கல்லுக்குள் ஈரம் வைத்தான்
கதவைத் தட்டத் தேவையே இல்லாமல் விரியத் திறந்து கிடந்தது. ஜன்னலோர மேஜையருகே அமர்ந்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான் சிவா. ஏதோ நுழைந்தாற்போல் நேராக உள்ளே சென்று கைப்பையை அலமாரியில் வைத்துவிட்டுக் குளியலறை நோக்கிச் சென்றான் ரமணன். வேலையிலிருந்து தாமதமாக வரும் நாட்களில் வழக்கமாகக் கிடைக்கும் வரவேற்புதான்; அவனும் அதற்குப் பழகிவிட்டான். ஒரு இணுக்குத் திருநீற்றை நெற்றியில் வைத்துக்கொண்டு சுவாமி அலமாரியின் பக்கம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு அடுக்களைப் பக்கம் பார்வையை ஓட்டினான். தோசைக்கல் மீது ஒரு கை நீரைத்தெளித்துச் சரி பார்த்துவிட்டு மாவை வார்க்க ஆரம்பித்தாள் பாரு. இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் முதலில் சமரசப் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கவேண்டிய முறை ரமணனுடையது. இன்று சொல்லப் போகும் செய்தியைக் கேட்டால் தோசைக் கல்லுக்குப் பதிலாகப் பாருவின் முகத்திலேயே தோசையைச் சுட்டு எடுத்துவிடலாம். ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



"சாரு போன் பண்ணினாள்" என்று முகவுரையை ஆரம்பித்தான். ஒரு ‘ஊம்’கூடக் கிடையாது. "எட்டாம் தேதி கிருஹப்ரவேசமாம். நாளைக்கு வந்து அழைக்கப் போகிறாளாம்." ஒருவிதமாக ஒலிபரப்பிவிட்ட நிம்மதியுடன் நிமிர்ந்தான். தட்டில் இரண்டு தோசைகளும் தக்காளிச் சட்னியும், டம்ளரில் ஜலமும் டொக் என வைக்கப்பட்டன. வைத்த அழுத்தத்தில் நல்ல வேளையாகத் தரையில் குழி ஏதும் விழவில்லை.

"பார்த்து, பர்வதம்மா காதில் நீ வைத்த ஓசை கேட்டால், வீடே பாழாயிடுத்துன்னு சண்டைக்கு வந்துடுவா. இந்த ராத்திரியில் ரெண்டு சண்டையைச் சமாளிக்க எனக்குத் தெம்பில்லை" ஊஹூம், எந்த நகைச்சுவைக்கும் பலனில்லை. முகத்தை ஒரு நொடிப்பு நொடித்துக்கொண்டு அடுக்களைக்குள் அடைக்கலம் புகுந்துவிட்டாள். பசித்தவன் மட்டுமல்ல, பட்டுக் கெட்டவன் கூடப் பழங்கணக்குப் போடலாம். அதைத்தான் ரமணனின் மனம் செய்தது.

##Caption## சதாசிவம், ஜயம்மா தம்பதிக்கு அருமை மகளாகப் பிறந்து செல்லச் சீராட்டில் திளைத்தவள் பாரு. ஓஹோ என்று இல்லாவிட்டாலும், செழுமைக்குக் குறைவில்லாத அளவுக்கு இருந்தவர் மிராசு சதாசிவம். பதினேழு வயதை எட்டிகொண்டிருந்த பாருவின் திருமணத்திற்காகத் தயார் செய்து கொண்டிருந்த நிலையில், காலமில்லாக் காலத்தில் வந்து பிறந்தவள் சாரு. அதற்காக அவளுக்கு யாதொரு குறையும் வைக்கவில்லை அவர்கள். பாரு தங்கையின்மேல் உயிராக இருந்து தாய்க்கும் மேலாகப் பாசத்தைக் கொட்டிக் கவனித்துக்கொண்டாள். சாருவுக்கு மூன்று வயதாகும்போது அவளுக்குத் திருமணமானது. பாருவை விடாமல் காலைக் கட்டிக்கொண்டு அழுத குழந்தையைச் சமாதானப் படுத்துவதே பெரும்பாடாக இருந்தது. அவளது புக்ககமான மதுரைக்கும், திருச்சிக்கும் நடை பாவாடை போடாத குறையாக அவள் போய் வருவதும், நவராத்திரி, ஆடி வெள்ளி என்று சொல்லிக் கொண்டு சாருவை அவள் பெற்றோர் விட்டுவிட்டுப்போவதும் வழக்கமாகியிருந்தது.

