அதிர்ஷ்டம்
மோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். நெடுநாள் கனவு அது. டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக விஷயத்தைக் கூறி முடித்தான். அவன்வயதுப் பிள்ளைகள் பைக்கை வைத்துக்கொண்டு செய்யும் சாகசங்களையும் அதனால் விளையும் ஆபத்துகளையும் விலாவாரியாகச் சொன்னாலும், அப்பா இறுதியில் ஒப்புக் கொள்ளத்தான் செய்தார்.

அன்று மாலையே பைக்கை வாங்கியும் ஆகிவிட்டது. உடனே அதை ஓட்டிச் சென்று நண்பர்களிடம் காண்பித்து அவர்களின் பொறாமைக்கும் ஆளானான். பைக்கை வைத்துக்கொண்டு என்னென்ன வித்தைகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் குறுகிய காலகட்டத்துகுள் செய்யக் கற்றுக்கொண்டான். சென்னை மாநகரில் பைக் ஒட்டுவதே ஒரு வித்தைதானே! இளமையின் வேகம், பொறுமையின்மை. அம்மா அப்பாவின் அறிவுரைகள் அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்தாலும் அவர்கள் அருகிலில்லாத சுதந்திரம்.

ஒருநாள் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மைல் தூரத்திற்கு வாகனங்களின் தேக்கம். நண்பனின் பதிவுத் திருமணத்திற்கு சாட்சியாகச் செல்ல வேண்டிய அவசரம். வண்டியை வளைத்தும் நெளித்தும் லாவகமாக ஓட்டிச் சென்று எப்படியோ முன்வரிசையை அடைந்துவிட்டான். மேலும் நிற்கப் பொறுமையின்றி மற்ற வாகனங்கள் எதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பதை அறியவே முற்படாமல் நாற்சந்தியை விருட்டெனக் கடந்தான். அப்பொழுதுதான் குறுக்கே வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தைக் கவனிக்க நேரிட்டது. மயிரிழையில் உயிர் தப்பியதை எண்ணி கடவுளுக்கு நன்றியுரைத்தபடியே பறந்து சென்றான்.

##Caption## இரவு வீட்டில் அம்மாவிடம் தனிமையில் நடந்ததைக் கூறியபோது, “கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒண்ணும் ஆகலை. ஆயுஷ்ய ஹோமம் ஒண்ணு செஞ்சுடலாம்” என்றாள். ஆயினும் எதையோ யோசித்தவாறாகவே இருந்தவளை, “எனக்குதான் ஒண்ணும் ஆகலையே, அப்புறம் ஏன் முகத்தில் இவ்வளவு கவலை?” என்று கேட்டான்.

“இல்ல, உன்னோட அதிர்ஷ்டத்துல கொஞ்சமாவது ஆண்டவன் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கக் கூடாதான்னு தோணிச்சு” என்றாள்.

என்ன விஷயம் அப்படிச் சொல்கிறாய் என்று அம்மாவைக் குடைந்து குடைந்து கேட்டான். “விபத்துக்குள்ளான ஒரு ஸ்கூல் பஸ்சிலேயிருந்து அடிபட்ட குழந்தைகள் சிலரை வேனில் ஏற்றி, எதிர்சாரி வாகனங்கள் அனைத்தையும் மக்கள் உதவியுடன் நிறுத்தி வைத்து, மருத்துவமனைக்கு விரைந்துகொண்டிருந்த போது, திடீரென குறுக்கே பாய்ந்த மோட்டார் பைக்கால் தடம் மாறி அருகிலிருந்த மரத்தில் மோதி வேனில் சென்ற அனைவரும் பலி” என்று பேப்பரில் வந்த செய்தியைச் சொன்னாள் அம்மா. கதிர் சிலையாகிப் போனான்.

விஜி இளங்கோ,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com