தேவையான பொருட்கள் கடலைப் பருப்பு - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1 கிண்ணம் வற்றல்/பச்சை மிளகாய் - 6 பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப ஜீரகம் - 2 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி கொழுகொழு மோர் - 2 கிண்ணம் கறிவேப்பிலை தழை - 5 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி கடுகு, சமையல் எண்ணெய் - தாளிக்க
செய்முறை:
பருப்பு உருண்டை தயார் செய்ய கடலைப் பருப்பு, துவரம் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து, அதில் மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நரநர என்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பருப்பில் சிறிது அரிசி மாவு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பருப்பு உருண்டை மாவு தயார் மோர்க்குழம்பு செய்ய மீதமுள்ள அரைத்த பருப்பில் ஜீரகம், தேங்காய் துருவல் சேர்த்து மோர்க்குழம்புக்கு நன்றாக அரைத்து கொள்ளவும். இதில் சிறிது மாவைக் கீரை மசியலுக்கு எடுத்து வைக்கவும். பருப்பு உருண்டை மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். சாஸ்பேன் அல்லது பாத்திரத்த்தில் சிறிது கொழுகொழு மோரில் உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு கொதிக்க விடவும். மீதமுள்ள மோரில் மோர்க்குழம்புக்கு அரைத்த கலவையைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்த பின், பருப்பு உருண்டை மேலே மிதந்து வரும். இதில் கறிவேப்பிலை போட்டு, கடுகு தாளித்து இறக்கவும். பருப்பு உருண்டை மோர்க்குழம்பு ரெடி.
கீரை மசியல் செய்ய இதற்குத் தொட்டுக்கொள்ள கீரை மசியல் நன்றாக இருக்கும். கீரை மசியல் செய்யக் கீரையைப் பொடியாக நறுக்கி அதில் உப்புச் சேர்த்து வேகவிடவும். இதில் பருப்பு மாவைச் சேர்த்து நன்றாகக் குழைய வேக வைக்கவும். இதில் கடுகு, பெருங்காயப் பொடி, ஒரு மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பை மேலாகத் தாளிக்கவும். கீரை மசியலும் தயார். அப்புறம் என்ன, பருப்பு உருண்டை மோர்க்குழம்போடு சேர்த்து ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதான்!
பிரேமா நாராயணன், கேன்டன், மிசிகன் |