பேராசிரியர் நினைவுகள்: பெரிதினும் பெரிது கேள்
‘என்ன பாக்கறீங்க! சொல்லுங்க. காணிநிலம் வேண்டும் அப்படீன்னு பாடறானே பாரதி, இந்தப் பாடல் மூலமாக அவன் பராசகத்தியிடம் என்ன வேண்டும் என்று கேட்கிறான்.... இவ்ளதானே கேட்டேன்.... பேச்சையே காணோமே’ ஆசிரியர் நையாண்டி நிறைந்த குரலில் எங்களைக் கேட்டார். ஒருத்தனுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. ‘என்ன சார் அப்படி பெரிசா அர்த்தம் புரியாம போச்சு இந்தப் பாட்டுல? பாரதி என்ன கேட்கிறான்? அம்மா தாயி, நீதான் பெரிய லோகமாதாவாச்சே, இந்த ஒலகத்துல கொஞ்சம்போற, ஒரு கையகலம் நிலம் எனக்குக் கொடுக்கக் கூடாதா, அந்தக் கையகலம் நிலத்தில் சின்னதா ஒரு வீடு; அந்த வீட்டைச் சுத்திப் பத்துப் பன்னிரண்டு தென்னை மரம்; மரத்திலிருந்தபடி கூவறதுக்கு ஒரு குயில்; பக்கத்துல நல்ல துணையாக மனைவி; இவ்ள போறும் தாயே.... இதக் கொடு. நான் என் பாட்டுத் திறத்தாலே இந்தக் கொஞ்சம்போற நிலத்தில கட்டின குட்டியூண்டு வீட்டிலிருந்தபடி, இந்த வையத்தைப் பாலித்திடுகிறேன்.... ஏதோ கொஞ்சமா கொடுத்தியானா, நான் அதுக்குள்ள இருந்தபடி உலகத்தையே பரிபாலனம் செய்யும் அளவுக்கு என் பாட்டுத் திறத்தை நடத்துவேன்.’ இவ்ளதானே சார் இதுக்கு அர்த்தம்! யாரக் கேட்டாலும் சொல்வாங்க. நாலாங் கிளாஸ் பையன் சொல்வான் இந்த அர்த்தத்தை.....’

நடிப்பாக புருவத்தை உயர்த்தி வியப்பைக் காட்டினார் ஆசிரியர். ‘அப்ப, அதுல என்னமோ கேணி ஒண்ணு வேணுங்கறானே... அதுக்கு என்ன அர்த்தம்’ குரலில் கிண்டல் தொனிப்பது எங்களில் ஒருசிலருக்குத் தெரிந்தது. பதில் சொன்னவருக்கோ கோபம்தான் இன்னமும் அதிகமாகக் கிளர்ந்தது. ‘கேணின்னா கிணறு சார். வீட்டுக்கு ஒரு கிணறு வேணாமா? அதான் கேட்கிறான்’ என்று பட்டென்று பதில் வந்தது. ‘ம்ம்ம்ம்....அப்புறம் அதென்னமோ தூணில் அழகியதாய், நன்மாடங்கள் துய்ய நிரம்பினதாய் - அந்தக் - காணி நிலத்திடையே - ஓர் மாளிகை - கட்டித் தரவேணும்’ அப்படீன்னு இல்ல சொல்றான்? நீங்க சொல்ற ஒட்டச்சாண் நிலத்தில மூக்கு ஓட்டை அளவுலதான் வீடு கட்ட முடியும். மாளிகை எப்படிக் கட்டறது’ அவர் குரலில் இடக்கு அதிகரிக்க அதிகரிக்க, பதில் சொன்ன நண்பரின் கோபமும் வேகமும் அதிகரித்துக்கொண்டே போயின. தன் கட்சியை நிலைநாட்டுவதற்காக ‘மாளிகைனு ஒரு பேருக்குச் சொல்றதுதான். எட்டடிக் குச்சானாலும் இருப்பவன் இருந்தால் அதுவே மாளிகைதான்‘. ‘சரி. அது எப்படி பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் அந்தக் கையகல நிலத்தில் இருக்க முடியும்’--இது ஆசிரியர். ‘என்ன சார் பெரிய காரியம்! அறுவதுக்கு நாப்பது.... வேணாம் முப்பதுக்கு நாப்பது சதுர அடியில் பெரிய வீடு கட்டி, சுத்தி ஆறடிக்கு ஒண்ணு அப்படின்னு மரம் நட்டால் மூணு பக்கத்துக்குப் பன்னிரண்டு தென்னைமரம் நட முடியாதா’ வீறாப்புக் குறையாத பதில்! அவர் வேறு ஏதோ ஒன்றை நோக்கிச் செலுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள இயலாமல் தன் கட்சிக்கு வலுச் சேர்ப்பதிலேயே மும்முரமாக இருந்தார் நண்பர்.

