அனு நடராஜன்
வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஃப்ரீமான்ட் நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் மறுதேர்தல் கோரும் திருமதி. அனு நடராஜன் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரச் சரிவு, சமூகக்குற்றங்கள், அடிப்படை வசதிகள், தனிமனிதப் பாதுகாப்பு எனப் பிரச்சனைகளைப் பற்றிய தெளிவான கருத்துக் கொண்டிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்புகளையும் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார். ஃப்ரீமான்ட் நகர்மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் வளர்ந்தாலும் வீட்டில் தமிழ் பேசும் அனு, கட்டிட வடிவமைப்பில் (architecture) இளங்கலைப் பட்டமும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நகரத் திட்டவியல், நகர வடிவமைப்பியல் (urban planning and urban designing) முதுகலைப் பட்டமும் பெற்றவர். கணவர் சுந்தரம் மற்றும் ஏழு வயது மகள் ப்ரணாலியுடன் வசித்து வருகிறார். தென்றலுக்காக நித்யவதி சுந்தரேஷ் (கிளை முதல்வர், CTA தமிழ்ப்பள்ளி, ஃப்ரீமான்ட்) அவரோடு உரையாடியதிலிருந்து சில பகுதிகள்....

***


நித்யவதி: நீங்கள் அரசியலுக்கு வரக் காரணம் என்ன?
அனு: என் படிப்பு, என் அம்மா. அவர் பொதுப் பிரச்சனைகளில் மிகுந்த அக்கறை கொண்டவர். களப்பணியாளர். எனக்குச் சிறு வயதாக இருக்கும்பொழுதே அம்மா பெங்களூரு ஜயநகரில் குழந்தைகளுக்கான ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதில் குழந்தைகளின் பிரச்சனைகளை அலசுவது, தீர்வு காண்பது என்றிருந்தார். அதற்கு நான் தலைவராக இருந்தேன். என் பொதுவாழ்வின் விதை அங்குதான் தூவப்பட்டது.

கே: நகர்மன்றம், அதன் உறுப்பினர் செயல்பாடு குறித்துச் சொல்லுங்கள்...
ப: அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு நகர்மன்றம் உள்ளது. அதற்கு ஒரு மேயரும் நான்கு உறுப்பினர்களும் இருப்பார்கள். நகர மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் தொகையைக் கொண்டு முக்கியத் திட்டங்களை வகுத்து நகர்மன்றம் அவற்றைச் செயல்படுத்துகிறது. நகர மேம்பாட்டுக்கான தொலைநோக்குத் திட்டங்களை வகுத்தல், நிலப்பகுதிகளைச் சரியாகப் பயன்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு வசதி ஆகியவற்றையும் நகர்மன்றம் செய்கின்றது. இத்திட்டங்களை அமுல்படுத்த ஆட்களை நிர்ணயித்தல், தினசரி நடவடிக்கைகளை கண்காணித்தல் ஆகிய அலுவல்களை மேயர் மேற்கொள்கிறார்.

கே: ஃப்ரீமான்ட் நகர மேம்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு? வேறு என்னென்ன வருமானம் நகர்மன்றத்துக்குக் கிடைக்கிறது?
ப: ஒதுக்கப்பட்ட நிதி 250 மில்லியன் டாலர். அடுத்த 10 வருடங்களில் ஃப்ரீமான்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளில் வகுத்து வைத்திருக்கிறோம். சரியான சாலைகள், புதிய ரயில் நிலையம் (bart station), உணவகங்கள், நல்ல பள்ளிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், வணிக மையம் (civic center), வர்த்தகநகர மையம் (downtown) ஆகியன இதில் அடங்கும். மக்கள் செலுத்தும் சொத்துவரியில் ஒரு டாலருக்கு 15 செண்ட் நகர்மன்றத்துக்குக் கிடைக்கிறது. நகர மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒதுக்கீட்டில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

கே: ஃப்ரீமான்ட் பள்ளிகளின் நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ப: பள்ளிகளின் நிர்வாகத்திற்கெனத் தனியே வாரியம் உள்ளது. கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதி, வரவு செலவுத் திட்டம், செயல்பாடு ஆகியவற்றில் தலையிடும் உரிமை நகர்மனறத்துக்குக் கிடையாது. அவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முடியும். நாங்கள் செய்வதை அவர்களும், அவர்கள் செய்வதை நாங்களும் புரிந்துகொண்டு ஒத்துழைக்கிறோம்.

