கமலா ஹாரிஸ்
2010ஆம் ஆண்டு நவம்பர் தேர்தலில் கலிஃபோர்னியா மாநில அட்டார்னி ஜெனரல் பதவிக்குக் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகிறார் கமலா ஹாரிஸ். தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தப் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்ணாகவும், முதல் வெள்ளையரல்லாத அமெரிக்கராகவும் அவர் இருப்பார்.

அக்டோபர் 20 அன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள கமலா தேவி ஹாரிஸ், தற்போது சான் ஃபிரான்சிஸ்கோவில் மாவட்ட வழக்குரைஞர். முதலில் 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கமலா. இவரது பெற்றோர் சியாமளா ஹாரிஸ் (பார்க்க: தென்றல், பிப்ரவரி 2004) மற்றும் டோனல்ட் ஹாரிஸ் (ஜமைகா-அமெரிக்கர், ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் பொருளாதாரப் பேராசிரியர்). ஹோவர்ட் பல்கலை (வாஷிங்டன் டி.சி.), கலிஃபோர்னியா பல்கலை ஆகியவற்றில் சட்டம் பயின்ற கமலா, குற்றவியல் வழக்கறிஞராகப் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். ‘Smart on Crime: A Career Prosecutor's Plan to Make Us Safer’ என்ற இவரது நூல் 2009ல் வெளியாயிற்று. தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை எதிர்ப்பவர் என்றபோதிலும், ஒவ்வொரு வழக்குக்கும் ஏற்ப தண்டனையின் தீவிரம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று இவர் நம்புகிறார்.

கலிஃபோர்னியா மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள கமலா ஹாரிஸ், தேசீய மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தின் துணைத்தலைவரும் ஆவார். தென்றலுக்காக கமலாவுடன் இந்த நேர்காணலில் உரையாடும் திருமதி அனு நடராஜன், ஃப்ரீமான்ட் நகர்மன்ற உறுப்பினர். (இவருடைய நேர்காணலும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.) இவருடன் உரையாலில் பங்குகொண்ட மேதா ஸ்ரீதர் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவி. இப்போது நேர்காணல்...

*****


அனு நடராஜன்: கலிஃபோர்னியா மாநிலத்தின் அட்டார்னி ஜெனரல் பதவிக்கு உங்களைக் குடியரசுக் கட்சி வரும் நவம்பரில் 2010ல் நடக்கவிருக்கும் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்திய-அமெரிக்கச் சமுதாயம் உங்கள் சாதனையைப் பெருமிதத்தோடு பார்க்கிறது. வாழ்த்துக்கள்.

கமலா: உங்கள் ஆதரவான சொற்களுக்கு நன்றி.

அனு: உங்கள் தாயாருடன் நீங்கள் கொண்டிருந்த நெருக்கம் பற்றி மிகவும் கேள்விப்பட்டுள்ளேன். அவரைப் பற்றிச் சொல்லுங்கள்.

கமலா: உண்மை. அவர் மிகவும் கெட்டிக்காரர். உயர்ந்த கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். எனது புத்தகத்தை அவருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன். அதே நேரத்தில் உறுதி மிக்கவர். நானறிந்தவர்களில் அன்பு நிறைந்தவர் (குரல் தழுதழுக்கிறது).

அனு: தமிழ் மொழி, நூல்கள், சினிமா இவற்றையெல்லாம் அவர் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

கமலா: ஓ, ஏராளமாக! வளரும் பருவத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவுக்குப் போய்விடுவோம். நாங்கள் போகாவிட்டால் தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்கள் வருவார்கள். எங்களிடம் ஒரு ஆள் உயரத்துக்கு அமர்சித்ர கதாவின் கதைப் புத்தகங்கள் சேர்ந்து போயிருந்தன என்றால் பாருங்கள். அதுமட்டுமல்ல, அம்மா சிறுவயதில் பாட்டுப் பாடி இந்தியப் பிரதமரிடம் பதக்கம் ஒன்று வாங்கியிருந்தார்.

அனு: ஓ, அற்புதம். நீங்கள் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டீர்களா?

கமலா: கற்றுக் கொண்டேன், பாடவில்லை. ஆனாலும் அது என் ரத்தத்தில் இருக்கிறது.

அனு: உங்கள் தாத்தா, பாட்டி குறித்துச் சொல்லுங்கள்.