விதி அழைப்பு வைத்து ஆடித் தீர்க்கும்போலும். அய்யம்பேட்டையிலிருந்து ஜயம்மாவின் சித்தி பெண் தன் மகனின் திருமணத்திற்காக அழைத்திருந்தாள். எல்லோரும் ஒரு குழுவாகச் செல்ல ஒரு சிற்றூர்தியும் ஏற்பாடு செய்திருந்தாள். சாருவுக்கு லேசாகக் காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்ததால் அவளை அழைத்துக்கொண்டு பாருவும் ரமணனும் திருமணத்தன்று வருவதாகச் சொல்லிவிட்டனர். முதல் நாளே சென்ற அவர்களது வண்டி பேருந்து ஒன்றுடன் மோதி, சென்ற பதினைந்து பேரில் செய்தி சொல்ல இருவரே மிஞ்சியிருந்தனர். தஞ்சை மருத்துவமனையில் ஜயம்மாவைப் பிரேதமாகவும் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்த நிலையில் சதாசிவத்தையும் கண்டனர் ரமணன் தம்பதி. இவர்களுக்காகவே காத்திருந்தது போல "பாரு, மாப்ளே, சாரு..." என்றதுடன் பொறுப்பை முழுவதுமாக அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் பயணமானார் சதாசிவம். மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றிருந்த சாருவுக்கு நடந்தது எதுவும் நினைவில்கூட இருந்ததாகத் தெரியவில்லை. அன்று முதல் சாரு அவர்களின் மூத்த மகளாகவே வளர்ந்துவந்தாள். அடுத்த வருஷம் சிவா பிறந்த பின் அவனைத் தன் தம்பியாகவே கருதி அன்பு செலுத்தினாள் சாரு. சதாசிவத்தின் சொத்துக்களான, கிராமத்திலிருந்த வீடு, நன்செய் நிலம், வாழைத்தோட்டம் மூலம் வந்த வருவாயைக்கூடக் குடும்பச் செலவுக்கு எந்தச் சூழ்நிலையிலும் எடுத்துச் செலவிடாமல் சேர்த்து வைத்து சாருவுக்கு நல்ல கல்வியளித்து உயர்வாகத் திருமணம் செய்யவே சேமித்து வைத்தனர் இருவரும்.

