ஏ. நடராஜன் எழுதிய 'மோகவில்'
இசையையும், பாத்திரங்களின் உணர்ச்சிப் பின்னல்களையும் மையமாக வைத்துத் தி. ஜானகிராமன் ‘மோகமுள்’ என்ற காவியத்தை எழுதினார். இன்று அதே உணர்ச்சிகளையும், இசையையும் மையமாக வைத்து ‘மோகவில்’லைத் தந்திருக்கிறார் ஏ. நடராஜன். இவர் சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர், நல்ல பேச்சாளர், கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர் என்பது தெரியும். இவரை நாவலாசிரியராக அறிமுகப்படுத்துகிறது இந்நாவல். தினமலர்-வாரமலரில் தொடராக வெளிவந்து பாராட்டப் பெற்ற ‘மோகவில்’ புத்தகமாக வெளிவந்திருக்கிறது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajanநாவலின் கதை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மாறிமாறிப் பயணிக்கிறது. க்ளீவ்லேண்ட் இசை விழாவில் ஆரம்பித்து மறுவருடம் அதே இசை விழாவில் நிறைவடைகிறது. கணேஷ் புகழ்பெற்ற வயலின் கலைஞன். பல இளம்பெண்கள் அவனுக்கு ரசிகைகள். ஆனால் அவன் காதல் கொள்வதோ தீபிகா மீது. க்ளீவ்லாண்டின் கம்ஃபர்ட் இன் ஹோட்டலில் வரவேற்பாளினியாக இருக்கும் தீபிகா, டாக்டர் யசோதாவின் ஒரே செல்ல மகள். அமெரிக்காவில் பிறந்தும், இந்தியக் கலாசாரத்தின் மீது பெருமதிப்பும் ஈர்ப்பும் கொண்டவள். நல்ல இசை ரசிகை. முதல் சந்திப்பிலேயே கணேஷை ஈர்க்கிறாள். தொடரும் சந்திப்புகளில் அது காதலாகிறது.

தீபிகாவின் அம்மா யசோதா காதலை எதிர்க்கிறாள். தன் வாழ்வில் பெற்ற கசப்பான அனுபவமும், கணேஷின் மீதான இனம்புரியாத வெறுப்பும் அதற்குக் காரணங்கள். கணேஷ் வேறு விதமாகச் சிந்திக்கிறான். தனக்கு விடப்பட்ட சவாலாக அதை நினைக்கிறான். யசோதாவை மீறி எப்படியாவது தீபிகாவை அடைய விழைகிறான். கலிபோர்னியாவில் நடக்கும் கச்சேரியில், மேடையிலேயே தீபிகாவைத் தன் ‘வருங்கால மனைவி’ என்று அறிமுகப்படுத்துகிறான். மறுநாள் செய்தித்தாளில் புகைப்படத்துடன் அதுபற்றிய செய்தி வெளியாகிறது. அதுகண்டு கோபப்படும் தீபிகாவை தனது கவர்ச்சியான பேச்சால் மயக்குகிறான் கணேஷ். அவனை முற்றிலும் நம்பி அவன் மீது தீவிரமாகக் காதல் வயப்படுகிறாள் தீபிகா. தாயின் எதிர்ப்பையும் மீறி மணக்கச் சம்மதிக்கிறாள். பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி ஆலயத்தில் திருமணம் நடக்கிறது.

இந்தியாவுக்குத் திரும்பி இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர் கணேஷும் தீபிகாவும். தீபிகாவுக்கும் வயலின் வாசிக்கத் தெரியும் என்ற உண்மை ஒருநாள் கணேஷிற்கு அதிர்ச்சியைத் தருகிறது. கணேஷின் குரு தீபிகாவின் இசையார்வத்தையும், திறமையையும் கண்டு பாராட்டி, அவளை வயலினின் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, கணேஷுடன் இணைந்து ஜோடியாகக் கச்சேரி செய்யுமாறு கூறுகிறார். சேர்ந்து வாசிக்கும் முதல் கச்சேரியிலேயே ரசிகர்களை ஈர்க்கிறாள் தீபிகா. இந்தியா முழுவதிலிருந்தும் இருவருக்கும் கச்சேரி வாய்ப்புகள் குவிகின்றன. அவளது புகழையும், முக்கியத்துவத்தையும் கண்டு பொறாமை அடைகிறான் கணேஷ். விளைவு, மணமுறிவு.

தீபிகாவை நிரந்தரமாகப் பிரிந்துவிட முடிவு செய்கிறான் கணேஷ். க்ளீவ்லாண்ட் இசை விழாவில் அதுபற்றிய முடிவை அறிவிக்க நினைக்கிறான். தீபிகாவால் எதையும் மறுத்துப் பேச முடியாத சூழல். அனைவரும் எழுந்து நின்று பாராட்டுமளவுக்கு மிக அற்புதமாகக் கச்சேரி நடக்கிறது. முடிந்ததும் அறிவிப்பதற்காக எழுந்து நிற்கிறான் கணேஷ். அப்போது திடீரென யாரும் எதிர்பாராதபடி மயங்கி விழுகிறாள் தீபிகா.

பின்னர் வரும் சுவையான நிகழ்வுகளைத் தனக்கேயுரிய நடையில் நகர்த்திச் செல்கிறார் ஏ. நடராஜன். சுவையான நாற்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் சிருங்கார ரசம் சற்றே அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். கூந்தல், புடவை, ஆடை, அலங்காரங்கள் என நாயகியை விதவிதமாக வர்ணிக்கும் விதத்தில் சாண்டில்யனையும் மிஞ்சிவிடுகிறார் கதாசிரியர். அதுவும் புடவை, அதன் நிறம், அதிலுள்ள வேலைப்பாடு, அதன் மடிப்புகள், கதாநாயகி அதை உடுத்தியிருக்கும் நேர்த்தி என்று... அடடா, படித்துத்தான் ரசிக்க வேண்டும்.

தமிழ்வாணன் நாவல்களில் அவரே ஒரு பாத்திரமாக வருவார். இங்கே நடராஜனின் நண்பரும், க்ளீவ்லாண்டில் தியாகராஜ ஆராதனையை மிக அற்புதமாக நடத்திவருபவருமான சுந்தரம், ஒரு முக்கியமான கதாபாத்திரம். சொல்லப் போனால் மோகனமாக நாவலை ஆரம்பித்து, பூபாளமாக ஒருவிதத்தில் முடித்துவைப்பது கூட அவர்தான். எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி சுவையாகப் படைக்கப்பட்டிருக்கும் நாவல் ‘மோகவில்’.

நூல: மோகவில் (நாவல்);
ஆசிரியர்: ஏ. நடராஜன்; 384 பக்கங்கள்,
விலை ரூ. 200;
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17;
இணையதளம்: Kavitha Publication

சிசுபாலன்

© TamilOnline.com