லக்ஷ்மி சோமசுந்தரம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் உப்புச் சத்தியாக்கிரஹத்தால் பிரபலமடைந்த வேதாரண்யத்துக்குச் சென்று, 'சர்தார்' வேதரத்தினம் அவர்கள் தொடங்கிய கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் பயிலும் பின்தங்கிய, ஆதரவற்ற மாணவியருக்குச் சேவை செய்தார். அங்கே அறிவியல் சோதனைக் கூடம்கூட கூரைக் கட்டிடத்தில் இருப்பது அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது.
அமெரிக்காவுக்குத் திரும்பிய லக்ஷ்மி, 2008ஆம் ஆண்டு பிட்ஸ்பர்கில் நடந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசீய மாநாட்டில் இதை எடுத்துக் கூறி, அந்த ஏழை மாணவியருக்காகத் தட்டேந்தவும் தயங்கவில்லை. ஓரிரு நல்ல உள்ளங்கள் பெருந்தொகையைத் தட்டில் இட்டது, அவரது நம்பிக்கையை வளர்த்தது.
ஜூன் 28, 2010 அன்று ஒரு நவீன, இரண்டு மாடி சோதனைக்கூடத்தை வேதாரண்யத்தில் தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்தபோது லக்ஷ்மியின் கனவு நனவானது. "நான் நாத்திகன். ஆனால் என்னையே 'இந்த லக்ஷ்மி தெய்வத்தின் பரிசு' என்று சொல்ல வைத்துவிட்டாள்" என்று கூறினார் அமைச்சர்.
பிலடெல்ஃபியாவில் பிரின்மார் கல்லூரி மாணவியான லக்ஷ்மி, இளம் தலைமுறை தமிழ்-அமெரிக்கர்கள் தாய்நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு நல்ல விடை, முன்னுதாரணம். |