வறுமையைவிட வெறுமை கொடியது
அன்புள்ள சிநேகிதியே,

இந்த விஷயம் என்னுடை நெருங்கிய நண்பர் குறித்தது. எனக்குத் தமிழ் சரியாக எழுதத் தெரியாது. நான் சொல்லச் சொல்ல என்னுடைய அம்மா இதை எழுதுகிறார். அம்மாதான் ’தென்றலு’க்கு எழுதச் சொல்லித் தூண்டியது.

என்னுடைய சிநேகிதிக்கு அம்மா, அப்பா இருவரும் இல்லை. ஒரே பெண். போன வருடம் அம்மா இறந்துவிட்டார். அதறகுக் கூட என்னால் போகமுடியாத நிலை. மிகவும் ஆடிப் போய்விட்டாள். அந்த நாட்களில் அவ்வப்போது என்னுடன் வந்து தங்கிவிட்டுப் போவாள். என் அம்மா மிகவும் ஆதரவாக இருப்பார். மேல்தரக் குடும்பம். திருமணத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அவளுடைய அம்மா திடீரென்று போய்விட்டார்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



சமீபகாலமாக என் சிநேகிதி தன்னுடன் பணிபுரிபவர் ஒருவனைப்பற்றி அடிக்கடிப் பேச ஆரம்பித்தாள். எனக்கு அவனைப் பற்றிய விஷயம் கொஞ்சம் தெரியும். நிறையப் பெண்களுடன் அவனைப் பார்த்திருக்கிறேன். ஒரு flirt என்பது என்னுடைய எண்ணம். நான் அதை அவளிடம் தெரிவித்தேன். “அதனால் என்ன, இந்த ஊரில் எல்லோரும் அப்படித்தானே இருக்கிறார்கள்? கல்யாணம் செய்துகொண்ட பிறகு நேர்மையாக இல்லாவிட்டால்தானே பிரச்னை” என்று என்னை வெட்டிவிட்டாள். அவன் அவளை அடிக்கடி வந்து சந்திக்கிறான். அவர்கள் அடிக்கடி வெளியில் ஒன்றாக இருப்பதைப் பார்த்துவிட்டு, எங்கள் தோழியர் குழுவில் இருப்பவர்கள் என்னை அவளுக்கு அறிவுரை கூறச் சொன்னார்கள். எல்லோருக்கும் இதேபோன்ற எண்ணம் அவனைப்பற்றி இருப்பதால், நிச்சயம் அவளுக்கு ஏற்றவனல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. பிற்காலம் பாழாய்ப் போய்விடப் போகிறதே என்று எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது.

##Caption## இந்த சிநேகிதி என்னைவிட வயதில் சின்னவள். நான் என் தங்கையைப்போல இவளை பாவித்து வருகிறேன். நான் வாழ்க்கையில் இவளைப் போல ஒருவனை நேசித்து, அவசர முடிவு எடுத்து இப்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அது ஆகி விட்டது 7, 8 வருடம். எவ்வளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பேன் என்று யாருக்கும் புரியாது. இப்போது அம்மாவின் துணையோடு வாழ்ந்து வருகிறேன். ஆன்மீகப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன். மனது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. இந்தப் பெண் இதேபோலக் கஷ்டப்படக் கூடாது என்று 2, 3 முறை பேச முயற்சி செய்தேன். இந்த விஷயத்தில் என்னிடமிருந்து அவளுக்கு ‘சப்போர்ட்’ கிடைக்கவில்லை என்பதால் என்னிடம் முன்போல் பழகுவதில்லை. நான் ஃபோன் செய்தாலும் எடுப்பதில்லை. இவளுக்கு அவனைவிட நல்ல இடம் கிடைக்கும். பணியிடத்திலும் அவளை விட அவன் ஒருபடி தாழ்ந்தவன். சரியான வாய்ச் சவடால் பேர்வழி. இவளுக்கு அதை எப்படி உணர்த்துவது என்று தெரியாமல் குழம்புகிறேன். எப்படியாவது அவளை வரவழைத்து நல்ல அறிவுரை கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உங்கள் கருத்துக்களை எழுதவும். ’யாருக்கு, யார் பொருத்தம்’ என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

இப்படிக்கு
....................