ஆண்டுகள் உருண்டோடின. சாருவுக்கு வாக்தேவியின் கருணை மிக நன்றாக இருந்தது; எல்லா வகுப்புகளிலும் முதல், பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் மாநில அளவில் முதன்மை என்றிருந்ததால் நல்ல உதவித் தொகையுடன் கல்லூரியிலும் படித்து வந்தாள். படிப்பு வந்த வேகத்திலேயே காதலும் வந்து சேர்ந்துகொண்டது. வழக்காடு மன்றப் போட்டி ஒன்றில் அனைத்துக்கல்லூரிகளும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் சாருவுடன் எதிர் நின்று வாது செய்து முதற் பரிசை வென்ற செல்வனின் அறிவு கூர்ந்த வாதமும், அவன் முன்வைத்த இலக்கியச் சான்றுகளும் சாருவை மிகவும் கவர்ந்தன. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்பதும், ஒருவர் வென்றால் மற்றவரைப் பாராட்டுவதும் என்ற அளவில் இருந்த நட்பு முதிர்ந்து காதல் என்ற பரிமாணத்தை அடைந்தது. செல்வன் நகரின் மிகப் பெரிய தொழிற்சாலை அதிபரின் செல்வமகன். அவன் சேர்ந்தாற்போல் ஒரு வாரம் ஒரே காரில் வந்ததாகச் சரித்திரமே கிடையாது. சாரு தன் காதல் விவகாரத்தை வீட்டில் தெரிவித்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் ரமணன் தம்பதியினர். காதலித்த காலம்வரை கண்ணுக்குத் தெரியாத அந்தஸ்து பேதம் மணப்பேச்சு என்று ஆரம்பித்ததும் பூதாகாரமாக வளர்ந்து நின்றது. செல்வனோ "என் அப்பா அம்மா என் திருமணத்தைப் பற்றி என்னென்னவோ விதமாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அதில் பாதியாவது வந்தால் ஒருகால் மற்ற வித்தியாசங்களைக் கண்டும் காணாது ஒத்துக்கொள்வார்கள். உன் குடும்பம் இதற்கு இசைந்தால் வீட்டுக்கு வந்து பேசச் சொல்" என்று தெளிவான வியாபாரியின் குரலில் கூறிவிட்டான். பெற்றோர் இல்லாக் குழந்தை, தன் காலடியில் வளர்ந்தவளுக்குத் தன் தகுதியை மீறிக்கூட நல்ல இடமாகப் பார்த்து மணமுடிக்க வேண்டுமென்றிருந்த அவர்களின் ஆசையில் கொதிக்கும் வெந்நீரைக் கொட்டிவிட்ட சாரு, செல்வனின் வீடு சென்று பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யும்வரை உண்ணாவிரதம், மௌன விரதம் என்று வீட்டையே கலக்கி எடுத்தாள்.

கிராமத்து வீடு, ரமணனின் இத்தனை வருடச் சேமிப்பு எல்லாமாகச் சேர்ந்து ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத்தூக்கி ஆட்டிலும் போட்டு, ஒருவிதமாகச் சாரு திருமதி செல்வன் என்ற பதவிக்கு உயர்ந்து நகரின் மையத்திலிருந்த மாளிகையின் மருமகளாக அமர்ந்தாள். செல்வனின் தாய்க்கு ஒரே குறை. வாய் ஓயாது "எங்கள் ஜனத்தில் ஊசி முதல் உலக்கை வரை சீர் அடுக்கி வைத்து சொந்த பந்தங்களை ஒரு நாள் அழைத்துக் காட்டவே ஒரு சடங்கு வைப்போம். இந்தக் கால் சீர் கல்யாண அழகுக்குச் சடங்கு வேறு கேடாக்கும். பார்க்கறவங்க சிரிப்பாங்க" என்று நொடிப்பதும், "இவளுங்களைப் படிக்கவா அனுப்பறாங்க; நல்ல கொழுத்த மீனாப் பார்த்துத் தூண்டில் போட்டு இழுத்து, அவளுடன் தாங்களும் வந்து கூடாரம் போட்டுடலாம்னு கணக்குப் போட்டுதானே காலேஜுக்கு அனுப்பறாங்க" எனப் பலவிதம் காது கூசுமளவுக்கு வசை மொழிகளை அடுக்குவதுமாக ஒருவாறு திருமணம் முடிந்து வீடு திரும்பினால் போதும் என்று ஆகிவிட்டது பாருவுக்கு.

