மலையேற்ற அனுபவங்கள்
ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

1972ல் தேசீய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தேன். சேர்ந்தவுடன் ஒரு மாதத்தில் மலையேற்றப் பயிற்சிக்காக உத்தரகாசி போய்ச் சேர்ந்தேன். மலையேறும் அந்தக் குழுவில் நாங்கள் 20 பேர் இருந்தோம். அதில் என்னைச் சேர்த்து நால்வர் பெண்கள். மற்ற மூவரில் சுனிதா திங்க்ரா (தற்போது சுனிதா முகர்ஜி); இந்துபாலா மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். கிரண் பேடி மிகப் பிரபலமான காவல்துறை அதிகாரி.

இந்தியக் காவல் துறையில் முதன்முதலில் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி கிரண் பேடிதான். அவர் காவல் படையில் சேரும் ஆர்வத்தைக் குலைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருந்து அதிகாரிகளுடன் போராடினோம். அப்போது இந்திராகாந்தி பிரதமர். அவர்மூலம் பல போராட்டங்களுக்குப் பிறகு கிரண் பேடியின் கனவு நனவானது. ஆனால் இதற்காகக் கிரண் சொந்த வாழ்வில் கொடுத்த விலை, இழப்புகள் அதிகம்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



தாமே விரும்பி, மனப்பூர்வமாகக் காவல் துறையில் சேரும் இதர பெண்கள் மனிதப் பண்புடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதற்குக் கிரண் வழிவகுத்துக் கொடுத்தார். அவர் புல்வெளி டென்னிஸ் ஆட்டத்தில் வெற்றிகண்ட வீராங்கனை. குதிரை சவாரியில் மிகத் திறமையானவர். தேசிய அகாடமியில் பல ஆண்களைவிட அவர் பலசாலியாக இருந்தார். நாங்கள் அதிகாரிகளை எதிர்த்துப் போராடியபோது, பெண்கள் காவல்துறையில் சேரமுடியாது, அவர்கள் பலவீனமானவர்கள் என்று கூறினர். உண்மையில் அவை நகைப்புக்கிடமான கருத்துக்கள் என்பது கிரணின் மூலம் நிரூபணமானது. காவல்துறையில் சேர்வதற்கு பெண்கள் உடலிலும் மனத்திலும் வலுவானவர்களாக இருக்க வேண்டும். கிரண் அப்படித்தான் இருந்தார்; அப்படித்தான் இன்றும் இருக்கிறார்.

முசோரியிலிருந்து கங்கோத்ரிக்கு...
##Caption## ஒரு செப்டம்பர் நாள் காலையில் நாங்கள் பேருந்தில் முசோரிக்குப் புறப்பட்டோம். உத்தரகாசிக்குச் செல்லும் நீண்ட, அழகு கொஞ்சும் பாதை. வழியில் கர்வால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகரில் இரவு தங்கினோம். அங்கு விரைவோட்ட நதி ஒன்று இருந்தது. மறுநாள் காலை பேருந்து புறப்படுவதற்குமுன் அதன் ஓரமாக நடந்து சென்றேன். பின் தெஹ்ரி சென்றோம். அங்கு ஒரு குன்றின் மீதுள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினோம். அங்கிருந்து நகரம் முழுவதையும் பார்க்க முடிந்தது. அந்த விருந்தினர் இல்லத்தின் ஒரு சுவரில் கர்வாலி பெண்ணின் மங்கலான சித்திரம் ஒன்றிருந்தது. நூறு வருஷங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியாளராக இருந்த பிரிட்டிஷ்காரர் அந்தப் பெண்ணின் அழகில் சொக்கிப்போய் எதிர்ப்புகளை மீறி அந்தப் பெண்ணணைத் திருமணம் செய்து கொண்டார். அந்த விருந்தினர் இல்லமே அவர்களுடைய வீடாக இருந்திருக்கிறது. பம்பு செட்டோ, மின்சாரமோ இல்லாத, நூறாண்டுகளுக்கு முன் குன்றின் உச்சியில் கட்டப்பட்ட அந்த வீட்டிற்கு, கீழே இருந்து குழாய் அமைப்பு மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டிருந்ததும் இன்றும் அது இயங்கிக் கொண்டிருப்பதும் பெரிய அதிசயம்.