கே: ஃப்ரீமான்ட் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதே?
ப: உண்மைதான். அது விரிகுடாப்பகுதி முழுமைக்குமான பிராந்தியப் பிரச்சனை. ரயில் (bart), பேருந்து போன்ற பொதுஜனப் போக்குவரத்து வசதிகளை அதிகம் பயன்படுத்தினால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பிருக்கிறது.

கே: ஃப்ரீமான்ட் நகரில் அதிகமாகக் காணப்படும் சிவப்பு விளக்குத் தானியங்கிக் கேமராக்கள் பற்றிச் சொல்லுங்கள்....
ப: அது வந்த பிறகு விபத்துக்கள் குறைந்திருக்கின்றன. மக்களின் பாதுகாப்புக்காக ஏற்பட்டதுதான் அது. நானும் ஒருமுறை டிக்கட் வாங்கியிருக்கிறேன் (சிரிக்கிறார்).

கே: Federal Stimulus நிதியால் என்னென்ன செய்துள்ளீர்கள்?
ப: நூலகங்கள் அனைத்திலும் சூரிய மின்சக்திச் (solar energy) சாதனங்கள் அமைத்திருக்கிறோம். மக்களிடையே மின்சார சிக்கனத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். மூன்று புதிய தீயணைப்பு நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

கே: சவால்களாக எவற்றை நினைக்கிறீர்கள்?
ப: தவறான செய்திகளைக் கேட்டு மக்கள் எடுக்கும் அவசர முடிவுகளும், எதிர்ப்புகளும் தான். NUMMI தொழிற்சாலை இருந்த இடத்தில் விளையாட்டரங்கம் வருவதாக கேள்விப்பட்டு மக்கள் காட்டிய எதிர்ப்பு இதற்கு ஒரு உதாரணம். எங்களிடம் நேரடியாகப் பேசி, உண்மையை அறிந்திருக்கலாம். பேச்சு வார்த்தை நல்ல தீர்வுக்கு வழி வகுக்கும். அவசரப்பட்டு வருகிற எதிர்ப்பு சமாளிக்கச் சற்று கடினமானதே.

கே: பொருளாதாரச் சரிவின் பாதிப்புக்கள் என்னென்ன?
ப: பொருளாதாரச் சரிவு மக்களைப் பெரிதும் பாதிக்காதவாறு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். காவல் துறை, தீயணைப்பு, நகர நிர்வாகம், ஆகியன நகர்மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பில் அடங்கும். மக்களின் எண்ணிக்கையோடு காவலர் எண்ணிக்கையை ஒப்பிட்டால், மற்ற நகரங்களை விட நமது காவலர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 80% மக்களின் பாதுகாப்புக்குச் செலவிடப்படுகிறது. 10 வருடங்களுக்கு ஒருமுறை வெட்டப்பட்ட சாலையோர மரங்கள் இனி 13 வருடங்களுக்கு ஒருமுறை வெட்டப்படும். நகர்மன்றத்தில் இதுவரை வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்தவர்கள் தற்பொழுது நான்கரை நாட்கள் வேலை செய்கின்றனர்; வெள்ளிக்கிழமைகளில் அரைநாள் கட்டாய விடுப்பு (furlough) தரப்பட்டுள்ளது. NUMMI தொழிற்சாலை மூடியது நமக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டொயடாவுடன் பலமுறை பேச்சு நடத்தியும் அத்தொழிற்சாலை மூடப்பட்டது வருந்தத்தக்கது. அந்த இடத்தில் தற்போது டெஸ்லாவும் (Tesla) புதிய ரயில் நிலையமும் வரவிருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கும் செய்தி.

