வை.மு. கோதைநாயகி, டி.பி. ராஜலட்சுமி, குமுதினி வரிசையில் முக்கியமான பெண் எழுத்தாளராக மூன்று தலைமுறைகள் கடந்து எழுதிக் கொண்டிருப்பவர் அநுத்தமா. இயற்பெயர் ராஜேஸ்வரி. சென்னையை அடுத்த நெல்லூரில் ஏப்ரல் 16, 1922 அன்று அநுத்தமா பிறந்தார். தந்தை சேஷகிரி ராவ் வனத்துறை அதிகாரி. அடிக்கடி பணி மாற்றல் நேரிட்டதாலும், பள்ளி வசதிகள் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிக்க நேர்ந்ததாலும் பத்துவயதுக்கு மேல்தான் அநுத்தமாவின் கல்வி தொடங்கியது. 14 வயதில் திருமணம். கணவர் பத்மநாபன் மின்சாரத் துறையில் பணியாற்றி வந்தார். மணமானதால் படிப்புத் தடைப்பட்ட போதும், சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, புகுந்த வீட்டின் உறுதுணையுடன் மேல்படிப்பைத் தொடர்ந்தார். மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
தனக்குத் தோன்றிய ஒரு சம்பவத்தை அநுத்தமா கதையாக எழுதி வைக்க, யதேச்சையாக அதைப் படித்த உறவினர் ஒருவர் அதைக் கல்கிக்கு அனுப்பி வைக்க, 'அங்கயற்கண்ணி' என்ற அச்சிறுகதை கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று வெளியானது. தீவிரமாக எழுதத் தொடங்கினார். மாமனார் சூட்டிய 'அநுத்தமா' என்ற புனைபெயருடன் இவரது கதைகள் தொடர்ந்து பல இதழ்களில் வெளியாகத் தொடங்கின. பெண்கள் வெளியே வருவதே கடினம் என்றிருந்த காலத்தில் கணவர், மாமனார் என்று புகுந்த வீட்டினரின் உறுதுணையோடு நிறைய எழுத ஆரம்பித்தார்.
கி.வா.ஜ. கலைமகளில் இவரது எழுத்துக்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தினார். அநுத்தமாவின் முதல் நாவல் 'ஒரே ஒரு வார்த்தை'. இதைத் தமிழில் வெளியான முதல் மனோதத்துவ நாவல் என்கிறார் நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தி.ஜ. ரங்கநாதன். பின்னர், 1949ல் வெளியான 'மணல் வீடு' நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு கிடைத்தது. 'ஜயந்திரபுரத் திருவிழா', 'இன்பத்தேன், 'கலைந்த கனவு', 'சுருதி பேதம்', 'பிரேம கீதம்', 'ஆலமண்டபம்', 'பூமா' 'தவம்', 'ஒன்றுபட்டால்' எனப் பல நாவல்களை எழுதினார். இன்றளவும் பெருமளவு விற்பனையாகிக் கொண்டிருக்கும் 'நைந்த உள்ளம்' நாவல் பிரபலங்கள் பலரது பாராட்டைப் பெற்ற ஒன்று. தனது இலங்கைப் பயணம் உட்படப் பல அனுபவங்களை அடிப்படையாக வைத்து அந்நாவலை எழுதியிருந்தார் அநுத்தமா. அநுத்தமாவின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த நாவல் 'கேட்ட வரம்'. விழுப்புரம் அருகே உள்ள, தனது புகுந்த ஊரான 'கேட்டவரம் பாளையம்' என்ற ஊரில் நடக்கும் ராம நவமி விழாவையும், அதையொட்டிய சம்பவங்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட அந்நாவல், வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களால் பாரட்டப்பட்டதுடன், காஞ்சி மகாப் பெரியவரால் தொட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பெருமையையும் உடையது. இருபத்தியிரண்டுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கும் அநுத்தமா, முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'ஜகன்மோகினி' இதழில் இவர் எழுதிய 'மாற்றாந்தாய்' சிறுகதை தங்கப் பரிசு பெற்றதுடன், மிகுந்த பாராட்டைப் பெற்றது. 'வெள்ளி விழா', 'பணமும் பாசமும்', 'மஞ்சுளா' போன்ற இவரது கதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தகுந்தவை.