அன்புள்ள சிநேகிதியே,

உங்கள் தோழிக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற உங்கள் நல்லெண்ணத்துக்கு வாழ்த்துக்கள். உங்கள் பார்வையில் அவன் உங்கள் தோழிக்குப் பொருத்தமானவன் இல்லை. ஆனால், எனக்கு அந்த மனிதரைப் பற்றிய போதுமான அடிப்படை விவரங்கள் தெரியாத நிலையில் அவரைப்பற்றிய என்னுடைய தனிக்கருத்துக்களை வெளியிட வாய்ப்பு இல்லை.

நமக்கு நாம் தாகம் என்று ஏற்படும்போது பொறுக்க முடியாத நிலையில் எந்தத் தண்ணீரையும் குடித்து விடுவோம். அதுபோல, மனம் வெற்றிடமாக இருக்கும்போது, அங்கே புல் முளைத்தால் கூட ஏதோ பசுமை தெரிகிறதே என்று வளர விடுவார்கள். வறுமையைவிட வெறுமை கொடிது. தாயின் மறைவுக்குப் பிறகு எந்த அளவுக்கு தான் தனிமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு உங்கள் சிநேகிதிக்குத்தான் தெரியும். அந்த நபர் உங்கள் தோழியை உபயோகித்துக் கொள்ளலாம்; இல்லை, இந்த முறை உண்மையிலேயே காதலித்தும் இருக்கலாம். காதல்வயப்பட்ட யாருமே, பிறர் உபதேசத்தைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. காதல் என்பது ஒரு emotion. அங்கே சிந்தனைக்கு வேலை மிகவும் குறைவு. மனம்தான் ஆதிக்கம்; மூளை அல்ல. ஆகவே, இந்த விஷயத்தில் உங்கள் தோழி உங்கள் அறிவுரையைக் கேட்பாரா என்பது சந்தேகமே. உங்கள் கடமையை நீங்கள் செய்வதில் தவறில்லை. ஆனால், அந்த அறிவுரை பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், உங்கள் சிநேகிதம் இன்னும் விலகி இருக்கும். அதற்கு பதிலாக, இதுபோன்ற முடிவுகளின் பின்விளைவுகள் நல்லது, கெட்டது இரண்டையும் சரிசமமாக ஆராய்ந்து அதை எடுத்துச் சொல்லிவிட்டு, அந்தத் தோழியை முடிவு எடுக்கச் சொல்லுவது நல்லது என்று நான் நினைக்கிறேன். எந்த வயதிலும் யாருக்கும் அறிவுரை என்பது ஏற்கப் பிடிக்காத ஒன்று. அதுவும், நாமே போய்ச் சொன்னால், என்னதான் நன்மை என்று இருந்தாலும், அதற்கு முரணாகத்தான் அவர்களுடைய மனது வேலை செய்யத் தொடங்கும்.

படித்து வேலை பார்க்கும் உங்கள் தோழி உங்களைவிடச் சிறியவராக இருந்தாலும், அவருக்குத் தன்னுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவும், திறமையும் உள்மனம் ஏற்படுத்தும் பயமும் இருக்கும். அவருக்கு உங்களுடைய ஆதரவுதான் தேவை. ஆதரவான அறிவுரை சிறிது வேலை செய்யும். ஓர் உண்மை சிநேகிதியாக நீங்கள் அறிவுபூர்வமாகச் சிந்தித்து (நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்தப் பயனும் இல்லை) அந்தச் சிந்தனைகளை அவளுடைய மனக்குழப்பங்களுக்குத் தீர்வு சொல்வதுபோல (அதிலே கொஞ்சம் அக்கறை, பயம், பாசம், கட்டுப்பாடு எல்லாம் கலந்து) ஓர் உரையாடலாக மாற்றிப் பாருங்கள். “யாருக்கு யார் பொருத்தம் என்று யாருக்குத் தெரியும்?”. This is a Million Dollar Question. அதிக ஏமாற்றங்களைத் தவிர்க்க, காதல்வயப்பட்டவர்கள் என்ன செய்யலாம் என்று அடுத்த இதழில் யோசிக்கிறேன்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

* இதைத் தமிழில் எழுத உதவிய உங்கள் அம்மாவிற்கு நன்றி!

© TamilOnline.com