செப்டம்பர் 11, 2010 அன்று, ஸ்ரீக்ருபா நடனக் குழுமத்தில் பயின்ற பலதலைமுறை நர்த்தகிகள் ஒன்றிணைந்து ‘சமர்ப்பணம் II - அடுத்த தலைமுறை’ என்ற நாட்டிய நிகழ்ச்சியை சாரடோகாவிலுள்ள மெக்காஃபீ அரங்கில் வழங்கவிருக்கிறார்கள். தங்களுக்கு இந்த அரிய கலையைக் கற்றுத் தந்த குரு விஷால் ரமணி, ஆசிரியர்கள், கலைச் சமூகம் மற்றும் தமது பெற்றோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த அற்புத நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளனர். இதற்கு இந்தியாவிலிருந்து பக்கவாத்திய வித்வான்கள் வரவுள்ளனர். 1999ல் இதன் முதல் நிகழ்ச்சி நடந்தபோது ஸ்ரீக்ருபாவில் 80 மாணாக்கர்கள் இருந்தனர். இப்போது, 250! இந்த நிகழ்ச்சியில் இல்லத்தரசிகள், மருத்துவர்கள், மாணவர்கள், மென்பொருள் வல்லுனர், சட்ட வல்லுனர் என்று பல துறைகளிலும் மிளிரும் இவரது 50 சிஷ்யர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஸ்ரீக்ருபாவின் நிறுவனரும் கலை இயக்குனருமான குரு விஷால் ரமணி தஞ்சாவூர்ப் பாணி நாட்டியத்தில் தேர்ந்தவர். குரு மகாலிங்கம் பிள்ளை, குரு கோவிந்தராஜ் பிள்ளை ஆகியோரிடம் பயின்றவர். இந்தியா உள்ளிட்ட பலநாடுகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கிப் பெரும்புகழ் பெற்றவர்.
செய்திக்குறிப்பிலிருந்து |