##Caption## ‘இதான் எரிஞ்ச கட்சி எரியாத கட்சி பேசறதுங்கறது. மன்மதனைச் சிவன் எரித்தானா இல்லையான்னு வாதாடுவாங்க. ஒருகட்சி ‘சிவன் எரித்தான்’ அப்படிங்கும். இன்னொரு கட்சி ‘மன்மதன் எரிஞ்சிருந்தா அப்புறம் எப்படிப்பா சிவனுக்குப் புள்ள பொறந்தது’ என்று கேட்கும். இந்த வாதம் முடியவே முடியாது. அன்பர் எரியாத கட்சி பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று குறுஞ்சிரிப்பைத் தவழவிட்டார் பேராசிரியர் நாகநந்தி. ‘என்னதான் சொல்ல வறீங்க...அதையாவது சொல்லுங்களேன்’ என்று எரிச்சல்பட்டார் நண்பர். கையமர்த்தினார் ஆசிரியர்.

‘ஒரு காணி நிலம்னா எத்தனை சதுர அடின்னு தெரியுமா உங்களுக்கு’. உதட்டைப் பிதுக்கினார் நண்பர். கிராமங்களில் வாழ்பவர்களுக்கு இந்தக் காணி நிலம் என்பது எவ்வளவென்று தெரியும். நகரத்தில் வாழ்பவனுக்கு முப்பதுக்கு நாப்பது சதுரமே பெரிய ஃபுட்பால் கிரவுண்டுக்குச் சமம்....’ அடுத்ததாகக் கண் சுருங்கி உடல் குலுங்க ஒரு ஹொஹொஹொஹோ என்று பெருஞ்சிரிப்பு. நையாண்டிச் சிரிப்புதான். ‘அன்பரே, காணி நிலம்னா எவ்வளவு தெரியுமா? நூறு குழி.’ என்று நிறுத்தினார். ‘அடுத்ததா ஒரு குழின்னா என்ன அளவுன்னு சொல்லணும்’ என்று தொடர்ந்தார். ‘நில அளவைக் கணக்கு இடத்துக்கு இடம் மாறுபடும். தமிழ்நாட்டுக்குள்ளே வழங்கி வருகிற நில அளவுதான் குழி என்பது. இது ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு விதமான அளவைக் குறிக்கும். ஆனாலும் பொதுவா, ஒரு குழி என்பது 576 சதுர அடி கொண்டது. அப்படின்னா நூறு குழிக்கு என்ன கணக்காச்சு?’ ‘57600 சதுர அடி’ இந்த விடையைச் சொல்ல யாருக்கும் கஷ்டமாக இல்லை! ‘சரி. அம்பத்தேழாயிரத்து அறுநூறு சதுரஅடி நிலம்னா, ஒங்க அறுவதுக்கு நாப்பது சதுரஅடி கிரவுண்ட் கணக்கில் எத்தன கிரவுண்ட்’ மறுபடியும் அதே கேலிச் சிரிப்பு. ஒருத்தர் சிரத்தையாக ஒரு துண்டுக் காகிதத்தில் கணக்குப் போட்டு 22 கிரவுண்ட் என்று பதில் சொன்னார். ஒரு ஏக்கருக்கு எத்தனை கிரவுண்ட் தெரியுமா? என்று இன்னொரு கேள்வி எழுப்பி, ‘நூறு சென்ட் அல்லது பதினெட்டு கிரவுண்ட்’ என்று விடையையும் அவரே சொன்னார்.