"கட்டிக் கொடுத்துவிட்டு இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் மெத்தனமா இருக்காங்களேப்பா உன் பெண்டாட்டி வீட்டவங்க. பெருந்தலை ஒண்ணுமில்லாத அனாதைப் பொண்ணைக்கட்டி வந்தா நம்ம கழுத்திலேயே கல்லாத் தொங்கும் என்கிறது சரியாத்தானிருக்கு. அவளுக்கென்ன, ராசாத்தியாட்டம் வாழ்வு வந்தாச்சு. நல்லா உப்பரிகையிலே உட்கார்ந்திருக்கா. நீதான் சுத்த ஏமாளி. பெண் கொண்ட இடத்திலிருந்து ஒரு நாளுன்னும் கிழமைன்னும் ஏதாவது புதுத் துணி, பண்டம் பலகாரம், ஊஹூம். ஒரே பிள்ளையாப் பிறந்து அனாதை மாதிரி நீ நிற்கிறதைப் பார்த்தா வயிற்றை அள்ளிப் பிடுங்குது" என்று சதா புலம்பல். "கல்யாணத்தப்பவே அவங்க கடனும் உடனும்பட்டுதான் செய்தாங்க. இன்னும் அவங்களைப் பிடுங்கி எடுக்கணுமா. நமக்கு இருக்கிறது போதாதா?" என்று அவ்வப்பொழுது அவள் வாயை அடக்கிக்கொண்டிருந்தான் செல்வன். ஒரு நாள் பூகம்பம் வெடித்தது. "உன் பெண்டாட்டி ரொம்பக் கெட்டிக்காரிடா. அவள் அப்பா வச்சிட்டுப்போன நிலம் வாழைத்தோட்டம் எல்லாம் இன்னும் இருக்கு. அவளோட அக்காதான் எல்லாம் ஆண்டு அனுபவிச்சிட்டிருக்கா. இவளுக்கும் பங்கு இருக்கே. கேட்டு வாங்கத் தோணலியோ, இல்லை அக்காவுக்கே மான்யம் குடுத்துட்டாளோ" என்று அடி எடுத்துக் கொடுத்து விட்டாள் மாமியார்க்காரி. செல்வனும்தான் எத்தனை தூரம் மனைவிக்கும் அவளது வீட்டாருக்கும் ஆதரவாகப் பேச முடியும்? ஒரு கட்டத்தில் அவனே "அம்மா சொல்றாங்களே; உங்க அக்காவே தெரிந்து உன் பாகத்தை முன்னமே கொடுத்திருக்கணும். அவங்க அடித்தவரை லாபம்னு பேசாம இருக்காங்க. உனக்காவது கேட்டு வாங்கணும்னு தோணலியா?." என்று சற்றுக் கடுப்பாகவே கேட்டு விட்டான்.

'கொழுக்கட்டை தின்ன நாய் குறுணி மோர் தட்சிணை கேட்டதாம்' என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். தாய் தந்தை முகம் பார்த்தறியாத தன்னை வளர்க்க, படிக்க வைக்க, திடுதிப்பென்று நொண்டிப் பிடிவாதம் பிடித்ததன் விளைவாக எகத்தாறாக எகிறிவிட்டிருந்த திருமணச்செலவைச் சமாளிக்க எனப் பல விதங்களிலும் தன் தாய் தகப்பனார் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து முடித்த அக்கா, அத்திம்பேரின் தியாகம் கண்ணுக்கும், மனதுக்கும் தென்படவில்லை சாருவுக்கு. வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள் அக்காளைத் தேடி.

அன்று ஆடி வெள்ளிக்கிழமை. மாவிளக்கு ஏற்றிவிட்டுப் பூஜையிலிருந்தாள் பாரு. தடதடவென்று உள்ளே நுழைந்த சாருவைப் பார்த்ததும் பிரமித்து நின்றுவிட்டாள். தங்கள் வீட்டில் நைலக்ஸ் புடவையும், கவரிங் நகைகளும் அணிந்துகொண்டு கல்லூரிக்குச் சென்று வந்த பெண்ணா இவள். கழுத்து கொள்ளாமல் நகைகள், கைகள் ஒவ்வொன்றிலும் அரை டஜன் கல்லும், தங்கமுமான வளையல்கள், முகத்திலேயே ஒருவித அகம்பாவம் கலந்த பணக்காரத்தனம். புயல்போல வந்தவள் "எனக்குக் கல்யாணமாகி எட்டு மாசமாறது. இன்னிவரைக்கும் நாள், கிழமைன்னு ஒரு நாள் ஒரு பூ, பழமாவது வாங்கி வந்து என்னைப் பார்த்தீங்களா? காதல் கல்யாணம்தானே, கட்டிக்கொடுத்து விரட்டிவிட்டால் அந்தப் பக்கமே திரும்ப வேண்டாம். சீர் செலவெல்லாம் மிச்சம் என்கிற எண்ணம்தானே" என்று கொடூர வார்த்தைகளை வீசினாள்.