கமலா: இந்திய அரசாங்கத்தில் என் தாத்தா பி.வி. கோபாலன் உயர்பதவி வகித்தார். அவரை ஐ.நா. இந்தியாவின் பிரதிநியாக லுசாகாவுக்கு அனுப்பியது. அப்போது ஜாம்பியா விடுதலை பெற்ற நேரம். என் தாத்தா பாட்டி அங்கே சில காலம் வசித்தார்கள்.

அனு: அவர் வழியாகத்தான் உங்களுக்கு அரசியல் ஆர்வம் வந்திருக்க வேண்டும், இல்லையா?

கமலா: ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். என் தாத்தா பல இடங்களில் பணி செய்து ஓய்வு பெற்றபின் சென்னை பெசன்ட் நகரில் செட்டில் ஆனார். தினமும் நண்பர்களோடு கடற்கரையில் உலாத்தப் போவார். அப்போது அவர்கள் அரசியல், ஊழலை ஒழிக்க வேண்டியதன் அவசியம், ஜனநாயகம் என்றெல்லாம் பேசிக்கொண்டு போவார்கள். அப்போது நான் சிறுமி. அவர் என்னை மட்டும்தான் இந்தக் கடற்கரை நடைக்கு அழைத்துப் போவார். அவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரரும் கூட.

அனு: பெரிய மனிதர்கள், அரசியல் பேச்சு, அவர்களோடு ஒரு குட்டிப் பெண் - கேட்கவே சுவையாக இருக்கிறதே!

கமலா: இதைக் கேளுங்கள். கல்யாணம் ஆனபோது என் பாட்டிக்கு வயது 12. தாத்தாவோடு வாழச் சென்றபோது 16, 17 இருக்கலாம். தாத்தாவுக்கு வேலை போனால் பாட்டிதான் காரணமாக இருப்பார் என்று அப்போதெல்லாம் ஜோக் அடிப்பார்களாம். ஏன் தெரியுமா? பாட்டி கிராமத்துப் பெண்களையெல்லாம் ஒன்று திரட்டுவாராம்.

அனு: திரட்டி என்ன செய்வார்?

கமலா: கணவன்மார் பெண்களை அடிப்பதை நிறுத்துவது, தாம்பத்திய உரிமை, மகப்பேறு உரிமை கோருவது என்று இப்படிப்பட்ட விஷயங்களில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டிருக்கிறார். அவர் ரொம்பக் கறாரானவர்.

அனு: நீங்கள் மற்றொன்றும் சொன்னதுண்டு. ஒபாமா அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போது உங்கள் பாட்டி கோவிலுக்குப் போனார் என்று...

கமலா: தேங்காய் உடைப்பார்.... அவரது வெற்றிக்காக...

அனு: உங்கள் தாயார், தாத்தா, பாட்டி இவர்கள் செய்தது, தற்போது நீங்கள் செய்து வருவது எல்லாவற்றிலும் ஒரு தொடர்பைப் பார்க்க முடிகிறது.

கமலா: நிச்சயம்.

அனு: என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் பெற்றோர் இப்போது பெங்களூருவில் இருக்கிறார்கள். இங்கிருக்கும் அரசியல் சமாசாரங்களை அவர்களோடு பேசும்போது அங்கிருக்கும் அரசியல் பற்றிய ஒப்பீடுகள் கேட்க ஒருவகையில் தமாஷாகவும் மற்றொரு வகையில் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கும்.

கமலா: உண்மைதான். என் பாட்டி விடிகாலையில் செய்தித் தாளைப் படித்துவிட்டு என் அம்மாவை போனில் கூப்பிடுவார். நான் சொல்வது 2002ல். அப்போது முதன்முதலாக நான் DA பதவிக்குப் போட்டியிட்ட நேரம். என்ன நடக்கிறதென்று அறிந்து கொள்ளக் கூப்பிடுவார். நான் வெற்றி பெற்றதும் முதலில் கூப்பிட்ட சிலரில் அவர் ஒருவர்.

அனு: பொதுப் பணிக்கு எப்படி வந்தீர்கள் என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள்.

