ஆர்.சூடாமணி
பிரபல எழுத்தாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான ஆர்.சூடாமணி (80) செப்டம்பர் 13 அன்று சென்னையில் காலமானார். 1931ம் ஆண்டு சென்னையில் பிறந்த சூடாமணி இளவயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். 'காவேரி' என்னும் இவரது முதலாவது சிறுகதை 1957ல் வெளியாயிற்று. சுதேசமித்திரன், கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் இவருடைய கதைகள் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றன. 'ஒளியின் முன்' என்ற இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 1959ல் வெளியானது. சிறுகதை, நாவல், நாடகம் என படைப்புத் துறையின் சகல தளங்களிலும் தனது முத்திரையைப் பதித்த சூடாமணி, ஆங்கிலத்தில் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆக்கங்களைச் செய்திருக்கிறார். மத்தியதர வாழ்க்கையையும் அதன் மாந்தர்களையும், பெண்களது பிரச்சனைகளையும் மிகச்சிறப்பாகத் தனது படைப்புகளில் கையாண்டிருக்கும் இவர், சிறந்த உளவியல் எழுத்தாளர் என்று போற்றப்பட்டவர். தரமான சிறுகதைகளைத் தமிழில் தந்தவர். இலக்கியச் சிந்தனை விருது உட்படப் பல்வேறு விருதுகளையும், பதிப்பாளர் சங்கத்தின் சிறப்பு விருதினையும் பெற்றவர். பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி. மொழிபெயர்ப்பாளர் பத்மாசனி மற்றொரு சகோதரி. பாட்டி ரங்கநாயகி அம்மாள் அக்காலத்து எழுத்தாளர்களுள் ஒருவர்.



© TamilOnline.com