ஹேமா ராஜகோபாலன்
பரதக் கலை இந்தியக் கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கம். உள்ளத்தில் எழும் உணர்வுகளை உடலசைவாலும் வாக்கினாலும் வெளிப்படுத்தும் ஸாத்விகாபிநயம் மூலம் சமூக பிரக்ஞை மிக்க கருத்துக்களைக் கொண்டு செல்லும் திருமதி. ஹேமா ராஜகோபாலன் சிகாகோவில் ‘நாட்யா’ நடனப் பள்ளியை நிறுவி நடத்திக் கொண்டிருப்பவர். நாட்யா இந்த ஆண்டு முப்பத்தேழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஹேமா ராஜகோபாலன் இதுவரை ஏழு முறை தேசிய அளவில் நடன அமைப்பாளருக்கான பட்டங்களையும், National Endowments for the Arts அமைப்பின் விருது, Emmy Award, விஸ்வ கலா பாரதி போன்ற பல கௌரவங்களைப் பெற்றவர். பாரம்பரிய பரதத்தோடு மேற்கத்திய நடனத்தைக் குழைத்துப் புதிய சுவைகளையும், மேற்கத்திய இசைக்கு பரதம் ஆடிப் புதிய வண்ணங்களையும் உருவாக்கும் மாயமறிந்தவர். தென்றலுக்காக அவரோடு நித்யவதி சுந்தரேஷ் உரையாடியதிலிருந்து...

*****



ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



கே: உங்கள் கலைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து தொடங்கலாமா?

ப: என் நடன வாழ்க்கை 6வது வயதில் துவங்கியது. நான் இந்த இடத்தைத் தொட முக்கியக் காரணம் என் அம்மா. அவர் பரதம் பயின்றவர். கமலா லக்ஷ்மண் போன்ற பெரிய கலைஞர்கள் ஆடுவதைப் பார்த்து நானும் சின்ன வயதில் ஆடுவேன். என் அம்மாதான் என்னைத் திருமதி. ஸ்வர்ண சரஸ்வதியிடம் சேர்த்தார். அவர் திருமதி. பாலசரஸ்வதியின் ஒன்றுவிட்ட சகோதரி. ஆறே மாதத்தில் அரங்கேற்றம் நடந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் ஜாவளி, சிருங்கார பத வர்ணம் ஆடினேன். பார்த்தவர்கள் என் பூர்வ ஜென்ம பலன் என்று பாராட்டினார்கள். பின்பு குடும்பம் டெல்லிக்குக் குடிபெயர்ந்தது. அங்கு தண்டாயுதபாணிப் பிள்ளை அவர்களின் சகோதரர் பக்கிரிச்சாமிப் பிள்ளையிடம் (நடிகை ஸ்ரீப்ரியாவின் தந்தை) நடனம் பயின்றேன். வருடத்தின் பல மாதங்கள் சென்னைக்குச் சென்று தண்டாயுதபாணிப் பிள்ளையிடமும் கற்று வந்தேன். அவர்தான் கலாக்ஷேத்ராவின் முதல் ஆசிரியர். டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் ஒன்பது வயதில் என் இரண்டாவது அரங்கேற்றம் நடந்தது. திருமதி. கலாநிதி நாராயணனிடமும் பரதம் பயின்றேன். ராஷ்டிரபதி பவனில் பலமுறை ஆடி இருக்கிறேன். ஒடிசி நிருத்யத்துக்குப் பெயர்போன சோனால் மான்சிங்குடன் இணைந்து நான் பரதநாட்டியம் பலமுறை வழங்கியிருக்கிறேன். பதினேழு வயதில் திருமணம். அதற்குப் பிறகு ஐரோப்பா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் நடன நிகழ்ச்சிகள் நடத்தினேன்.

கே: அமெரிக்கா வந்தபின் ஏற்பட்ட அனுபவத்தை நினைவு கூரலாமா?

##Caption##ப: நான் அமெரிக்கா வந்திறங்கியபோது இங்கு அதிகம் இந்தியர்கள் இல்லை. இருந்தவர்களும் குட்டை முடி, உடையில் மாற்றம், உணவில் மாற்றம் என இடத்துக்குத் தக்கவராகத் தங்களை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் சொந்த அடையாளத்தை இழந்து வருவதைப் பார்த்தேன். நாம் ஏன் புடவை கட்டக் கூடாது, பொட்டு வைக்கக் கூடாது? ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு கலாசாரத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? பல காய்கறிகளை வேகவைத்துக்கூழாகக் கொடுக்கும் கலவையைவிடத் தனித்தனியாக சமைக்கும் போது எப்படிச் சுவையும், அழகும் உண்டோ அது போலத்தான் இதுவும். நாமே நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்போமானால் இனிவரும் சந்ததியினர் தங்கள் சுய அடையாளத்தின், கலாசாரத்தின் பின்புலங்களை அறியாமலேயே போய்விடலாம். இதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிந்தது பரதக்கலை. இதன்மூலம் மட்டுமே நான் என் கலாசாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று தீர்மானித்தேன்.