கமலா: அம்மா படிப்பதற்காகக் கலிஃபோர்னியாவுக்கு வந்தார்கள். இங்கு நடந்துகொண்டிருந்த சிவில் ரைட்ஸ் இயக்கம் அவரை ஈர்த்தது. அப்படித்தான் என் தந்தையாருடன் பழக்கம் ஏற்பட்டது. பெர்க்கலியில் PhD முடித்த பின் ஊருக்குப் போய் நல்லபடி பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைத்திருக்க வேண்டியது (சிரிக்கிறார்). ஆனால் என் தந்தையைக் காதல் மணம் செய்து கொண்டார். அவர்கள் சந்திப்பின் காரணமாக என் தாயார் குடிமக்கள் உரிமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் ஈடுபட்டார். அந்தச் சூழலில் நான் வளர்ந்தேன்.

குழந்தைகளாக இருந்த போது ‘நீதி’ என்பதற்காகவே எந்நேரமும் பேரணி நடத்திக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த பெரியவர்கள் எங்களைச் சுற்றி இருப்பார்கள். எல்லோரும் உணவு மேசையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, சிறியோர் ஏதாவது ஒன்றைச் சொன்னால், நாங்களேதான் அதற்காக வாதாடி நிறுவ வேண்டும் (சிரிக்கிறார்). அது குழந்தைப் பேச்சாக இருக்காது. அப்படித்தான் நானும் என் தங்கையும் வழக்கறிஞர்கள் ஆனது.

அனு: ஓ, நல்லது.

கமலா: நாங்கள் தெளிவாகப் பேச வேண்டும், எங்கள் கருத்தைக் காக்க நாங்களே வாதாட வேண்டும், எங்களுக்கென்று கருத்து இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொண்டோம்.

மற்றொரு எதிர்பார்ப்பு என்னவென்றால் நாங்கள் சேவையில் ஈடுபடுவோம் என்பது. அதில் சந்தேகத்துக்கு இடமே இருக்கவில்லை. என்ன செய்வோம் என்பதுதான் கேள்வி. ஆக, இவைதான் அடித்தளமாக அமைந்தவை.

நான் அரசு வழக்குரைஞரானவுடன்--அப்போது நினைத்ததும், இப்போது முற்றிலும் நம்புவதும்--என்னவென்றால், குரலற்றவர்களுக்குக் குரலாக இருப்பது என் பொறுப்பு என்பதுதான். ஓர் அரசு வழக்குரைஞர் என்ற முறையில் சட்ட பரிபாலனத்தின் தாக்கம் சமுதாயத்தில் மிக நலிந்தவர்கள் மீது அவ்வளவு அதிகம் இருப்பதை உணர்கிறேன். அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்போது அவர்களுக்கு கௌரவத்தையும் தருகிறோம். நான் செய்ய விரும்புவது அதைத்தான்.

தொழில்முறை வழக்குரைஞர் என்ற முறையில், பொதுமக்கள் பாதுகாப்பு எங்கள் முதல் லட்சியம். ஒரு குற்றம் நடந்தால், அதிலும் ஒரு வன்முறைக் குற்றம் நடந்தால், விரைந்து, தீர்மானமாக, கண்டிப்போடு செயல்பட வேண்டும். ஆனால் எங்களிடம் இருக்கும் ஆற்றலைப் பொதுமக்களின் பாதுகாப்புக்குச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென்றால், எதிர்வினை புரிந்தால் போதாது, முன்கூட்டியே தடுக்கவும் வேண்டும்.

சிறியவர்கள் மற்றும் இளையோர் மீது கவனம் செலுத்தும் பல திட்டங்களை உண்டாக்கியிருக்கிறோம். எவ்வாறு உடல்நலத்தில் செய்கிறோமோ அதுபோல, தொற்றுநோய் ஒன்று பரவினால், முன்னதாகவே தடுப்பது; ஒருவேளை நோய் தொற்றிவிட்டால், விரைந்து குணப்படுத்துவது, இதுதான் சிறந்த வழி. தீவிர சிகிச்சையறை அளவுக்கு அதை வளரவிட்டால், பின்னர் சிரமமும் செலவும் அதிகம். குற்றத் தொற்றுநோயும் அதுபோலத்தான் என்று நான் கூறுவேன்.

