ஸ்நேஹா பராநந்தி கர்நாடக இசை அரங்கேற்றம்
ஆகஸ்ட் 7, 2010 அன்று ஸ்நேஹா பராநந்தியின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடைபெற்றது. குரு ஸ்லோகம், தோடியில் அமைந்த வர்ணத்தைத் தொடர்ந்து ’மஹா கணபதிம்’ (நாட்டை) கீர்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடாணா ராகத்தின் சாயலைக் கொண்ட தீக்ஷிதரின் ‘ப்ருஹஸ்பதே'யையும், சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த ‘நின்னே நிம்மதி’ பாடலையும் மிக இனிமையாகப் பாடினார் ஸ்நேஹா. ‘சுகுணமுலே’ என்னும் சக்ரவாகக் கிருதியைப் பாடி, பின் கல்யாணியில் ஆலாபித்து, ’நிதி சால சுகமா’வைப் பாடியது அருமை. இறுதியாகத் துக்கடாவில் ‘பாவன குரு’ என்னும் ஹம்ஸநந்தி பாடல், ‘பாக்யாது லக்ஷ்மி பாரம்மா’ என்னும் புரந்தரதாஸர் கிருதி, ’ஜயதி ஜயதி பாரத மாதா' ஆகியவற்றுக்குப் பின், பத்ராசல ராமதாஸ் இயற்றிய மங்களம் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தது நேர்த்தி. ஸ்நேகாவின் குரு கல்யாணி சதானந்தம் அவர்களை மிகவும் பெருமைப்பட வைத்த கச்சேரி இது என்று சொல்லலாம். கிருஷ்ணா குட்டியின் வயலினும், டாக்டர் சுதாகரின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.

இந்தக் கச்சேரியை சங்கரா கண் அறக்கட்டளைக்கு அர்ப்பணித்ததன் மூலம் $ 30,000 நிதி திரட்டி நற்பணிக்கு அளித்தது பாராட்டத் தக்கது.

இந்திரா பார்த்தசாரதி,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com