தென்றல் பேசுகிறது
1982-ல் டெல்லியில் ஏஷியட் நடைபெற்றது. அப்போதிருந்த அரசு நல்ல விளையாட்டு அரங்கங்களைக் கட்டி, ஏஷியன் கேம்ஸ் வில்லேஜ் என்ற ஒன்றையும் விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கி, மிகச் சிறப்பாக அந்தப் போட்டிகளை நடத்தி நல்ல பெயர்

வாங்கியது. 1982ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் இந்தியா இந்தக் கால இடைவெளியில் பொருளாதார, தொழில்நுட்ப, கட்டமைப்பு, பொறியியல் துறைகளில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. ஆனாலும் காமன்வெல்த் கேம்ஸை, ‘காமன்வெல்த் ஷேம்ஸ்’

என்று ஒரு பத்திரிகை வர்ணிக்கும் அளவுக்கு மிகக் கீழான நிலைக்குப் போய்விடக் காரணம் என்ன? தேசப்பற்றின்மை. தாம் செய்வதில் பெருமிதம் இல்லாமை. உலக அளவில் இந்தியா அவமானப் பட்டாலும் தனது வருமானம் பெரிதாக இருந்தால் போதும் என்று

ஒப்பந்தக்காரரும், அரசியல் வாதியும் நினைப்பது. இந்த அவமானத்தின் வெளிப்படையான முகமாக சுரேஷ் கல்மாடி தென்பட்டாலும் அவர் வெறும் மிதக்கும் பனிக்கட்டியின் நுனிதான். பல துறைகளிலும், பல மட்டங்களிலும், லஞ்சம், பொதுவாழ்வில் ஒழுக்க

மின்மை நாடு முழுக்க மிக ஆழமாகச் செல்கிறது. ஆனால் மக்களில் பெரும்பான்மையினர் இந்த விஷச்சூழலைத் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்வது எப்படி என்று நினைக்கிறார் களே அல்லாமல், மாற்ற நினைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

சுயலாபம் என்னும் பலி பீடத்தில் கட்சி, கொள்கை, நற்சிந்தனை எல்லாமே காவு கொடுக்கப்படுவது தற்காலத்தின் விபரீத விபத்து. காந்தி பிறந்த இந்த மாதத்தில் இதற்கு மாற்று என்ன என்பதைப் பற்றி யோசிப்பது, செயல்படுவது உலகுக்கு நல்ல திருப்பமாக

அமையும்.

சீனா தனது பொருளாதார பலத்தை, பெரும் சந்தையின் பலத்தை, உலகின் பிறநாடுகளைச் சற்றும் மதிக்காமல், அசுரத்தனமாகக் காட்டி வருவதை நாம் இங்கே முன்னரும் பலமுறை எடுத்துக் கூறியதுண்டு. அருணாசலப் பிரதேசத் தைத் தன்னுடையதென்று அது

கூறத் தொடங்கிய துமே அதை வாசகர்களின் கவனத்துக்குக் கொணர்ந்தோம். இப்போது, ஆப்பிள் நிறுவனத்தின் கையை முறுக்கி, அருணாசலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்று ஐ-போனின் வரைபடத்தில் காண்பிக்க வைத்திருக்கும் செய்தி வெளியாகி

யுள்ளது. இது அண்மைக் கால ஆக்கிரமிப்பு. இதையும் காஷ்மீர் பிரச்சனையைப் போல வளரவிட்டால், இந்தியாவுக்கு இது மற்றொரு தலைவலி ஆகிவிடும். இந்திய அரசைவிடச் சீன அரசின் செல்வாக்கு ஆப்பிள் நிறுவனத்தின் மீது அதிகம் இருப்பதையும் இது

காண்பிப்பதாகக் கொள்ள முடியும். எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவே முக்கியம் ஆப்பிள் நிர்வாகத்துக்குச் சரியானதை எடுத்துப் புரிய வைப்பது. வணிக அம்சங்கள்தாம் இதில் முதல்நிலை வகிக்கிறது என்பதால், உலகெங்

கிலும் உள்ள இந்தியர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களை வாங்கமாட்டோம் என்று மிரட்டினால் கூடப் போதும், அதற்கு நல்ல புத்தி வந்துவிடும். அப்படிப்பட்ட தேசபக்தி நமக்கு உண்டா?

"மக்கள் தமக்குத் தகுதியான அரசைப் பெறுகிறார்கள்" என்று சொல்வதுண்டு. "குடி உயரக் கோன் உயரும்" என்றார் ஔவையார். ஆக, நாம் எத்தகைய அரசினால் எவ்வாறு ஆளப்படுகிறோம் என்பதில் வாக்காளரின் பங்கு மிக முக்கியமானது. தான்

ஆதரிக்கும் கட்சியின் வேட்பாளருக்கு வோட்டுப் போடுவதா, நல்ல பணி செய்பவருக்கு வாக்களிப்பதா என்னும் தர்ம சங்கடம் புதிதல்ல. இதன் மறுபக்கம் என்னவென்றால், இந்திய-அமெரிக்கர்கள் சமுதாய நீரோட்டத்திலிருந்து விலகித் தானுண்டு, தன் வேலை,

தன் குடும்பம் உண்டு என்கிற நிலை மாறி வருவதுதான். இந்த மாற்றத்தில், தமிழ்ப் பின்னணி கொண்டவர்கள், அதிலும் பெண்கள், முதலடி எடுத்து வைத்திருப் பது மகிழ்ச்சியைத் தருகிறது. கலிஃபோர்னியாவின் அட்டார்னி ஜெனரல் பதவிக்குப் போட்டியிடும்

கமலா ஹாரிஸ், ஃப்ரீமான்ட் நகரக் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் அனு நடராஜன் ஆகியோர் இதில் அடங்குவர். தமிழர்கள் என்பது மட்டுமே இல்லாமல், தத்தமது நிர்வாகத் திறன், புதிய நோக்கு, மாற்றங்கள் கொண்டு வருவதில்

காட்டும் ஆர்வம் என்கிற தகுதிகளையும் இவர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இவர்களுடனான நேர்காணல்கள் இவர் களை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

அதேபோல, திரைப்படத் துறையில் ஒரு பெண் பாடலாசிரியராக நுழைந்து, தூய தமிழ், இரட்டை அர்த்தம் தவிர்த்தல் போன்ற லட்சியங்களோடு செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார் கவிஞர் தாமரை. அவரது நேர்காணலும் சுவையானது. அடைந்த உயர்விலும்

வீழ்ச்சியிலும் நம்மை அதிரவைக்கும் வாழ்க்கை கொண்டவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். அரை நூற்றாண்டுக்கு முன்னரே நவீனமாகச் சிந்தித்த பெண் எழுத்தாளர் அநுத்தமா. வாழ்க்கை, கதைகள், கட்டுரைகள் என்று ஒரு மீண்டும் ஒரு சுவையான கதம்பத்தை

உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.

வாசகர்களுக்கு காந்தி ஜெயந்தி, நவராத்திரி நல்வாழ்த்துகள்!


அக்டோபர் 2010

© TamilOnline.com