‘அப்படின்னா, ஒரு ஏக்கருக்கே பதினெட்டு கிரவுண்டுதான். 22 கிரவுண்டுன்னா, சுமார் ஒண்ணேகால் ஏக்கர் நிலம். காணி நிலம்னா அதான் அர்த்தம். ஒரு ஏக்கருக்குக் கொஞ்சம் பெரிசா நிலம் வேணும்னான். எதுக்கு? விவசாயம் பண்றதுக்கா? இல்ல! வீடு கட்டிக்க!’ என்று மறுபடிக் குலுங்கிச் சிரித்தார். ‘இந்தக் காலத்துல பண்ணை வீடுன்னு சொல்றாங்க இல்ல, அதைப் போல, இல்லாட்டி, அதைக் காட்டிலும் பெரிதாக வீட்டு மனை வேணுமாம் ஐயாவுக்கு.’ ‘இப்ப சொல்லுங்க’ என்று தொடர்ந்தார். தூணிலழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிரம்பினதாய் அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேணும்....’ அப்படீன்னா...’ என்ற இழுத்தவரை முடிக்கவிடாமல் இன்னொரு நண்பர் மறித்து, ‘சாருக்கு நல்லா பெரிய பெரிய தூண்கள் தாங்கும் மாடங்களும் பெரிய பெரிய கூடங்களும் கொண்டதாக மகா பெரிய அரண்மனைதான் வேணும் போலிருக்கு’ என்ற முடித்தார். ‘ம்ம்ம் அது’ என்று தொடர்ந்தார் ஆசிரியர்.

‘பாருங்க ஒரு சின்ன இடத்துல தப்பா புரிஞ்சுக்கறோம். அது மொத்தக் கவிதையின் மெசேஜையும் எப்படி உருச்சிதைத்து விடுகிறது என்பதை நீங்களே கண்கூடாகப் பாருங்கள்’ என்று அடுத்த அடியை எடுத்து வைத்தார். ‘அப்புறம் கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றுமிள நீரும்’ என்று இருப்பதை அன்பர் எப்படி விளக்கினார்? கேணின்னா என்ன சொன்னீங்க அன்பரே, கிணறா?’ முதலில் ஆவேசமாகக் கட்சி கட்டிய நண்பருடைய முகத்தில் தன்னம்பிக்கை முற்றாகப் போய்விட்டிருந்தது. தான் எங்கேயோ தவறியிருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கியிருந்தார். அவர் மட்டுமா? சுற்றியிருந்த நாங்களெல்லோரும் சேர்த்துதான். ‘சரி. கேணின்னா கிணறுன்னே வச்சுப்போம். பாரதிக்கு பாரதிதான் அகராதின்னு நிறையமுறை பாத்திருக்கோம் இல்ல? ‘ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள், உலகு இன்பக் கேணி என்றே, மிக நன்று பல்வேதம் வரைந்தகை பாரத நாயகி தன் திருக்கை’அப்படின்னு ஒரு பாட்டுல சொல்றான் இல்ல? அப்படின்னா உலகம் என்பது இன்பம் நிறைந்த கிணறு அப்படின்னு அர்த்தமா?. சரி அத விடுங்க. உலகு இன்பக் கேணி என்று சொன்ன பாரதி, துன்பக் கேணியையும் சொல்லியிருக்கிறான் இல்லையா? கரும்புத் தோட்டத்திலே பாட்டில்

##Caption## நாட்டை நினைப்பாரோ?-எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ?-அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே!-துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டும் உரையாயோ?


என்று பாடுகிறானே, அந்தத் துன்பக் கேணியில் எங்கள் பெண்கள் அழுதசொல்.... அப்படீன்னா என்ன அர்த்தம்? துன்பக் கிணற்றில் பெண்கள் கிடக்கிறாங்கன்னு அர்த்தமா? சரி. அதுவும் வேணாம். திருவல்லிக்கேணிங்கறோமே அப்படின்னா என்ன அர்த்தம்? அல்லிப்பூக்கள் நிறைய மலர்ந்திருக்கின்ற கிணறு அப்படீன்னு அர்த்தமா? கேணின்னா குளம்னு அர்த்தம். நகரத்தில், அதுவும் இந்த நங்கநல்லூரில் நீங்கள்ளாம் குளத்தைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள். இந்த ஊரில் குளம் என்று அறியப்படுவது, குட்டை என்ற கணக்கில்கூடச் சேர்த்துக்கொள்ள முடியாத அளவுக்குச் சிறியது. குளம் பார்க்கவேண்டுமானால், புதுக்கோட்டைக்குப் போகவேண்டும். அது குளம். குளம் என்றால் மிகப்பரந்துபட்ட நீர்நிலை என்று பொருள். ஏதோ இக்குனூண்டு தண்ணித்தொட்டி இல்லை. நீங்க நினைக்கிறா மாதிரி கிணறும் இல்லை’ என்றார். அன்பருடைய முகம் வாடிவிட்டது.

