நன்றிக்கு மரியாதை
பரபரப்பான மும்பை நகரம். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஒரே பரபரப்புதான். அபார்ட்மெண்டிலிருந்து காரைக் கிளப்பினான் ரகு.

“வினி என்ன பண்ற? வா சீக்கிரம்”

“ரகு, ஒரு நிமிஷம், வந்துட்டேன்” என்றபடி குழந்தை ஸ்ருதியைத் தூக்கிக்கொண்டு காருக்கு வந்தாள் வினிதா.

“இப்பவே இவ்ளோ லேட்டாச்சு, கடையெல்லாம் ஒரே ரஷ்ஷா வேற இருக்கும்” எனப் புலம்பியபடி காரைக் கிளப்பினான் ரகு.

கிளம்பிய பத்தாவது நிமிடத்தில், “ரகு... ரகு. ப்ளீஸ் ஸ்டாப். குட்டிம்மா வாமிட் பண்ற மாதிரி ஏதோ பண்ணுது” என வினிதா கத்தவும், அவன் திரும்பிப் பார்த்து, ‘ஷிட்’ என்றபடி காரை ஓரம்கட்டி நிறுத்துவதற்குள் குழந்தை வாமிட் பண்ணி விட்டது.

“என்ன வினி. இதையெல்லாம் நீ வீட்டிலேயே பார்த்துருக்க வேண்டாமா? புது கார் வேற” என அவன் கத்தவும், ”எனக்கென்ன ஜோஸ்யமா தெரியும்?” என இவள் பதிலுக்குக் கத்த அங்கே ஒரே டென்ஷன்.

அப்போது பக்கத்து குப்பை மேடான குடியிருப்பில் வசிக்கும் ஒருவன் ஓடி வந்து, “ என்ன சார், என்ன மேடம், குழந்தை வாந்தி எடுத்துருச்சா... அய்யய்யோ. சார், அப்படியே நீங்க கொஞ்சம் இறங்கிக்கங்க சார்” என ரகுவை ஓரமாக இறங்கி நிற்கச் சொல்லிவிட்டு தனது குடிசை நோக்கிக் குரல் கொடுத்தான்.

“ஏய் குமரா... அம்மாகிட்ட பழைய துணி வாங்கிட்டு வா...”

##Caption## பத்து வயதுச் சிறுவன் ஒருவன், ஒரு புடவையைக் கொண்டு வந்து தந்தான். இவர்களிடம் கூட அனுமதி வாங்காமல் அந்த ஆள் காரை சுத்தம் செய்யத் துவங்கினான். அந்தப் புடவையை இரண்டாகக் கிழித்து, தான் ஒன்றும், அச்சிறுவன் ஒன்றுமாக சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.

ரகுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘யார் இவன்’ என்பது போல அவன் வினியைப் பார்க்க, அவள், “இவன் நம்ப அபார்ட்மெண்டிலிருந்து தினமும் குப்பையை கலெக்ட் செய்பவன்.” என ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தாள். ரகுவுக்கு ஒரே ஆச்சரியம். சிறுவனும் அந்த ஆளும் பரபரப்பாக இயங்கி, கதவு, மிதியடி, பின்சீட் முழுவதும் என அனைத்தையும் சுத்தமாகத் துடைத்து விட்டார்கள்.

பின் அவன், ”சார் எல்லாம் நல்லா ஆயிருச்சு சார். நீங்க கிளம்பலாம்!” என்றவுடன், பணம் எடுக்க ரகு பாக்கெட்டில் கை வைத்தான்.

உடனே அவன், “சார், நீங்க பணம் ஏதும் கொடுக்க வேணாம் சார். மேடத்தை எனக்கு நல்லாத் தெரியும் சார். உங்க அபார்ட்மெண்டில் கச்சடா க்ளீன் பண்றவன் நான். எல்லோரும் மூஞ்சில விட்டெறியாத குறைய கச்சடா கவரைத் தூக்கிப் போடுவாங்க. அவங்க வீட்டுக் குப்பையைத் தானே நான் எடுக்குறேன். அதுக்காக காலிங் பெல்லை அடிச்சா, என்னவோ சொத்தைக் கொள்ளையடிக்கத் திருடன் வந்துட்ட மாதிரி நடந்துப்பாங்க. ஆனா, மேடம்தான் குப்பைக் கவரை நீட்டா பேக் பண்ணி கைல தருவாங்க. தந்துட்டு ‘தேங்க்யூ’ன்னும் சொல்வாங்க. என் மூஞ்சியப் பார்த்து அதச் சொல்றப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கு அப்பப்போ சாப்பிடவும் ஏதாச்சும் தருவாங்க சார். என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு அவங்க நடந்துக்கறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். நீங்க இதுக்காக காசெல்லாம் எதுவும் தர வேண்டாம் சார். அர்ஜென்டா வெளிய போயிட்டிருக்கீங்க. உங்களுக்கு லேட்டாயிரப் போவுது. சீக்கிரம் கிளம்புங்க” என்றபடி பதில் எதையும் எதிர்பாராது அவன் அந்தச் சிறுவனுடன் அங்கிருந்து புறப்பட்டான்.

ரகு, வினிதாவை வியந்து பார்க்க, அவளோ, ”ஒரு நன்றிக்கு இவ்வளவு மரியாதையா?” என மலைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள்.

ஷீலா வெங்கட்,
நியூ ஜெர்ஸி

© TamilOnline.com