தேர்தல்கள் வந்து விட்டன - இந்தியாவிலும், அமெரிக்காவிலும். நாடு வேறானாலும் அரசியல்வாதிகளின் அடிப்படை அணுகுமுறை ஒன்றாகத்தான் இருக்கிறது. சென்னையில் தெருக்கள் சற்றுச் சுத்தமாகியிருக்கின்றன, அனைவருக்கும் சலுகைகள் வழங்கப் பட்டிருக்கின்றன, சாலைகள் சீரமைக்கப் படுகின்றன.
அமெரிக்க அதிபர் 9/11 பேரழிவின்போது எடுத்து விட்ட அதே ஆயுதங்களை மீண்டும் தமது எதிர்க் கட்சியினர் மீது விடுகிறார். (9/11க்குச் சிறிதும் சம்பந்தமில்லாத) இராக்கின் மீது படையெடுப்பதன் மூலம் தம்மை ஒரு விரைந்து செயலாற்றும் வீரர் என்று காட்டிக் கொண்டார். இப்போதும் அதுபோல ஏதாவது 'சாதனைகள்' படைக்கத் துடிக்கிறார். அவரது உதவியாளர்கள் கூட்டம் முழுதும், இரானைப் போட்டுத் தள்ளுவதா அல்லது இந்தியாவை அமெரிக்காவின் வழிக்குக் கொண்டுவரும் சாதனைக்கு முயல்வதா என்று அலை மோதுகிறார்கள்.
அரசியல்வாதிகளுக்கு அடுத்து, இந்தியாவின் சாபக் கேடுகளில் மிகவும் முக்கியமானது, அதன் அதிகாரிகள் பெரும்பாலும் கட்சி மற்றும் சுயலாபம் ஆகிய மையங்களைச் சுற்றி வருவதுதான். அமெரிக்காவில் சிலகாலம் வரையில் இது குறைவாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக, பிற நாடுகளுடன் தொடர்புடைய வெளியுறவுத் துறை diplomatic என்ற பதத்திற்கு எடுத்துக் காட்டாகவே இருந்தது. ஆனால் அரசியல் நெருக்கடிகள் அத்துறையிலும் வர ஆரம்பித்து விட்டன. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் வரம்பு மீறிப் பேசியது ஓர் உதாரணம்.
அமெரிக்க அதிபர் மற்றும் அவரது சேக்காளிகளும் தேர்தல் ஆதாயத்துக்காக, எப்படிச் செயல்படுவது என்று காட்டுகிற முனைப்பில் ஒரு பங்கை நாட்டு மற்றும் உலக முன்னேற்றத்துக்குக் காட்டவில்லை என்பதே வருத்தம் தரும் உண்மை.
***
முன்னெப்போதையும் விட மிக அதிகமாக உலகத்தின் பொருளாதார, சமூக நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன. எனவேதான் அமெரிக்கா செய்வதைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்க முடியவில்லை. தென்றல் வாசகர்களும் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே இருப்பவரானாலும் சரி, சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருவதான முடிவில் இருப்பவரும் சரி - தமிழர், அல்லது இந்தியர் என்ற சமூக, கலாசார வட்டங்களில் நம்மைக் குறுக்கிக் கொள்ளக் கூடாது என்பது எனது வேண்டுகோள். உங்களது குழந்தைகள் வளர்ந்த பின் எத்தகைய அமெரிக்க/இந்தியாவில் வாழ நேரிடும் என்பதை யோசியுங்கள். அதைப் பற்றிச் செயல்படத் தேவையான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
America is a land of opportunity. வந்தாரை வாழ வைக்கும் நாடு. அதனால் அமெரிக்காவில் குடியேறி வாழும் அனைவர்க்கும் அந்நாட்டை வாழவைக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு.
***
அப்படி வாழவந்து சாதனை படைத்த இந்தியர்/தமிழர் பட்டியலில் பல பெண்கள் இருப்பது பெருமை தரும் ஒன்று. நமக்கு அறிமுகமான இந்திரா நூயி, சுபா பேரி, ரூபா ரங்கநாதன், சியாமளா ஹாரிஸ், அனு நடராஜன்... அவர்கள் வரிசையில் செல்வி ஸ்டானிஸ்லாஸ் சேர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம். பி. அசோகன் மார்ச் 2006 |