இறுதியாக உத்தரகாசியில் உள்ள மலையேறும் கழகம் போய்ச் சேர்ந்தோம். அதன் இயக்குனர் கர்னல் சர்மா. மிகவும் கண்டிப்பானவர். அவருக்கும் என்னைப் பார்த்துத் திருப்தி இல்லை. இந்தக் கடுமையான பயிற்சியை நான் தாக்குப்பிடிக்க மாட்டேன் என்று அவர் கருதியிருக்கலாம். இறுதியில் வெற்றிகரமாக நிறைவுசெய்த பத்துபேர்களிலும், இரண்டு பெண்களிலும் நானும் ஒருத்தியாக இருந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. வெற்றிபெற்ற மற்றொரு பெண், வேறு யார், கிரண் பேடி.

உத்தரகாசிக்கு அருகில் உள்ள குன்றுகள் மிக அழகானவையாகவும் செங்குத்தாகவும், மரங்கள் நிறைந்ததாகவும் இருந்தன. நாங்கள் ஆரம்பத்தில் கடல் மட்டத்திற்கு மேல் 11,000 அடி, பிறகு 14,000 அடி, அப்புறம் 16,000 அடி உயரத்திற்குச் சென்றோம். மூச்சுத் திணறலை நீக்க எங்களுக்கு மூச்சுப் பயிற்சி கற்பிக்கப்பட்டது. பல வகையான கயிறுகள், சாதனங்களைக் கொண்டு மலையேறும் வழிகளைக் கற்றுக் கொண்டோம்.

பிறகு கங்கோத்ரி. அங்கே கூடாரங்களில் தங்கினோம். சில சாதுக்கள் குகைகளிலும் குடிசைகளிலும் வசித்தனர். இன்னும் சிலர் பனிபடர்ந்த ஆற்றின் நடுவில் ஒற்றைக்காலில் தவக் கோலத்தில் நின்றனர். பல சாதுக்களுடன் சிநேகம் செய்து கொண்டேன். (கர்னல் சர்மாவுக்கு இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை). அவர்கள் தங்களுடைய சொந்த உலகத்தில் இருந்தனர். அவர்களில் யாரும் பிறருடன் பேச விரும்பவில்லை. ஆனால் பலர் மிகுந்த உற்சாகத்துடன் என்னிடம் பேசினர். அவர்களது வாழ்க்கைக் கதைகளைக் கேட்டேன். பலர், துறவறத்தை மேற்கொள்ளும் உண்மையான ஆர்வத்துடனேயே அவ்வளவு தொலைவு வந்ததுள்ளனர். தாம் தேடி வந்ததைக் கண்டுபிடித்து விட்டதை, அல்லது அதை நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்திருந்தனர். சாதுக்கள் மத்தியில் நான் கழித்த அந்த நாள்கள் என் சிந்தனையைச் செழுமைப்படுத்தியது என்றால் மிகையில்லை.

கோமுகி சென்று திரும்பியது
கங்கோத்ரியில் இருந்து பதினான்கு மைல் தொலைவில் உள்ள கோமுகியை ஆறுமணி நேரத்திற்குள் நாங்கள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் எங்களுக்கான சோதனைத் தேர்வு. குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்குபோக முடியாதவர்கள் மேற்கொண்டு பயணத்தைத் தொடராமல் திரும்பி விட வேண்டும். அந்தக்காலத்தில் கோமுகி செல்லும் பாதை ஆடுகள் சென்ற ஒற்றையடிப்பாதை தான். பாதை நெடுகிலும் குழிகளும் கற்பாறைகளுடன் பெரிய கூழாங்கற்களும் கிடந்தன. குளிர்காலம் தொடங்கிவிட்டதால் யாத்ரீகர்களும் காணப்படவில்லை. சாலை நெடுகிலும் ஆறு, கற்கள், பனிப்பாறைகள் தவிர தேநீர்க் கடையோ யாத்ரீகர் தங்குமிடமோ இல்லை.

