'நிருத்யகல்யா' வழங்கும் ‘காஸ்மிக்ஸ்’
செப்டம்பர் 19, 2010 அன்று நிருத்யகல்யா நடனக் குழுவின் இரண்டாம் ஆண்டு நடன நிகழ்ச்சியான 'காஸ்மிக்ஸ்', சான்டா கிளாராவில் நடைபெற உள்ளது. பீனிக்ஸ் நகரின் 'ஸ்ருஷ்டி' நடனக் குழுவும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்குகின்றது. சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தையும் இயற்கையின் செழிப்பையும் சீற்றத்தையும் இணைத்து, பரிணாம வளர்ச்சியின் பல பரிமாணங்களை எடுத்து காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

'ஸ்ருஷ்டி' குழுவினர் நாட்டிய சாஸ்திர பாரம்பரிய நடனத்துடன் நிகழ்ச்சியைத் துவக்கி வைப்பர். பின், சர்வதேசப் புகழ்பெற்ற டாக்டர் சுமா சுதீந்திரா மற்றும் ஜெரார்ட் மச்சாடோவின் வீணை-கிடார் கலந்திசைக்கு ஒரு கலவை நடனத்தை வழங்குவர். இது காண்போரை வாழ்வின் பல நிலைகளின் வழியே அழைத்துச் செல்லும் - பிறப்பு, வாழ்வு, பிரிவு, அழிவு மற்றும் கடைசியில் முக்தி. இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய பஞ்ச பூதங்களின் பங்கு எடுத்துக் காட்டப்படும்.

நிருத்யகல்யாவின் கலை இயக்குனர் ஜனனி நாராயணனும் அவரது மாணவிகளும் இயற்கையின் பல கூறுகளின் ஆக்கல், அழித்தல் சக்திகளை எடுத்துக்காட்டும் ஒரு நடன வரிசையை வழங்குவர். ஒவ்வொரு இயற்கையின் கூறுக்கும் உள்ள தனிப்பட்ட தன்மைகைள சீனத்து ரிப்பன் நடனம், மலையாள கிராமீய நடனம், மராட்டிய மீனவ நடனம் ஆகியவற்றால் வெளிக்கொண்டு வர உள்ளனர். இதன் பின் நான்கு மிக வித்தியாசமான நடன வகைகளைக் கொண்டதாக நிகழ்ச்சியின் கடைசி அங்கம் விளங்கும்.

நிகழ்ச்சி விவரங்கள்:
நாள்: ஞாயிறு, செப்டம்பர் 19
நேரம்: மதியம் 3:00 மணி
இடம்: Mission City Center, 3250, Monroe St, Santa Clara, CA.
நுழைவுச் சீட்டு: $15
விவரங்களுக்கு வலையகம்: nrityakalya.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com