துன்பங்களை நீக்கி, தடைகளைப் போக்கி நல்வாழ்வைத் தருபவள் அருள்மிகு மாங்காடு காமாட்சி ஆவாள். சென்னை நகருக்குத் தென்மேற்கே ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் உள்ளது மாங்காடு. பூவிருந்தவல்லியிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில், சேக்கிழார் பெருமான் அவதரித்த குன்றத்தூரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இவ்வாலயம் உள்ளது. மாமரக் காட்டில் அன்னை காமாட்சி சிவனை நோக்கித் தவம் புரிந்து, பின் காஞ்சி சென்று மணக்கோலம் பூண்டதாக வரலாறு. அதனால் மாங்காட்டில் அன்னையை தவ காமாட்சி என்றும், காஞ்சியில் கல்யாண காமாட்சி என்றும் சொல்லுவர்.
மாங்காட்டு அன்னை சிவன், பெருமாள் திருக்கோயில்களின் புகழை எல்லாம் தானே ஏற்றுத் தனிக்கோயில் கொண்டிருக்கிறாள். ஒருசமயம் கைலாயத்தில் உள்ள அழகான சோலையில் உமையம்மை விளையாட்டாகச் சிவபெருமானின் கண்களை மூடினாள். அதனால் உலகம் முழுதும் இருண்டு, உயிர்கள் அனைத்தும் துன்புற்றன. இதையறிந்த ஈசன் சக்திக்குச் சோதனையை அளித்தார். உமையம்மை பூவுலகில் பிறந்து மாமரங்கள் சூழ்ந்த காட்டில் ஒற்றை மாமரத்தடியில் தவம் செய்து பின்னர் தன்னை அடைய வேண்டும் என்று ஆணையிட்டார்.
##Caption## அதன்படி அன்னை பஞ்சபூதங்களை நெருப்பாக்கி அதன் நடுக்குண்டத்தில் ஊசிமுனை போன்ற அக்னி ஜூவாலை மீது இடக்கால் பெருவிரலின் நுனிப்பகுதி படும்படி வைத்து, வலக்கரம் உயர்த்தி, சிரத்தின் உச்சியில் உருத்திராட்ச மாலையை வில்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க, வலக்கால் மேல் நோக்கி மடங்கி இருக்க, பஞ்சாட்சரத்தை ஜபித்தபடிக் கடுந்தவம் மேற்கொண்டாள்.
அன்னையின் தவத்தை ஏற்று ஈசன் அம்மையை மணம்புரிய வருகின்ற காலத்தை அறிந்து அனைவரும் மகிழ்வுடன் காத்திருந்தனர். சிவன் பார்வதியை மணமுடிக்கத் திருமால் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தன் குடும்பச்சீராக வலக்கையில் கணையாழியுடனும் தடைகளை நீக்க அருளாழியைப் பிரயோக சக்கரமாகத் தயார் நிலையில் வைத்துக்கொண்டும் பூவுலகை வந்தடைந்தார்.
இறைவியின் தவத்தை மெச்சிப் பூவுலகம் வந்த சிவபெருமான், சுக்கிர முனிவரின் கடும் தவத்தால் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்றுவிட்டார். திருமாலிடம் சாபம் பெற்று கண் பார்வையை இழந்த சுக்கிர முனிவர் திருமாலிடம் மன்னிப்பு வேண்ட, அவர் ”பூவுலகில் மாங்காடு தலத்தில் பார்வதி தேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி தவம் செய்கிறாள். அதைப் பூர்த்தி செய்ய இறைவன் வருவார். நீ அங்கே சென்று தவமிருந்தால் கண்பார்வை மீளும்" என்றார்.