‘உலகத்துல நீங்க மட்டும் தனியில்லை அன்பரே! கிட்டத்தட்ட எல்லோருமே இப்படித்தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பாரதி நினைவாலயத்துக்குப் போய்ப் பாருங்கள். இந்தப் பாட்டுக்கு ஒரு விளக்கச் சித்திரம் எழுதி வைத்திருக்கிறார்கள். கிணறு வரைந்து, கயிறு வரைந்து, ஜகடை வரைந்து, பக்கெட் வேறு வரைந்து வைத்திருக்கிறார்கள்’ என்று மறுபடி குலுங்கக் குலுங்கச் சிரித்தார். அவர் எந்த பாரதி நினைவாலயத்தைச் சொன்னார் என்பது தெரியவில்லை. திருவல்லிக்கேணியில் அப்படியொரு சித்திரமில்லை. வேறு ஏதோ ஓரிடத்தில் அவ்வாறிருக்கிறது போலும்.

உலகு இன்பக் கேணின்னா, இறங்கி நீச்சலடிச்சு, குதித்துக் கும்மாளமிடக்கூடிய இடம்னு அர்த்தம். துன்பக் கேணியில் எங்கள் பெண்கள் அழுதது என்றால், கரையற்ற பெரிய நீர்ப்பரப்பில், துன்பப் பரப்பில், முழுகியவாறு, எழுந்து வரமுடியாதபடி தவிக்கும் பெண்கள் அழுதசொல்னு அர்த்தம். இங்க, காணி நிலம் பாட்டுல, ‘சின்னதா ஒரு குளம் வேணும்‘னு அர்த்தம். புரிஞ்சுதா?’ என்று மறுபடியும் புன்னகைத்தார். ‘ஒரு சின்ன சொல்லைத் தவறாகப் புரிந்துகொள்ளும் காரணத்தால் அந்தக் கவிதையைப் பற்றிய பர்செப்ஷனே எப்படி மாறிப்போய்விடுகிறது என்பதைப் பாருங்கள்! அங்கே மாளிகை இருக்கிறது; குளம் இருக்கிறது. எதுவும் நம் கண்ணுக்குத் தென்படவில்லை. எட்டடிக் குச்சைத்தான் மாளிகை என்று கவிஞன் மிகைப்படுத்துகிறான் என்ற புரிந்துகொள்கிறோம்; குளத்தை கிணறாகப் புரிந்துகொள்கிறோம். ஏன்? காணி என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. அந்தச் சொல்லுக்குச் சரியான பொருள் தெரிந்திருந்தால் மாளிகையும் குளமும் பளிச்சென்று நம்ம கண்ணுக்குத் தெரிந்திருக்கும். தெரியவிடாம தடுத்தது எது? காணி என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாமைதானே? அதனாலதான் சொல்றேன். சொல்கடந்த அனுபவமான கவிதையை அனுபவிக்க வேணுமானால் முதலில் சொல்லில் ஏறிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சொல்லையும் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொள்ளாத காரணத்தால்தான் பண்ணைவீட்டிலும் பெரிதாக அரண்மனை போன்ற வீட்டைப் பராசக்தியிடம் கேட்ட பாரதி, என்னவோ ஒரு கார்ஷெட் அளவுக்கு வீடொண்ணு கேட்கிறான்’ என்று நினைத்துக் கொள்கிறோம். ‘பெரிதினும் பெரிதுகேள்’ என்றவன் அவன். அவனுடைய ஆளுமையையே தலைகுப்புற அல்லவா தள்ளிவிட்டோம்....ஒரே ஒரு சொல்லைத் தவறாகப் புரிந்துகொண்டதால்’ என்று முடித்தார். நாங்கள் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தோம்....

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com