கே: பொதுத்தளங்களில் அமெரிக்க-இந்தியர்களின் பங்கேற்பு எப்படி உள்ளது?
ப: கல்வியிலும், பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்திலும் பங்கெடுக்கிறார்கள். அதே சமயம் சமூகம் பற்றி நிறையத் தெரிந்திருந்தும் அது குறித்த நடவடிக்கைகளில் பங்கெடுக்க அக்கறை காட்டுவதில்லை. இங்குள்ள இந்தியர்கள் அரசியலில் அதிகம் பங்கேற்க வேண்டும், அரசியலிலும் நிர்வாகத்திலும் மாற்றங்களைக் கொண்டுவருவதில் முனைந்து செயல்பட வேண்டும். என்னுடன் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைய தலைமுறை இந்தியர் அரசியலிலும், சமூகப் பிரச்சனைளிலும் அக்கறை காட்டுவதும் பங்கெடுப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.

கே: ஃப்ரீமான்ட் நகர வளர்ச்சிக்கான உங்கள் எதிர்காலக் கனவுகள் குறித்து...
ப: ஃப்ரீமான்டில் 10 சதவீதம் ஆசிய இந்தியர்கள் உள்ளனர். 150 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அமெரிக்காவிலேயே மக்கள் வகைப்பாடு (diversity) அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று ஃப்ரீமான்ட். பசுமையாகவும், மாசில்லாத நகரமாகவும் இதை மாற்ற வேண்டும். தொழில்முனைவோர் புதிய தொழில்கள் துவங்க வசதிகள் செய்து தர வேண்டும். இதன்மூலம் புதிய தொழில்நுட்ப முனைவோர்கள் முதலீடு செய்யவும் வேலைவாய்ப்புகள் பெருகவும் வசதி ஏற்படுத்துவது முக்கியம் ஆகும்.

குழந்தைகள், முதியவர், இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லாத் தரப்பு மக்களுக்கும் வசதியாகவும் பாதுகாப்புடனும் வாழ ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்பது என் இலக்கு.

கே: மக்களுக்குக் கூற விரும்புவது என்ன?
ப: 2 இடங்களுக்கு 10 வேட்பாளர்கள் நிற்கின்றனர். 80,000 முதல் 100,000 டாலர் வரை செலவழிகிறது. ஓட்டு உரிமையுள்ளவர்கள் உங்கள் ஒட்டுரிமையைப் பயன்படுத்துங்கள். கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும் என நினையுங்கள். நான் ஒரு இந்தியர் என்பதற்காக அல்லாமல், நான் இதுவரை என்ன செய்திருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு ஓட்டுப்போடுங்கள். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக உள்ளேன்.

உரையாடல்: நித்யவதி சுந்தரேஷ்

***


எமது சாதனைகள்

நகரக் கவுன்சிலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைச் சரியாக, நல்ல முறையில் உபயோகித்து இருக்கிறோம். '20 ஆண்டுகளில் ஃப்ரீமான்ட்' என்ற தொலைநோக்குத் திட்டம் வகுத்திருக்கிறோம். புதிய ரயில் நிலையம் (சான் ஹோசே வரை) ஏற்படுத்த அனுமதி வாங்கியிருக்கிறோம். கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கின்றது. .ஃப்ரீமான்ட் எலிசபெத் பூங்காவிற்குள் நீர்-விளையாட்டுப் பூங்கா (water park), ஓக்லேண்ட்டில் ஒரு பொழுதுபோக்குப் பூங்கா ஆகியவற்றை அமைத்திருக்கிறோம். 110 மில்லியன் டாலர் செலவில் overpass, underpass ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் சாலைகளைச் செப்பனிடும் பணி நடந்து வருகிறது. உள்ளூர்ப் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் கருதி நவீன வர்த்தக மையம் (civic center) உருவாக்கவும், அதையொட்டிப் பல உணவகங்கள் திறக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனு நடராஜன்

© TamilOnline.com