நியூ ஹாம்ப்ஷயர் இந்துக் கோவில் நிதி திரட்டும் விழா
ஜூன் 5, 2010 அன்று நியூ ஹாம்ப்ஷ்யர் மற்றும் வடக்கு நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த இந்துக்கள் பெருந்திரளாகக் கலாசார வைபவம் நடத்த ஒன்றுகூடினர். தமது வழிபாட்டுக்காகவும், கலாசார அடையாளமாகவும் கோவில் ஒன்றைத் தமது பகுதியில் நிர்மாணிக்கும் நோக்கத்துடன் ‘Hindu Temple of New Hampshire’ என்ற ஆலய அறக்கட்டளை ஒன்று புதியதாக நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டு காலமாக ஒரு தற்காலிகமான இடத்தில் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதை ஒரு முழுமையான, வேதாகம முறையிலான ஆலயமாகக் கட்டும் முயற்சியில், கோவில் அறக்கட்டளையும், பக்தர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியின் ஒரு கட்டமாகத்தான், இந்த கலாசார வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் முதல் பாகமாகத் திருமதி. அபர்ணா பாலாஜியும் (பிரபல கர்நாடக சங்கீத வித்வான் திரு. O.S. தியாகராஜன் அவர்களின் மகள்), அவரது முன்னணி சீடர்களும் பாடினர். வித்வான் திரு. K.V.S. வினய் மற்றும் டாக்டர் ராமச்சந்திரன் பாலகிருஷ்ணன் (வயலின்), திரு. சங்கர் ராமன் (மிருதங்கம்), பிரயுத் நடுதொட்டா (புல்லாங்குழல்), திருமதி. சௌந்தர்யா கணேஷ் (வீணை) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.

கோவில் அறங்காவலர்கள், கோவிலின் தற்போதைய நிலை, வருங்காலக் குறிக்கோள் குறித்து விளக்கவுரை வழங்கினர். ஆலய நிர்மாணத்தை 3 கட்டங்களாக நடத்தவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். முதல் கட்டமாக, 2010-11ல் கோவிலுக்காக நிலம் வாங்கப்படும், இரண்டாம் கட்டத்தில் ஒரு தற்காலிகக் கட்டிடம் அமைத்து வழிபாடுகள் தொடரப்படும், மூன்றாம் கட்டத்தில் இந்து சமய வேத, ஆகம முறைப்படி, முழுமையான ஆலயம் நிர்மாணிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இரண்டாம் பாகமாக பரதநாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்றது. நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் புகழ்பெற்ற நடன ஆசிரியை குமாரி. நேஹா பாரீக் அவர்களுடன் அவரது முன்னணி சீடர்களும் அளித்த நாட்டிய நிகழ்ச்சி உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தக் கலாசார விருந்தில் மெஹந்தி (மருதாணி) மற்றும் சமய நூல் விற்பனைக் கூடம் அனைவரையும் கவர்ந்தது.

லக்ஷ்மி முநுகூர்,
நேஷுவா, NH

© TamilOnline.com