1950களின் வாழ்க்கையை, பண்பாட்டை மிகைப்படுத்தாது சித்திரிப்பதாக இவரது எழுத்துக்கள் உள்ளன. வணிக நோக்கமற்ற, யதார்த்தம் மிகுந்த எழுத்து என்று இவரது எழுத்தைச் சொல்லலாம். இவரது கதை மாந்தர்கள் யாவரும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். எளிமையானவர்கள். சமூகம், குடும்பம், வாழ்க்கை, முரண்கள், உறவுச் சிக்கல்கள் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இவரது படைப்புகள் உள்ளன. கதைமாந்தர்களின் நுண்ணிய உணர்ச்சி நிலைகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் இவர் தேர்ந்தவர். இவரது கதைகள் எளிமையானவை. மத்தியதரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது பல நாவல்களில் முன்வைத்திருக்கும் அநுத்தமா, தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கொண்டே தான் கதைகளை படைப்பதாகக் கூறுகிறார். "நான் வாழ்ந்த சூழலில், என் கண்ணில் பட்ட பிரச்சனைகளை, என்னை பாதித்த விஷயங்களை, அதற்கான தீர்வுகளோடு எழுதினேன். என்னுடைய ஒரே ஒரு வார்த்தை, நைந்த உள்ளம், பூமா, கேட்ட வரம், மணல் வீடு போன்ற பல நாவல்கள் பலரது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. அதைப் படித்து, அதன் தாக்கத்தினால் மனம் மாறி, பிரிந்த பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. என்னைத் தொடர்பு கொண்டும், கடிதங்கள் மூலமும் பலர் இவ்வாறு கூறியிருக்கின்றனர். பலரது வாழ்க்கையில் எனது கதைகள் நல்ல திருப்பங்களை உண்டாக்கியிருக்கின்றன. இதைத்தான் நான் என் எழுத்தின் வெற்றியாக, எனக்குக் கிடைத்த பெருமையாக, உயர்ந்த மதிப்பீடாகக் கருதுகிறேன்" என்கிறார்.
அநுத்தமாவின் நாவல்களுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு உட்படப் பல விருதுகள் கிடைத்துள்ளன. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் பல நூல்களை எழுதியிருக்கிறார். 'கம்பீர கருடன்', 'வானம்பாடி', 'வண்ணக்கிளி', 'சலங்கைக் காக்காய்' எனப் பறவைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்நூல்கள் சிறப்பானவை. 'கந்தனின் கனவு' என்ற சிறுவர் நூல் சிறப்பான ஒன்று. அத்துடன் வானொலிக்காகப் பதினைந்து நாடகங்களை எழுதியுள்ளார். வேலூர் புரட்சியை மையமாக வைத்து இவர் எழுதிய 'எழுச்சிக் கனல்' சரித்திர நாடகம் பலரால் பேசப்பட்ட ஒன்று. படைப்பிலக்கியத்தில் மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பிலும் இவர் தேர்ந்தவர். மானிகா ஃபெல்டன் எழுதிய 'சமூக சேவகி - சகோதரி சுப்புலட்சுமி' என்னும் ஆங்கில நூலை 'சேவைக்கு ஒரு சகோதரி' என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலம், ஹிந்தி. தெலுங்கு, சம்ஸ்கிருதம், பிரெஞ்ச், ரஷ்யன் போன்ற மொழிகள் அறிந்தவர் அநுத்தமா.
