பேராசிரியர் நினைவுகள்: சொல்லைக் கடந்தா, சொல்லோடு கலந்தா...
‘கவிதை--ஏன், எழுத்தின் எந்த வடிவமானாலும்--தான் சொல்ல விழைவது இன்னது என்பதைப் பற்றிய தோராயமான தெளிவு எழுதுபவனுக்குக் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்‘ - இது ஆசிரியர் நாகநந்தி விடாமல் வலியுறுத்தி வந்த கருத்து. இன்னதைச் சொல்லப் போகிறோம் என்ற இலக்கை மனத்துக்குள் நிறுத்தாமல் ஏதோ ஓரிடத்தில் ஏதோ ஒரு சொல்லைப்போட்டுத் தொடங்கிவிட்டு அதன் பின்னர் அதற்கிணங்கச் சொற்களைக் கோத்துக்கொண்டே இயங்கும் கவிப்போக்குக்கு எதிரானவர் அவர். சிலர் ‘சொல்ல நன்றாக இருக்கிறது; கேட்க நன்றாக இருக்கிறது’ என்ற ரீதியில் சொற்களை இட்டுத் தொடங்குவார்கள். பின்னர் கவிதை அதன் போக்கில் வளரும். இப்படிப்பட்ட சமயங்களிலும் அரிதாக ஒருசில கவிதைகள் ஆழமானவையாக அமைவதும் உண்டு. அது அந்தந்தத் தனிப்பட்ட கவிஞனுடைய அனுபவம், பயிற்சி, சிந்தனையோட்டம் ஆகியவற்றைச் சார்ந்தது. அப்படியல்லாமல் எங்கோ ஓரிடத்தில் தொடங்கி, தொடர்ந்து எப்படி வழிநடத்துவது என்றறியாமல், ‘தகத்தகாயமாய்’, ‘ஜாஜ்வல்யமாய்’ என்பனபோன்ற கவர்ச்சிகரமான சொற்களால் கவிதையை நிரப்புபவர்களும் உண்டு. ‘கண்ணுக்குள் விழுந்துவிட்ட காந்தப் புலன்களினால் காணாமல் போய்த்தொலைந்த என் சுயம்’ என்றெல்லாம் வார்த்தை கோத்துச் சொற்சிலம்பம் ஆடுபவர்களும் உண்டு. இந்த வகைக் கவிதைகள்--அல்லது எழுத்தின் மற்ற வடிவங்கள்--எல்லோராலும் மேற்கொள்ள முடியாதவை. இடையில் சுழித்தோடும் நதிக்கு மேலே இரண்டு மலைச் சிகரங்களுக்கு நடுவில் கயிறு கட்டி, அதன்மேல் நடக்குமளவுக்குப் பயிற்சியுள்ளவன் செய்ய வேண்டிய ஒன்றை, சுவரைப் பிடித்துக்கொண்டு நடைபயிலும் நிலையில் செய்ய முடியாததைப் போன்றது, இப்படிப்பட்ட முயற்சிகளுக்குள் முறையான சிந்தனைப் பயிற்சி இல்லாதவர் தன்னைச் செலுத்திக்கொள்வது என்பார் பேராசிரியர். இப்படி இலக்கில்லாமல் தொடங்கி ஏதோ ஒரு நிசசயிக்கப்பட்ட இலக்கைத் தொடுபவர்கள் உண்டு. அவர்கள் மலைச் சிகரங்களுக்கு இடையில் கயிறுகட்டி அதன்மேல் நடக்கப் பழகியவர்கள்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



