விஜயபதி தர்ஷராஜன் கவிதைகள்
ஏன் அம்மா?
கடைகடையாய் ஏறி இறங்கி
தேடித்தேடி வாங்குகிறாய்
ஆர்கானிக்
பழங்களும், காய்களும்

ஏனோ தருகிறாய்
எனக்கு மட்டும்
பால் புட்டியும்
பவுடர் கலந்த பாலும்!

*****


காத்திருப்பு
எவ்வளவோ சீக்கிரமாகக் கிளம்பியும்
சிக்னலுக்காக காத்திருக்கும் போதுதான்
ஒரு நிமிட தாமததின் வலி உணர்ந்தேன்

பசியோடு உணவகத்தில் காத்திருக்கும்போதுதான்
ஒரு மணி நேரத்தின் பயணத்தைப் படித்தேன்

கால்களை நீட்டி, மடக்கி,
உட்கார்ந்து, சாய்ந்து, தூங்கி,
படம் பார்த்து, படித்து, படுத்து,
எவ்வளவோ செய்தும்கூட
ஒரு நாளுக்கு இன்னும்
ஒன்பது மணி நேரமெனும் அறிவிப்பில்தான்
எத்தனையோ நாட்களை வீணடித்த
பரிதவிப்பை நெஞ்சில் படம் பிடித்தேன்

இன்னும் நான்கு, மூன்று என நான்
கிளம்பும் நாட்களைக் கூட்டியே
கைரேகை தேய்க்கும் என் அம்மா

எதுக்கும் வச்சிக்கோ என
என்னிடம் எதுவுமே எதிர்பாராமல்
கொடுத்துக் கொண்டே இருக்கும் தந்தை

பிரிவின் வலியும்
நாட்களின் வேகமும்
ஈடுசெய்ய முடியாதவை
என்று வியந்து அழுதேன்

மீண்டும் என்
மூன்று வார விடுப்புக்கும்
முகத்தைப் புடவையால் துடைத்தபடி
சிரிக்க முயற்சித்து, தோற்றுப்போகும் அம்மாவையும்
மனதால் அழுதபடி ஆனால்
உதடு சிரித்தபடி
கையசைக்கும் அப்பாவையும் காண
ரொம்பவே ஆவலோடு காத்திருக்கிறேன்
அடுத்த வருட விடுப்புக்காய்.

விஜயபதி தர்ஷராஜன்

© TamilOnline.com