"என்ன மனஸ்தாபமானாலும் அத்திம்பேர் வரட்டும் பேசித் தீர்த்துக்கலாம். ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு அவர் வரும்வரை இருந்து கேட்டுக்கொள்" என்று பாரு தன்மையாகக் கூறியும் அங்கு கை நனைக்கக்கூடப் பிடிக்காமல், அருமையாகப் பாசத்தைக்கொட்டி வளர்த்த சிவாவைக்கூடப் பார்த்துப் பேசாமல் உம்மென்று உட்கார்ந்திருந்தாள். மாலை ரமணன் வந்ததும் ஒரே ரகளை. "பதினெட்டு வருஷமாக அப்பா வைத்த ஆஸ்தியிலிருந்து வந்ததையெல்லாம் நீங்களே அனுபவிச்சது போதாதா. எனக்குச் சேரவேண்டியதைப் பிரித்துக் கொடுத்துடுங்க" என்று கண்டிப்பான குரலில் கூறினாள். விஷயம் தெரிந்ததும் மறுபேச்சில்லாமல் அடுத்த வாரமே சாருவுக்குச் சேர வேண்டிய பங்கு அவள் பெயரில் பதிவு செய்யப்பட்டது. பாருதான் ஆர்த்து ஆர்த்துப் போனாள். "அனாதை மாதிரி நிற்க வேண்டிய பெண்ணை, பெற்றவர்களுக்கும் மேலாக வளர்த்து ஆளாக்கி, அவள் விரும்பினாள் என்பதற்காக விரலுக்கு மேல் வீங்கிக் கட்டிக் கொடுத்து இன்னிக்கு பட்டும் பவிஷுமா வந்து நிற்கிறான்னா அதற்கு அவள் ஏழேழு ஜன்மத்துக்கும் நமக்கு நன்றி செலுத்தணும். இப்படி வந்து எதிர் நின்று கேட்கிறாள்; நீங்களும் அப்படியே தூக்கிக் கொடுத்துட்டீங்களே" என்று புலம்பிக்கொண்டிருந்தாள். அதோடு சரி; ஏழெட்டு ஆண்டுகளாகிவிட்டன. இதுவரை பாரு அவளை வெறுத்து ஒதுக்கியதுடன், அவளைப்பற்றிய பேச்சை எடுத்தாலே இந்த நொடிப்பும், கடுகடுப்பும் காட்டுவது வழக்கமாகி விட்டது. ரமணனைப் பொறுத்த வரையில் விருப்பு வெறுப்பற்று சாரு எப்போதாவது பேசினால் பதில் கூறுமளவுக்குப் பக்குவப் பட்டிருந்தான். அவளுக்குப் பெண் குழந்தை பிறந்ததை அறிவித்தபோதும் அவன் மட்டும் சென்று பார்த்து வந்தான். பாரு தப்பித் தவறிக் கூட அவர்கள் வீட்டுப் பக்கம் போனதில்லை.

##Caption## மனிதர் பாதி சோதித்தால் தெய்வமும் தன் பங்குக்கு ஆட்டி வைக்க வேண்டாமா? லேசாக நெஞ்சை வலிக்கிறது என்று சிலமுறை சொல்லிக்கொண்டு மாத்திரை, மருந்து என்று எடுத்துக்கொண்டிருந்த ரமணனின் நோய் அதிகமாகி அறுவை சிகிச்சைக்கு அடி போட்டுவிட்டது. பலன், பாருவின் பங்கிலிருந்த நிலமும், தோட்டமும் கை மாறி மேலும் கடனானது. யார் செய்த புண்ணியமோ, நிரந்தரமான அரசுப்பணி என்பதால், அன்றாடப் பாட்டைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு காலத்தை ஓட்ட முடிந்தது. சிவா ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகக் கிடைத்த அரசுப் பள்ளியில் படித்து வந்தான். அதிர்ஷ்டம் படிப்பு மூலமாக அவனுக்கு இருந்ததால் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றான். உதவித் தொகையும், ரமணன் அலுவலகத்தில் அவ்வப்பொழுது வாங்கும் அட்வான்ஸ்களும் சேர்ந்து இதுவரை வந்து விட்டான். தேர்வு முடிந்ததும் தன் மகனுக்குக் கல்லூரிப் படிப்பாவது கிடைக்குமா, இல்லை, அப்பாவுக்குத் தப்பாது எழுத்தர், கணக்கர் என்று ஏதாவது வேலைக்கு முயற்சிக்க வேண்டுமா என எண்ணுகையில் ரமணனால் நீண்ட பெருமூச்சு ஒன்றைத்தான் விட முடிந்தது. பாருவுக்கென்ன, இந்த மாதிரி சமயங்களில் தங்கைக்கு ஓடி ஓடிச் செய்ததையும், அவள் எல்லாவற்றையும் மறந்து இன்று நிற்கும் நிலைக்குத் தங்களை ஆளாக்கிவிட்டதையும் கூறிப் புலம்பித் தன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வாள்.

