செப்டம்பர் 2010: வாசகர் கடிதம்
நான் தென்றலை விரும்பிப் படிப்பேன். தென்றலில் பிரபலங்களின் ‘நேர்காணல்’ எனக்கு மிகவும் பிடித்த பகுதி.

கவிதா ராஜேந்திரன்,
சான் டியேகோ, கலிஃபோர்னியா

*****


வழக்கம்போலத் தென்றல் ஆகஸ்ட் இதழ் மிகச் சிறப்பாக இருந்தது. தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் திரு நாகசாமி அவர்களுடனான நேர்காணல் அருமை. ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் என்ற அளவில் விட்டு விடாமல், மத்திய மாநில அரசுகள் “இந்தியாவின் சிறப்பு மிக்க வல்லுநர்கள் குழு” என்ற அமைப்பை நிறுவி டாக்டர் நாகசாமி போன்ற தனித்துவமும், அனுபவங்களும் நிறைந்த ஓய்வு பெற்ற அறிஞர்களை அந்த அமைப்பில் ஈடுபடுத்தி, அவர்தம் ஆலோசனைகளை அடுத்த தலைமுறைக்கு வழங்குவது மிக அவசியம்.

சிறுகதைகளும் மிக அருமை. ‘அடைகாக்கும் சேவல்கள்’ சிறுகதை மூலம், பெற்றோரை இழந்த குழந்தைக்கு நேசக்கரம் நீட்டி, பாசத்தை ஊட்டி வளர்க்கும் மனிதாபிமான கோணத்தில் ஓரின வாழ்க்கைத் துணைவர்களின் வாழ்க்கைக்குப் புதிய பரிமாணம் அளித்துள்ள நியூஜெர்சி ஸ்ரீதர் சதாசிவத்திற்கு வாழ்த்துக்கள்!

முத்தாய்ப்பாக இமையம் அவர்களின் ’நிஜமும் பொய்யும்’ மிகமிக அருமை. தூரங்களைக் கடந்து சில மணித்துளிகள் நம்மையும் மொட்டையம்மாளின் இருப்பிடத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டார். மொட்டையம்மாளின் வெள்ளந்தித்தனமான, யதார்த்தமான பேச்சுக்களை–உள்ளக் குமுறல்களை அதே சொல்லாட்சியில் வழங்கி, அவர் கண் கலங்கும்போது நம்மையும் கண்கலங்க வைத்து, தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்ட இமையத்திற்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்!

’முன்னோடி’ பகுதியில் உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை அவர்களைப் பற்றிய செய்திகள் மிகப் பயனுள்ளவை. அவரது புதல்வர்தான் முனைவர் ஔவை நடராசன் அவர்கள் என்பதைத் தென்றல் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி. அவரது சொற்பொழிவுகளை பலமுறை நேரில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். புலிக்குப் பிறந்தது தாயைவிடச் சீறிப்பாயும் இன்னொரு புலிதான் என்பதை நடராசன் மெய்ப்பித்து விட்டார்.

சென்னிமலை சண்முகம்,
நியூயார்க்

*****


படித்து முடித்ததும் ஒரு சோகம் கப்பிக்கொண்டு மனத்தை வாட்டி எடுத்தது. நிதானமாக உணர்வுபூர்வமாக ஒரு தாயின் கதையைச் சொன்ன நேர்த்தியைக் கண்டு பிரமிக்கிறேன். 'இமையம்' அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

ஜீவி கமிங்,
ஜார்ஜியா

© TamilOnline.com