இறைவன் அன்னையிடம் ”நீ காஞ்சி மாநகரம் சென்று உன் தவத்தைத் தொடர்வாய். அங்கே உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று அசரீரியாய்த் தெரிவித்தார். சிவபெருமான் சுக்ரனின் தவத்தை மெச்சிப் பார்வையை அருளினார். ”உன் பெயராலேயே இவ்விடத்தில் விளங்குவேன்” என்றார். மாங்காட்டில் “வெள்ளீசுவரர்” எனும் நாமத்தோடு கோயில் கொண்ட சிவனைப் பூஜை செய்து, கடுந்தவம் செய்யும் அன்னையை வணங்கி சுக்ர முனிவர் தனக்குச் சிவபெருமான் காட்சி அளித்ததைச் சொல்லி, அன்னையை சிவனைக் காண அழைத்தார்.
அன்னை காமாட்சி வெள்ளீஸ்வரரை தரிசனம் செய்து, பின் காஞ்சி சென்று கம்பா நதிக்கரையில் மணலால் லிங்கம் பிடித்துப் பூஜை செய்ய, இறைவன் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திச் சோதனை செய்து பின் அன்னையின்முன் தோன்றினார். பின் பங்குனி உத்திரத் திருநாளில் தமையன் திருமால் தாரை வார்த்துத்தர ஈசனை மணம் புரிந்தார். காஞ்சியில் கல்யாண காமாட்சியாக எழுந்தருளினார்.
பல யுகங்கள் கழிந்த பின்னும் அன்னையின் தவ அக்னி வெப்பத்தால் பூமி வெப்பமாகி உயிர்கள் அல்லலுற்றன. ஆதிசங்கரர் தன் ஞானத்தால் இதை உணர்ந்து அம்மையின் பஞ்சாக்னி தணியும் வண்ணம் அர்த்தமேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். வெம்மை நீங்கித் தண்மை பொங்கியது. இவ்வாலயத்தில் அர்த்தமேரு சக்ரமே மூலவராக இருப்பது மற்றொரு சிறப்பாகும்.
##Caption## அருள்மிகு அம்மன் திருக்கோயில் தெற்குப்புறம் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இடப்புறம் வரசித்தி விநாயகர். உள்ளே மகா மண்டபத்தில் இடப்புறச் சுவரில் முருகன், ஆதிசங்கரர். தென்கிழக்கில் சூரியன். வடகிழக்கில் பைரவர், விநாயகர். துவார பாலகிகள் நின்றிருக்கும் வாயில் உள்ளே சபா மண்டபத்தில் வலப்புறம் தவ காமாட்சி பஞ்சாக்னியில் நிற்கும் கோலம் தனிச் சிறப்பு கொண்டதாகும். உள்ளே சென்றால் கருவறையில் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ சக்ரத்திற்கும், அபிஷேகம் பஞ்சலோக காமாட்சி அம்மனுக்கும் செய்யப்படுகிறது. கருவறைக்கு வெளிப்பிரகாரச் சுற்றில் நவ கன்னிகைகள் சன்னதி உள்ளது. திருக்கோயிலின் தீர்த்தம் பிரகாரத்தின் வடதிசையில் உள்ளது. தலவிருட்சம் மாமரம். திருக்குளத்திற்கு அருகில் அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டு மிகச் சிறப்பாக அன்னதானம் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அருள்மிகு காமாட்சி அம்மன் வரலாற்றோடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர், ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோயில் இரண்டும் தொடர்புடையவையாகும். அம்மனின் தவம் காஞ்சியிலும் தொடர வேண்டும்; பின்னர்தான் திருமணம் என ஈசன் சொன்னதால் அதுவரை கையில் மோதிரத்துடன் சீர் எடுத்து வந்த பெருமாளை மாங்காட்டிலேயே தங்கும்படி வேண்டிக் கொண்டார் மர்க்கண்டேய மகர்ஷி. அதன்படி திருமால் வைகுண்டப் பெருமாளாக இங்கே எழுந்தருளியிருக்கிறார்.
தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்மழை பொழிகிறாள் அன்னை காமாட்சி. திருமணமாகாதவர்கள் இங்கு வந்து ஆறு வாரம் அன்னையை வழிபட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெறுவது கண்கூடு.
சீதா துரைராஜ் |