மறுநாள் சாரு வரும்பொழுது வேண்டுமென்றே வீட்டைப் பூட்டிக்கொண்டு காஞ்சீபுரம் கோயிலுக்குக் கிளம்பிவிட்டாள் பாரு. இதை ஒருவாறு எதிர்பார்த்த ரமணன் சற்று முன்னதாகவே வீடு திரும்பி அவளை வரவேற்றான். புதுமனை புகுவிழா அழைப்புடன் உயர்ந்த ரகப் பட்டுப்புடவை, ரமணனுக்குப் பட்டு வேஷ்டி, சிவாவுக்கு விலை உயர்ந்த உடைகள் என்று தாம்பாளம் நிறையக் கொண்டுவந்து கொடுத்து அத்திம்பேரை நமஸ்கரித்து அழைத்தாள். "சாரு, இதெல்லாம் அக்காவுக்குப் பிடிக்காது; தயவு செய்து எடுத்துப் போய்விடு. முடிந்தால் நான் மட்டும் வருவேன்" என்று கண்டிப்பாகக் கூறி அவற்றைத் திருப்பி அனுப்பி விட்டான். விழாவுக்குத் தான் மட்டும் சென்று தலையைக் காட்டிவிட்டு எங்கோ கடன் வாங்கி ஆயிரத்தொரு ரூபாயை சீராகச் செய்துவிட்டு வந்தான். "யார் உன்னைப் போய் அவங்களையெல்லாம் அழைக்கச் சொன்னது. வீடு கொள்ளாமல் பால் காய்ச்ச வெள்ளி அடுக்கும், ஆளுயரக் குத்து விளக்கும்,பட்டுப் புடவை வேஷ்டி என்று சீராகக் கொண்டுவந்து சாய்ச்சுடப்போறாங்க பாரு; அந்த வழி ஒறவுமுறை உன்மட்டிலே விட்டுப் போச்சுன்னு நினைச்சுக்கோ" என்று மாமியார் கத்தித் தீர்த்தாள்.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்தன. சிவா மாநிலத்திலேயே இரண்டாவதாக வந்திருந்தான். செய்தியை அறிந்து சாரு மிக மகிழ்ச்சியடைந்து வாழ்த்துத் தெரிவித்தாள். ரமணனிடம் தொலைபேசியில் சிவாவின் மேற்படிப்பைப் பற்றி விசாரித்தாள். "பொறியியல் கல்லூரியில் சேர நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் மிகக் குறைவாகக் கணக்கிட்டாலும் கூட படிப்பு முடிய லட்சக்கணக்கில் செலவாகும் போலிருக்கு. நம் வசதிக்கேற்ப ஏதாவது பட்டப்படிப்பில் சேர்த்து விடலாமென்கிறாள் உன் அக்கா. பாவம் சிவா, சூழ்நிலை தெரிந்த பையன், கிடைத்த இடத்தில் சேர்ந்து முன்னேறிவிடுவான்" என்று சற்று விரக்தியாகவே பதிலளித்தான் ரமணன். மேற்கொண்டு உரையாடல் ஏதுமில்லை. சூழ்நிலைக்கைதியாக அன்று தன் தமக்கையுடன் தன் பாகத்திற்காகச் சண்டையிட்டுவிட்டாலும், இன்று அவள் குடும்ப விளக்காக உள்ள மகனின் எதிர்காலத்தை நன்கு அமைக்கும் கடமை தனக்கு இருப்பதாக உணர்ந்தாள் சாரு. பாறைக்குள்ளேயே ஈரம் சுரக்கும்பொழுது பாசத்தின் சக்தி மனித மனத்தை மாற்றுவது அதிசயமில்லையே. தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள் அவள்.

