'அபிநயா' வழங்கிய ராமாயண நாட்டிய நாடகம்
மார்ச் 19, 2006 அன்று சான்டா க்ளாரா பல்கலை எல்.பி.மெயர் அரங்கில் அபிநயா நடனக் குழும மாணவிகள் ராமாயண நாட்டிய நாடகம் ஒன்றை வழங்கினர். நாட்டை ராகத்தில் ராமர் வந்தனம், புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து 'சாந்தாகாரம்' எனத் தொடங்கும் சுலோகத்திற்கு எட்டு மாணவிகளும் உருக்கமான முகபாவத்துடன் ஆடினர். 'பஜரே மானச' எனும் மைசூர் வாசுதேவாச்சார் பாடல், ஜதிஸ்வரம் யாவும் தாளக்கட்டுடன் அமைந்திருந்தன.

அடுத்து 'ஜயஜய தயித' எனும் தோடய மங்களம் பாடலில் ஆறு மாணவிகள் இருவர் இருவராக மாறிமாறிச் சுறுசுறுப்புடன் ஆடியது வெகு சுகம். 'ஜயஜயராம ஹரே' எனும் ராகமாலிகைப் பாடலில் 'பாலித பித்ருவசன', 'கனகம்ருக' போன்ற இடங் களில் பொருள் புரிந்து பொருத்தமாக ஆடிக் கைதட்டலைப் பெற்றனர்.

துளசிதாசரின் 'ஸ்ரீராம சந்த்ர க்ருபா' எனும் பாடலில் 'நவசந்தரமுககர', 'ஆஜானு புஜகர', 'தானவ தைத்ய' ஆகிய இடங்களில் கவி அனுபவித்த ராமனை முகபாவத்தில் வடித்துக் காண்பித்த நேர்த்தி மனதை உருக்கியது. மீரா பஜன், 'ஜயஜானகி காந்த' எனும் புரந்தர தாசர் பாடல் ஆகியவையும் மிக அழகு. அன்னமாச்சார்யாவின் பாடலுக்கு முன் திரும்பப் புஷ்பாஞ்சலி செய்தது ஒரு புதுமை. பாடலின் ஒவ்வொரு அடிக்கும் இரு மாணவிகள் மாற்றி மாற்றி அபிநயம் பிடித்து ஆடியது நல்ல விறுவிறுப்பு.

கடைசியாக 'சீதா ஸ்வயம்வரம்' நிகழ்ச்சி யில் 'பாலசீதையாக' நடித்த சிறுமி தோழிகளுடன் விளையாடி ஆடியது மிக்க அருமை. சிறுமியரின் கோலாட்டம் நிகழ்ச்சி யின் சிகரம். சற்றும் தாளம் பிசகாமல் 'பாய்ந்து அடிப்போம்' என்ற பாடலுக்கேற்ப ஓடி ஓடி அடித்தது படுஜோர். இதர ராஜாக்கள் வில்லை ஒடிக்க முடியாமல் தோற்றபின், ஜனகர் ராமனை 'நீ வந்து போட்டியில் கலந்து கொள்ள வா' எனக் கூப்பிட, ராமன் வினயத்துடன் வந்து வில்லை ஒடித்து சீதை மாலையிடல், அயோத்தியில் மக்கள் பூமாலைகளுடன் ராமனை எதிர்பார்த்து நிற்பது, ரிஷிகள் பூஜித்தவிதம், பட்டாபிஷேகக் கோலம் ஆகிய காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.

மிகுந்த கற்பனை, உழைப்பு இவற்றோடு சுமார் 70 மேற்பட்டவர்களைக் கொண்டு இந்நிகழ்ச்சியை உருவாக்கி வழங்கிய குரு மைதிலிகுமார் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com