என் தாயார் ஒரு விஞ்ஞானி. ஆமாம், அவரது இயல்பே அதுதான், தொழில் அல்ல. எல்லாமே முதலில் ஒரு கருதுகோளாக (hypothesis) தொடங்கும், பின்னர் அது சோதிக்கப்படும். மாநில அரசு வழக்குரைஞர் என்கிற முறையில் நான் செய்யப் போவது இதுதான். புதுமை படைத்தல், அதைச் செய்ய அஞ்சாமல் இருத்தல் என்பதுதான். விஞ்ஞானிகள் எப்போதுமே செய்துள்ளனர், அதாவது ஒரு கற்பிதத்தை, ஒரு எண்ணத்தை வடிவமைத்து, பின்னர் அதைச் சோதித்தல். அதில் ஏற்படும் இடர்களைக் களைய மறுபரிசீலனை செய்தல். ‘இது எனது எண்ணம்’ என்கிற கர்வம் அதற்குக் குறுக்கே வரக்கூடாது. கருதுகோளை மேம்படுத்தி மீண்டும் சோதிக்க வேண்டும்.

அரசாங்கம் அப்படிச் செயல்படுவதில்லை. விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் விடாது கடைப்பிடிக்கும் இந்த வழியைப் பின்பற்ற அரசாங்கம் பெரும்பாலும் அஞ்சும். ஏனென்றால், நாங்கள் தவறு செய்தால் அது செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இருக்கும். இந்த அபாயத்தைத் தவிர்க்கவே விரும்புவார்கள். நான் வேறு விதமாக யோசிக்கிறேன். நமது நடைமுறைகளை மதிப்பீடு செய்யும் தைரியம் நமக்கு வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சில வழிமுறைகள் வேலை செய்யவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதன் செயல்முறை வெற்றியை மதிப்பிடுவது, பாரம்பரிய அளவீடாக இருக்கக் கூடாது, வெற்றியின் அளவீடாக இருக்க வேண்டும். புதிய செய்முறை, புதிய அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

எனது Back-on-Track Initiative முயற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை சான் ஃபிரான்சிஸ்கோவில் சோதித்தேன். இப்போது அமெரிக்க நீதித்துறை அதைச் சட்ட நிர்வாகத்தில் புதிய முன்மாதிரிப் புனைவு என்பதாக அங்கீகரித்துள்ளனர்.

அனு: புதிய எண்ணங்களைச் செயல்படுத்தும் உங்கள் தைரியம் கேட்கவே நன்றாக இருக்கிறது. தனது அரசியல் எதிர்காலத்தைக் கரு, இடர்ப்பாடுகளுக்கு அஞ்சி, புதியதாக எதையும் செய்யாதவர்கள் நிறைந்த சூழலில் நீங்கள் துணிச்சல் காட்டியிருக்கிறீர்கள்.

கமலா: உண்மை. நான் பார்க்கும் கொடுமையான நிதர்சனம் என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மறுதேர்தலுக்கு ஆசைப்படுகிறவர்கள், அரசியல் ரீதியான அபாயங்களுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல், வழக்கமானதையே செய்துகொண்டிருப்பார்கள் என்பதுதான். புதியதைச் செய்தால் சில தவறுகள் நேரலாம், அவற்றுக்குத் தேர்தல் காலத்தில் விளக்கம் தர நேரும்.

அனு: இந்திய-அமெரிக்கர்கள் அதிகமாக அரசியலில் காணப்படவில்லை. கலிஃபோர்னியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள், நான், சுஜா லோவந்தால் (லாங் பீச்) ஆகிய மூவருமே தமிழ் சமுதாயப் பின்னணி கொண்டவர்கள்! உள்ளூரிலும் தேசீய அளவிலும் எப்படி இன்னும் அதிக எண்ணிக்கையில் இந்திய-அமெரிக்கர்களை, குறிப்பாகப் பெண்களை, ஈடுபடுத்தலாம். இளைய தலைமுறையினர் மிகவும் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். அவர்களைப் பொதுச் சேவைக்கு இழுப்பது எப்படி?

கமலா: இதற்கென்று ஒரு இயக்கம் தேவை. எந்த இயக்கமும் ஓரிடத்தில் தொடங்கி நம்பிக்கையோடு வளர்ச்சி அடையும். இதற்கு நாம் மூவரும் நல்ல முன்னுதாரணங்கள் ஆக வேண்டும்; எப்படி சாதிப்பது என்று செய்து காட்ட வேண்டும்.

ஒன்றைச் சாதிக்க மிகுந்த தீவிரம் வேண்டும், ஆனால் நீ சிறுபான்மை சமூகத்தில் இருக்கிறாய் என்றால் உனக்கு அதைச் செய்ய மிகுந்த துணிச்சல் வேண்டும். வேறொருவர் அதைச் சாதித்திருக்கிறார் என்று பார்க்கும் போது உனக்கும் நம்பிக்கை வருகிறது. அதுதான் எதார்த்தம்.