நான்கு நாட்கள் சென்றிருக்கும். அன்று ஞாயிறானதால் ரமணன் வீட்டிலிருந்தான். திடீரென்று வந்து நின்றாள் சாரு. வேண்டா வெறுப்பாக அவளை உள்ளே அழைத்தாள் பாரு. வெளியே வந்த ரமணனிடம் "அத்திம்பேர், சிவாவின் படிப்பு இனி என் பொறுப்பு. அதற்கு ஆகவேண்டியதைச் செய்யுங்கள்" என்றாள். "அதெல்லாம் வேண்டாம் அம்மா. ஏதோ எங்களால் முடிந்த அளவு கல்லூரிப் படிப்பைக் கொடுக்கிறோம். நீ சிரமப்பட வேண்டாம்." என்று மறுத்த பாருவிடம் "அக்கா, நீ என்னிடம் பேசாமலிருப்பதோ, என்னை வெறுப்பதோ நியாயம்தான். நான் புக்ககத்தவர் பேச்சைக்கேட்டு அன்று கண்டிப்பாக இருந்து என் பங்கை வாங்கியது தவறுதான். ஆனால், உன் வீம்பினால் இந்தப் பிள்ளையின் படிப்பு தடைப்படுவதை என்னால் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாது. நான் இன்று இந்த நிலையில் இருப்பது நீங்கள் செய்த தியாகத்தாலும், பெருந்தன்மையாலும்தான். இவன் படிப்புக்கு நான் பொறுப்பு. இதற்கு மட்டும் நீ மறுப்புக் கூறாதே." என்றதுடன், "அந்த நிலம் தோப்பு எல்லாவற்றின் வருமானமும் இன்றுவரை என் கணக்கில்தான் இருக்கு. இது உங்களுக்கும் உரிமையுள்ளதுதான். நாளையே மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பாருங்கள் அத்திம்பேர்" எனக் கூறினாள். அன்று முழுவதும் பாருவுக்குக் குழையடித்து, அனாவசிய மனக்கசப்பை வளர்த்த வேண்டாமெனப் பலமுறை எடுத்துக் கூறி சமாதானப் படுத்தியபின் ஒருவாறு அரை மனதாகச் சம்மதித்தாள் பாரு.

விஷயம் தெரிந்த சாருவின் மாமியார் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தாள். "இவள் இஷ்டத்துக்குப் போய் தாந்தோன்றித்தனம் செஞ்சுட்டு வந்து நிக்கறாளே. யார் சொத்தை எடுத்து, யாருக்குச் செலவழிப்பது? அவங்களுக்கென்ன, கொடுப்பார் கொடுத்தா, வாங்கறவங்களுக்குக் கொண்டாட்டம்தானே. அவங்க தகுதிக்கேத்தபடி படிக்க வைச்சா போதாதா?" என்று கண்டபடி வசைமாரி பொழிந்தாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த செல்வன், "அம்மா உங்களுக்கு மஞ்சக்காணியாக வந்த ஆஸ்தியின் வருமானமெல்லாம் உங்க வழியில் எட்டு வீட்டு உறவுக்கெல்லாம் கொடுத்துச் சீராடுறீங்களே; அதைப்பற்றி நாங்க ஏதாவது கேட்டோமா? சாருவின் பொருளை அவள் உறவுக்கு, அதுவும் பையன் படிப்புக்குச் செலவிட வேண்டாமென்று சொல்ல நாம் யார்?" என்று அவள் வாயை அடக்கிவிட்டான். தான் கூறவேண்டிய எல்லாவற்றையும் கூறித் தனக்கு ஆதரவாக நிற்கும் கணவனை நன்றியுடன் நோக்கினாள் சாரு.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com