வோடு கலி·போர்னியா கல்வித்துறை செயல்படுவதை சிலிகன் வேல்லியின் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள் என்றார் அவர். சிலிக்கன் வேல்லியின் வளர்ச்சிக்குக் கலி·போர்னியாவின் பள்ளிகளில் முதலீடு செய்ய வேண்டியதின் அவசியத்தை அதன் தலைவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
மணி மு. மணிவண்ணன் |