இந்த இரண்டாவது வகை முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியும். விளைச்சலின் தரம், அந்த எழுத்து முயற்சி தொடங்கப்பட்ட விதத்தைப் புறந்தள்ளிவிடும். ஆனால் இங்கே வலியுறுத்தப்படவேண்டியது என்னவென்றால், இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு அசாத்தியப் பயிற்சி அவசியம். ஒரு பாலமுரளி கிருஷ்ணா அநாயசமாகச் செய்கிற ‘அக்கணப்’ பிரயோகங்களை (extemporaneous effusions) மற்றவர்களால் நினைத்தும் பார்க்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இதுவும். நினைத்தால் நினைத்த நேரத்தில் நினைத்த வேகத்தில் அவரால் இசைக்குள் பயணிக்க முடிகிறது என்றால் அதற்கு மிகப் பல்லாண்டுகளாக மேற்கொண்ட பயிற்சியும், பயிற்சியைத் தன்வயப்படுத்த அவர் எடுத்த முயற்சியும், எல்லாவற்றுக்கும் மேலே இன்னதென்று விளக்க முடியாத அந்த ‘ஏதோ ஒன்றும்’ (இதனை அருள் என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்) கலந்ததன் பின்னர்தான் இப்படிப்பட்ட வினாடிநேரத்தில் தொடங்கி மனோவயம் நீடிககும்வரை தொடரும் வெளிப்பாடுகள் சாத்தியமாகின்றன. எனவே, எழுத்தில் இதுவும் ஒரு வகை. நிரம்பிய பயிற்சியும் சொல் ஆளுமையும் கொண்டவர் மட்டுமே தொடவேண்டிய ஒரு துறை. இது ஒருபுறம் இருக்கட்டும். ஆசிரியர் ‘அடிப்படைக் கட்டுமானம்’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்த விஷயத்துக்கு வருகிறேன்.

##Caption## ஒருநாள் நல்லூர் இலக்கிய வட்டக் கவியரங்கம் நடந்துகொண்டிருந்தது. இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த எங்கள் பெரும்பான்மைக் குழுவில் நாற்பதுகளைக் கடந்த பெரியவர்கள் ஒருசிலரும் இருந்தனர். யாப்பில் தேர்ந்த பயிற்சியும், மரபில் ஊற்றமும் கொண்ட பெரியவர்கள். அப்படிப்பட்ட கவிஞர் ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். Stock-in-trade அல்லது stock phrases என்று அறியப்படுவதான, சொல்லிச் சொல்லி நைந்துபோன, அந்தச் சொல்லோ அல்லது சொற்றொடரோ தொடர்ந்து நாவுக்கும் பல்லுக்கும் இடையில் அடிபட்டு அடிபட்டு, அவற்றின் பொருள் என்பது மனத்தில் தைக்காமல், பெரும்பாலும் ‘தலைக்கு மேலேயே’ பறந்து சென்றுவிடும். ஒருபொருளை, வழக்கமாகச் சொல்லப்படும் சொல்லை விடுத்து வேறொரு வடிவத்தில் சொல்லும்போது அதன் பொருள் தைப்பதைப்போல் இப்படிப்பட்ட வர்த்தகச் சந்தைச் சொற்கூட்டங்கள் தைப்பதில்லை. அது ஒரு புறமிருக்க, தான் சொல்லும் அந்தச் சொற்றொடரின் பொருள் இன்னதுதான் என்பதை அதைப் பயன்படுத்தும் எழுத்தனேகூட உணரத் தலைப்படாத அளவுக்கு அவை அளவுக்கதிகமான பயன்பாட்டால் மழுங்கிப் போயிருக்கும். அப்படித்தான் அன்று அந்தப் பெரிய கவிஞர் வாசித்த கவிதையில் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற தொடர் விழுந்திருந்தது.