##Caption## 'சோதனை நாள்' அன்று நான் மிகவும் மனம் கலங்கி இருந்தேன். தோல்வி ஏற்படுமோ என்ற பயம் இருந்தது. இதை தினு பராரா, கேஸார், மற்றும் இருவரிடமும் தெரிவித்தேன். அவர்கள் ‘நான் பின்னால் விடப்பட மாட்டேன்’ என்று என்னுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். என்னுடன் சேர்ந்து நடப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
நாங்கள் ஐவர். எங்களில் ஒருவர் எப்போதும் பாதையைச் சரிபார்த்துக் கொண்டு முன்னால் செல்வார். நான் இரண்டாவது நபருக்கும் மூன்றாவது நபருக்கும் இடையில் நடப்பேன். நான் சிரமப்படும்போது என்னை ஒருவர் கைபிடித்து அழைத்துச் செல்வார். அல்லது ஒருவர் அப்படியே பின்னாலிலிருந்து மெல்ல முன்னால் தள்ளுவார். நான் நடக்க முடியாமல் களைப்புற்றால் எனக்காகச் சிறிது நேரம் அவர்கள் காத்திருந்து அழைத்துச் செல்வர்.

வழியில் இருந்த தோப்பின் மரநிழலில் சமையல்காரர் எங்களுக்காகக் கொடுத்திருந்த பூரி, உருளைக்கிழங்கைக் காலை உணவாக உண்டோம். சற்று ஓய்வெடுத்தோம். ஆற்றின் குளிர்ந்த நீரில் குளித்துப் புத்துணர்வு பெற்றோம். வியக்கத்தக்க இயற்கை அதிசயங்கள் எங்கள் முன்னால் விரிந்து கிடந்தன. பாதையில் ஓர் வெப்பநீர் ஊற்றைக் கண்டோம். அதில் குளித்து மருத்துவப் பயனும் புதுத்தெம்பும் பெற்றோம். களைப்பு பறந்தோடியது.

கோமுகியை நெருங்கிக் கொண்டிருந்த போது குளிர்காற்று வீச ஆரம்பித்து விட்டது. பிற்பகலில் கண்ணை மறைக்கும் பனிப்புயல் வீசக்கூடும் என்றும் அது சில சமயங்களில் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்றும் சொல்லப்பட்டது. பாதையிலும் கோமுகியைச் சுற்றிலும் உள்ள காட்சிகள் மனத்திலிருந்து அகலாதவையாக இருந்தன. நாங்கள் தைரியமாகப் பனிப்பாறைகளின் உச்சியில் ஏறி நின்று, கங்கைச் சமவெளியையும், கங்கை நதியின் உற்பத்தி ஸ்தானத்தையும் கண்டு களித்தோம். ஒருவழியாக கோமுகியை அடைந்தோம்.

எங்கள் இலக்கு எட்டப்பட்டது. பின் மெதுவாக கங்கோத்ரிக்குத் திரும்பினோம். இந்தப் பந்தயத்தில் சென்ற பதினாறு ஆண்களில் ஏழு பேர் சோதனையில் தேர்வு பெற்றனர். பெண்கள் பிரிவில் தேர்வு பெற்றவரில் ஒருவர் கிரண் பேடி, மற்றவர் நான். இந்த எனது வெற்றிக்காக எனது அருமை நண்பர்களுக்கு நான் என்றுமே கடமைப்பட்டவள்.

ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com