தென்றல் பேசுகிறது...
இரட்டைப் பள்ளப் பின்னடைவு (Double Dip Recession) என்பது அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்பாக அடிக்கடி காதில் விழும் சொல் ஆகிவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product) வளர்ச்சி விகிதம் குறுகிய காலம் மேலேறிய பின்னர் மீண்டும் சரிவதை இது குறிக்கும். பெரிய பொருளாதாரத் தேக்க நிலைக்கு இது அறிவிப்பு மணியாக இருக்கக்கூடும் என்பதே அச்சம். அத்தோடு, மந்தநிலை வந்தவுடனே நுகர்வோர் நம்பிக்கை (consumer confidence) குறைவதும் இந்தத் தேக்கத்தை மோசமாக்கலாம். பணியிழப்புகளின் காரணமாகப் பொருட்களின் விற்பனை குறைந்து போவதால் உற்பத்திக் குறைவு ஏற்படலாம். இன்று பணியிழப்புப் புள்ளிவிவரங்கள் நம்பிக்கை ஊட்டுவனவாக இல்லை. ஓர் ஏழை பங்காளன் என்ற அவதாரத்தில்தான் ஒபாமா பதவியைக் கைப்பற்றினார். தனது வாக்குறுதிகளைக் காப்பாற்ற இரண்டே வருடங்கள்தாம் உள்ளன என்கிற நிலையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆவலோடு மக்கள் காத்திருக்கிறார்கள். தொய்ந்து போன பொருளாதாரம் கொண்ட ஒரு தேசம்தான் அவருக்கு வாய்த்தது என்று இனியும் சொல்லிப் பயனில்லை. 'நம்மால் மாற்ற முடியும்' என்ற மந்திர கோஷத்துடன் பதவியேறிய அவர் உறுதியோடு ஏதேனும் செய்தாக வேண்டும். இல்லையென்றால், மாற்றத்தில் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

*****


தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information Act) வந்தவுடன் இந்தியர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இதன்படி அரசின் செயல்பாடுகள் குறித்து சாதாரணக் குடிமகன் சிறிய கட்டணம் ஒன்றைச் செலுத்தித் தகவல் பெற முடியும். அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் எல்லாவற்றையும் மூடுமந்திரமாகச் செய்ய முடியும் என்கிற நிலையை இது மாற்றும் என்பது நம்பிக்கை. மக்களாட்சியின் ஆணிவேர் அதன் அறிவார்ந்த குடிமக்கள்தாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சிகளின் ஒத்தூதிகளாக ஊடகங்கள் ஆகிவிட்ட நிலையில், அரசைக் கேள்வி கேட்கும் பொறுப்பைச் சில மனசாட்சியுள்ள தனிநபர்கள் எடுத்துக் கொண்டனர். இவர்களைத் தகவல் உரிமைச் செயல்வீரர்கள் (RTI Activists) என அழைப்பர். இந்த ஆண்டு ஜனவரியில் மஹாராஷ்டிர மாநிலத்தில் பல நில முதலைகளின் ஊழல்களை அம்பலப் படுத்திய செயல்வீரரான சதீஷ் ஷெட்டி காலை உலாத்தலுக்குச் சென்றபோது கொல்லப்பட்டார். ஜூலை மாதம் குஜராத்தைச் சேர்ந்த அமீத் ஜெத்வா குஜராத் உயர்நீதி மன்றத்துக்கு அருகிலேயே கொல்லப்பட்டார். அவர் செய்த குற்றம், கிர் காடுகளில் சட்டத்துக்குப் புறம்பாகக் கனிமம் தோண்டுவதற்கு எதிராக வழக்குத் தொடுத்தது. ஆகஸ்ட் இறுதியில், மராத்வாடா பகுதியைச் சேர்ந்த ராம்தாஸ் கடேகாவ்கர் என்பவர் பொது வினியோகத் துறையில் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காகக் கொல்லப்பட்டுள்ளார். சமூகப் பிரக்ஞை உள்ள எவரையும் இந்தச் சம்பவங்கள் உலுக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

*****


தர்மபுரியில் மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் 2000 ஆண்டில் அவர்களுக்குத் தொடர்பே இல்லாத அரசியல் காரணங்களுக்காக ஒரு பேருந்துக்குள் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இந்திய உச்சநீதி மன்றம் அவர்களுக்கு மரணதண்டனையை உறுதி செய்துள்ளது. ஆனால் 1984-ல் இந்திரா காந்தி அவர்கள் படுகொலைக்குப் பின்னர் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. கிட்டத்தட்ட தர்மபுரி விவகாரத்தைப் போலவே, சற்றும் தொடர்பில்லாத மூன்று இளைஞர்கள் மதுரை தினகரன் அலுவலகத்துக்குள் 2007-ல் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கிலும் கொலைகாரர்கள் இன்னும் தண்டனை பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விழிப்புணர்வு, எழுச்சி என்றெல்லாம் உரத்த கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் அவை அதிகாரத்துக்கு அடங்கியவைதானோ என்கிற அச்சம் நாளுக்கு நாள் வலுத்து வருவது மக்களாட்சிக்கு நன்மை பயக்காது.

*****


தென்றலை ஒரு மக்கள் இதழ் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறோம். சாதாரணர்கள், சாதனையாளர்கள், நற்பணி செய்வோர் என்று இவர்களைக் கொண்டாடுகிறது தென்றல். அதனால்தான், பிடுங்கி நட்ட புதுமண்ணில் கலைத்துறையில் வளர்ந்து வருகிறவர்களையும் வளர்ந்தவர்களையும் தாங்கி வருகிறது இந்த இதழின் அட்டை. சென்ற இதழில் தொடங்கிய டாக்டர் இரா. நாகசாமி அவர்களின் தகவல் களஞ்சியமான நேர்காணல் இந்த இதழில் நிறைவு பெறுகிறது. கோவைச் செம்மொழி மாநாட்டில் பங்குகொண்ட பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் அனுபவப் பதிவுகளும் ஒரு கட்டுரை வடிவம் பெற்றுள்ளது. சயின்ஸ் ஃபிக்சன் என்று சொல்லப்படும் அறிவியல் புனைகதை ஒன்றைத் தென்றலுக்காக எழுதிக் கொடுத்திருக்கிறார் 'யோசிப்பவர்' என்ற புனைபெயரில் எழுதும் இளைஞர். பிற சுவையான அம்சங்களுக்கும் குறைவில்லை.

வாசகப் பெருமக்களுக்கு ரம்ஜான், கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!


செப்டம்பர் 2010

© TamilOnline.com