முன்கையிலிருந்து ஜிப்பாவை உயர்த்திக்கொண்டு எழுந்தார் ஆசிரியர். ‘ஒரு நிமிஷம்’ என்று இடைமறித்தார். ‘இப்ப சொன்னீங்களே அந்தத் தொடரில் உள்ள ‘பயிர்ப்பு‘ என்பதன் பொருள் என்ன?’ என்று நிர்தாட்சண்யமாகக் கேட்டார். கேள்வி கேட்கும்போது தாட்சண்யமாவது! அதுவும் பேராசிரியர் நாகநந்தியிடம்! தடுமாறிப் போனார் கவிஞர். பொருள் சொல்ல முடியவில்லை; தெரியவிலலை. அவருக்கென்ன, சபையில் இருந்த எவருக்குமே அந்தச் சொல்லின் பொருள் தெரியவில்லை. ‘ஒரு கவிஞன், தான் பயன்படுத்தும் சொற்களைப் பொருளுணர்ந்து பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறதா இல்லையா?’ என்று அடுத்த கேள்வியை எழுப்பினார். எங்களில் பலருக்கு ஆசிரியரின் இந்தப் போக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அந்தக் கவிஞரை ஏதோ அவமதித்துவிட்டார் என்பது போன்ற பிரமையில் பலர் இருந்தோம். பிறகு பயிர்ப்பு என்ற சொல்லின் விளக்கத்தையும், எப்படி இந்த ‘அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு’ என்ற நாற்குணமும் நாற்படையா மெச்சப்பட்டு வந்து, மெல்ல மெல்லத் தம் பொருளை இழந்து, உருவம் மாறி, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பதையெல்லாம் கவியரங்கம் முடிந்து வீடு திரும்பும்போது வழிநெடுகப் பேசிக்கொண்டு வந்தார். அதை இன்னொரு முறை சொல்கிறேன். இப்போது, ‘பயிர்ப்பு’ ஏற்படுத்திய சூடும், அதனால் விளைந்த விவாதங்களையும் கொஞ்சம் பார்ப்போம். சம்பந்தப்பட்ட அந்தக் கவிஞர் பண்பு நிறைந்தவர் என்பதனால், ‘பொருளை அறியவேண்டும் என்பதற்காகத்தானே சொல்கிறார்’ என்று அந்தக் கேள்விக்குரிய நியாயமான இடத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் கொடுத்துவிட்டார். இளந்தாரிகளான எங்களுக்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

‘கவிதையில் ஒவ்வொரு சொல்லையும் புரிந்துகெண்டுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் என்ன?’ என்று முகம் சிவக்க, கழுத்து நரம்பு புடைக்க என் நண்பனொருவன் கேட்டதும், அதற்குக் கைகளை மார்புக்குக் குறுக்காகக கம்பீரமாகக் கட்டிக் கொண்டு, அமைதியாகவும், குறும்பும் கிண்டலும் கலந்த புன்னகையோடும் ஆசிரியர் அவரை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்ததும் இன்னமும் என் மனத்திரையில் ஆழப் பதிந்திருக்கின்றன. ‘கவிதானுபவம் என்பதே சொல் கடந்த ஒன்று. இதுல கவிதையில் ஆளப்பட்டுள்ள ஓரிரு சொற்கள் புரியாமல் போய்விட்டால் என்ன நஷ்டம்? ஏன் ஒவ்வொரு சொல்லையும் புரிந்துகொண்டுதான் ஆகவேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள்? கவிதையின் ஓட்டமும் அதன் பொதுவான நடையும் அது உண்டாக்கும் அகச்சூழலுமே பொருளை உணர்த்திவிடுகின்றனவே! சொல்கடந்த அனுபவத்தை அடையச் சொல் எதற்கு? உணர்ச்சியில் மெய்மறந்து நண்பர் முகம் சிவந்திருந்தார்.