எந்த இனத்துப் பெண்ணானாலும் சரி, நிதி திரட்டுவது எப்படி என்பதை அறிய வேண்டும். கேட்கக் கூசுகிறதா? ஆமாம். ஆனாலும் நான் அதைப் பற்றிப் பேசித்தான் ஆக வேண்டும். நான் வளர்ந்து வந்த காலத்தில் பெண்கள் பணத்தைப் பற்றியே பேசக்கூடாது. போதாக்குறைக்கு, என்னைச் சுதந்திரப் பெண்ணாக வளர்த்தார்கள், அதனால் யாரிடமும் பணத்துக்குக் கைநீட்டக் கூடாது (சிரிக்கிறார்). ஆனால் தேர்தலில் வெற்றி பெற ஒரு நல்ல தொகையைத் திரட்டியே தீர வேண்டும். இளம்பெண்களிடம் தேர்தலுக்கு நிற்பதைப் பற்றிப் பேசுகையில் நான் சந்தித்த, அவர்களையும் வருத்தும், இந்த மனக்குழப்பத்தைப் பற்றி எடுத்துச் சொல்வேன். “இதோ பார், நீ ஒன்றும் யாரிடமும் எனக்கு ஒரு ஜோடிக் காலணி வாங்கிக்கொடு என்று கேட்கவில்லை. தெளிவாக யோசி” என்று சொல்வேன்.

அனு: நல்ல வருவாய் தரும் ஒரு தொழிலைக் கிடப்பில் போட்டுவிட்டு அரசியலில், பொதுச் சேவையில் ஈடுபடுடப் பொதுவாகத் தயங்குவார்கள். இந்தத் தயக்கத்திலிருந்து வெளியே வருவது எப்படி? உங்கள் அனுபவம் என்ன?

கமலா: ஆமாம். ஒரு வேட்பாளரின் பலம், இவர் அந்தப் பதவியை நன்றாகச் செய்வாரா என்கிற அளவையால் அளக்கப்படுவதில்லை. தேர்தலில் ஜெயிப்பாரா என்ற அளவையால் அளக்கப்படுகிறது. ஜெயிப்பதற்குத் தேவையான ஏராளமான நிதியை இவரால் திரட்ட முடியுமா என்பதால் அளக்கப்படுகிறது. அவ்வளவு கடினம் அது.

அவரை மக்கள் அறிய வேண்டும். நீங்கள் தனியார் துறையில் இருக்கலாம் அல்லது வீட்டிலேயே இருக்கும் அன்னையாக இருக்கலாம், சிறிது நேரம் ஒதுக்கிச் சமுதாயத்துக்குச் சேவை செய்ய வேண்டும். எந்தச் சமுதாயத்துக்கு நீங்கள் பணி செய்கிறீர்கள் அது நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள், எப்படிப்பட்டவர், எப்படி இருக்கிறீர்கள், உங்களது உந்துசக்தி என்ன என்பவற்றை அறிய வேண்டும்.

அனு: முடிப்பதற்கு முன்னால் ஒரு வார்த்தை. அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு என்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. அதற்கு எங்களால் என்ன செய்யமுடியுமோ அதை நிச்சயம் செய்வோம். விரைவிலேயே அந்த வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

கமலா: இப்படிச் சொன்னதற்கு நன்றி. ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இப்போது நான் பெரிய போர்க்களத்தில் இருக்கிறேன். தேர்தலுக்கு 56 நாட்களே உள்ள நிலையில் இருவரும் கிட்டத்தட்ட சமநிலையில் இருக்கிறோம். வரும் நவம்பர் தேர்தலில் வெற்றி பெறுவது பெரிய யுத்தமாக இருக்கப் போகிறது. கண்முன்னால் இருப்பதைப் பார், அடுத்ததைப் பிறகு பார்க்கலாம் என்றுதான் எனக்குக் கற்பித்திருக்கிறார்கள்.

அனு: நன்றி, குட்லக்.

கமலா: மீண்டும் பேசலாம். உங்கள் ஆதரவு எனக்குப் பெரிய பலம். நன்றி.

உரையாடியவர்கள்: அனு நடராஜன், மேதா ஸ்ரீதர்

© TamilOnline.com