கு. அழகிரிசாமி, உ.வே.சா., ரா. கிருஷ்ணமூர்த்தி, கு.ப.ரா., கி.வா.ஜ., கா.ஸ்ரீ.ஸ்ரீ., காண்டேகர் ஆகியோரது எழுத்துக்கள் தனக்கு முன்மாதிரியானவை என்று கூறும் அநுத்தமா, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன் போன்றோரது படைப்புகள் தன்னைக் கவர்ந்தவை எனக் கூறுகிறார். "எழுத்துக்களில் பிடிக்கும், பிடிக்காது என்று எதுவும் இல்லை. அப்படிச் சொல்வதும் மிகக் கடினம். அது அதற்கு என்று ஒரு சுவை இருக்கிறது. அந்தச் சுவைகள் எனக்குப் பிடிக்கும். ஆனாலும் எனக்கு மிக மிகப் பிடித்த எழுத்தாளர் என்று கேட்டால் அது சமீபத்தில் மறைந்த ஆர். சூடாமணிதான். அவரது படைப்புகள் எல்லாம் மிகச் சிறப்பானவை" என்கிறார்.
தற்போதைய சிறுகதைச் சூழல் குறித்து, "அப்போதெல்லாம் பத்திரிகைகளில் நிறையச் சிறுகதைகள் வந்தன. இப்போது இல்லை என்றால் அதற்குக் காரணம் தற்போதைய சமூகச் சூழல்தான். மிகவும் பரபரப்பான சூழலில் தற்போது வாழ்க்கை இருக்கிறது. ஆற அமர உட்கார்ந்து சிந்திக்கவோ, தாக்கத்தை ஏற்படுத்தவோ யாருக்கும் போதிய நேரம் இல்லை. அதனால் எளிமையான விஷயங்களையே விரும்புகிறார்கள், ஜூஸ் சாப்பிடுவது போல. மற்றுமொரு முக்கியமான விஷயம், அந்தக் காலத்தில் இதுபோன்ற உலகளாவிய தொடர்புகள் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்போம். ஆனால் தற்போது கணினி, இண்டர்நெட் வந்த பிறகு உலகில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது மிக எளிதாகி விட்டது. அதனால் உலகத்தில் இருக்கும் புதுப்புது விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் அதிகமாகி விட்டது. அதற்கேற்றவாறு பத்திரிகைகளும் அவற்றிற்கே முக்கியத்துவம் தருகின்றன." என்கிறார். தனது நூல்களின் மீதான விமர்சனம் குறித்து, "விமர்சனம் என்று எடுத்துக் கொண்டால் அதில் பல்வேறு விருப்பு, வெறுப்புகள் இருக்கும். ஆனால் எனது நூல்களினால் அனுபவப்பட்டவர்களே, அதனால் பயனடைந்தவர்களே பாராட்டும் போது அதையே சிறந்த மதிப்பீடாக நான் கருதுகிறேன்." என்கிறார்.
இலக்கியம் என்பது ஒரு சமூகத்தினுடைய பண்பாட்டினுடைய வெளிப்பாடு என்று கூறும் அநுத்தமா, என் எழுத்துக்கான நோக்கம் என்று சொன்னால் நான் விளம்பரத்துக்காக எழுதவில்லை. பணம், புகழ் என்று எந்த வித உள்நோக்கமும் இல்லை. பின் ஏன் எழுதினேன் என்றால் அனுபவப் பகிர்விற்காகத் தான். என்னைப் பாதித்த விஷயங்களை, அனுபவங்களை, தீர்வுகளோடு பகிர்ந்து கொள்வதுதான் என் எழுத்தின் நோக்கம் என்கிறார்.
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய அல்லயன்ஸ் பதிப்பகம், அநுத்தமாவின் கதைகளை மீள்பிரசுரம் செய்தபோது, உடனடியாக அவை விற்றுத் தீர்ந்தன என்பதே அவரது படைப்புகளுக்கான வரவேற்புக்குச் சாட்சி. எழுத்தாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் என்ற பரிமாணங்கள் கொண்ட அநுத்தமா, பெண்ணிய எழுத்தாளர் என்ற வகையிலும், தமிழின் மிக முக்கிய மூத்த எழுத்தாளர் என்ற வகையிலும் சிறப்பிடம் பெறுகிறார். 88 வயதைக் கடந்து, இன்றும் மிகச் சுறுசுறுப்பாக நாவல்கள், கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார் இந்தத் தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்.
அரவிந்த் |