அமைதியாகக் கையமர்த்தினார் ஆசிரியர். ‘இந்த வாதம் இருக்கில்ல, ‘கவிதானுபவம் என்பது சொல்கடந்தது’ என்பது, அதுவும் சரி; ‘இசை என்பது மொழி கடந்தது’ என்பதும் சரி அர்த்-ஸத்யா எனப்படும் பாதி உண்மைகள். They are subject to conditions and limitations. முதலில் அதை உணரவேண்டும்’ என்று தொடங்கினார். ‘நீங்கள் திசைமாற்றுகிறீர்கள்’ என்று தடுத்தார் நண்பர். மீண்டும் அதே குறும்புப் புன்னகையுடன்--மெலிதாக நீலம் தீற்றப்பட்ட மூக்குக் கண்ணாடி வழியாக அவருடைய கண் சிரிப்பது தனியாகத் தெரியும்--தொடர்ந்தார். ‘ஆமா. கவிதை என்பது சொல்லில்லைதான். சொல் கடந்ததுதான். ஆனால் சொல்லால்தானே ஆகியிருக்கிறது. இருஙகள். இன்னொன்று சொல்கிறேன். மாடி என்பது படி இல்லைதான். படி, மாடியாகாது. படியேறிவிட்டால் மாடிக்குப் போனதாகாது. ஆனால் படியைக் கடந்தால்தானே மாடிக்குப் போகவேண்டும்’ என்று நிறுத்தினார். ‘இரண்டுக்கும் என்ன தொடர்பு’ என்று நண்பர் கோபம் தீராமல் வாதித்தார். ‘படியில் ஏறி, படியைக் கடந்தால்தான் மாடியை அடையமுடியும் எனபதுபோல், சொல்லில் ஏறி, சொல்லைக் கடப்பதுதான் நீங்கள் சொல்கின்ற அந்த ‘சொல்கடந்த’ நிலை. முதலில் படியில் ஏறவேண்டும். அதைப்போல முதலில் ஒவ்வொரு சொல்லையும் உள்ளே வாங்கிக்கொள்ள வேண்டும். எங்காவது ஒரு சொல், சரியாக விளங்கிக் கொள்ளப்படாவிட்டால், அனுமானத்தால் உணரப்பட்டல், அந்த அனுமானம் சரியாக இருக்கும்வரை பிழைத்தது. சரியாக இல்லாமலும் போகும் சாத்தியம் ஒன்று இருக்கிறது என்பதையும் உணரவேண்டும். அப்படி, சரியாக உணராமல், பிழையாக ‘இதுதான் அதற்குப் பொருள்’ என்று கொள்ளும் சொல் அந்தக் குறிப்பிட்ட கவிதையின் சாவியாகவும் இருக்கலாம். Might be the key to the whole poem. அங்கே இடறினால் மண்டையில் அடிதான் படும்’ என்றார். என்னவோ நழுவல் பாய்ச்சல் காட்டுகிறாரோ என்ற பாவனையில் நண்பர் அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சிரித்தவாறே தொடர்ந்தார். ‘ஒண்ணும் வேணாம். பாரதியின் காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்’ படிச்சிருககீங்கதானே’ என்றார். பாரதியைப் போய், அதுவும் காணிநிலம் வேண்டும் பாட்டைப்போய் ‘படித்திருக்கிறாயா’ என்று கேட்டதையே அவமானமாகக் கருதும் பாவனையில் சற்று அடிபட்ட பார்வை பார்த்தார் நண்பர். எம்.ஏ. படித்தவனை, எட்டாங் கிளாஸ் போயிருக்கியா என்று கேட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது நண்பருக்கு. ஆசிரியர் தொடர்ந்தார். ‘சரி. இதன் பொருள் என்ன? பாரதி பராசக்தியிடம் என்ன கேட்கிறான்? நீங்கள்தான் என்றில்லை. இங்க இருக்கும் பதினைந்து இருபது பேரில் யார் வேணும்னாலும் பதில் சொல்லுங்க. பாரதி என்ன வேண்டும் என்று கேட்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், அல்லது எல்லோரும் நினைக்கிறார்கள்’. என்ன புரிந்துகொணடிருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள் என்றார். ம்? காணிநிலம் எங்களை அப்படி ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்று நாங்கள் கற்பனைகூடச் செய்திருக்கவில்லை. அடுத்த முறை சொல்கிறேன்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com