என் நடன நிகழ்ச்சியைப் பார்த்த சில பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கச் சொன்னார்கள். 1973ல் என் குரு திரு. தண்டாயுதபாணியின் வழிகாட்டுதலோடு, ஸ்டூடியோ அபார்ட்மெண்ட் ஒன்றில் மூன்று குழந்தைகளுக்கு பரதம் கற்றுக் கொடுக்கத் துவங்கினேன். 1976ல் இந்த நாட்டியப்பள்ளியைத் துவங்கினேன். நியூ யார்க், கனெக்டிகட், டொராண்டோ, வான்கூவர் எனப் பல இடங்களில் இருந்து மாணவர்கள் விடுமுறைகளில் வந்து கற்கத் துவங்கினர். இன்றைக்கு இது மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.

வருடத்தில் இருமுறை இந்தியாவில் இருந்து வந்து இசை வித்வான்கள் என் வீட்டில் தங்குவார்கள். ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை ஆன மாதங்களில் ஆங்காங்கே என் பள்ளியின்மூலம் நடன நிகழ்ச்சிகள் நடத்துவோம்.

கே: நாம் மூன்றாவது தலைமுறையினரைச் சந்திக்கத் தொடங்கிவிட்டோம். பரதம் கற்பதில் அவர்கள் அணுகுமுறை எவ்வாறு உள்ளது? பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்ன?

ப: இது ஓர் அவசர உலகம். இந்தத் தலைமுறையினர் எல்லாவற்றையும் வேகவேகமாக அடைந்துவிட நினைக்கிறார்கள். கற்பதில் காட்டும் ஆர்வத்தை மேடையேறுவதிலும் காண்பிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் வெகுசீக்கிரம் மேடையேற வேண்டும் என்றே விரும்புகின்றனர். கோலிவுட், பாலிவுட் நடனங்கள், இரைச்சலான இசை எனப் பலதும் ஆக்கிரமித்துள்ள நிலையில் அதிலிருந்து இவர்களைப் பிரித்து இக்கலையைக் கொடுப்பது எளிதல்ல. இந்தத் தலைமுறைக்கேற்ப சிற்சில மாற்றங்களைச் செய்து, புதிய உத்திகளுடன் பழைய பதங்களையும், கீர்த்தனைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டியுள்ளது. நம்முடைய குறிக்கோளே உயர்ந்த நம் கலாசாரம், பண்பாடு, சம்பிரதாயம் இவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே. அதே சமயம் ரசிப்பவர்களையும் ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுச் செல்ல வேண்டும்.

கே: குரு-சிஷ்ய உறவுமுறை பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: குரு-சிஷ்ய உறவுமுறை அமெரிக்காவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அக்கால பாரதத்தில் குருகுல வாசம் இருந்தது. குருவை இறைவனாக வழிபட்டார்கள். நேர்த்தியான குருவிடமிருந்து கலையின் நுணுக்கங்களைப் பயின்று நிபுணத்துவம் பெற்ற பிறகே வெளியே வந்தார்கள். மாணவர்களும் கற்றதை அதன் மரபு மாறாமல் வழிவழியாகக் கொண்டு சென்றார்கள். குருவுக்கென்று தனி மரியாதை இருந்தது. என் குரு என்ன சொன்னாரோ அதையே நான் பின்பற்றினேன்.

ஒரு முறை தண்டாயுதபாணிப் பிள்ளையவர்கள் என்னைத் திரும்பத் திரும்ப ஆடச் சொன்னார். நான் ஆடியபோது ஜதி சரியில்லை என்றார். நான் அப்போது ஓர் ஆசிரியையாக இருந்தபோதும் எனக்கு என் குரு சொல்வது தவறாகத் தெரியவில்லை. அது என் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருந்தது. என் குரு திருமதி. கலாநிதி நாராயணன் சொல்லிக்கொடுத்த பதத்தை மேடையில் ஆட இருந்தேன். அவர் நான் ஆடியதைப் பார்த்துவிட்டு “நன்கு பயிற்சி செய்துவிட்டுப் பின்பு ஆடு” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். நானும் கடுமையான பயிற்சிக்குப் பிறகே மேடையில் அதை ஆடினேன். இங்கே அதை எதிர்பார்க்க முடியாது.

கே: இதுவரை எத்தனை அரங்கேற்றங்கள் செய்திருக்கிறீர்கள்?

ப: 150க்கும் மேல். 37 வருட கற்பித்தலுக்கு இது பெரிய எண்ணிக்கையல்ல. அரங்கேற்றம் மட்டுமே என் குறிக்கோள் அல்ல. அது பலவருடப் பயிற்சிக்குக் கிட்டும் ஓர் அங்கீகாரம், அவ்வளவுதான். அதன் முடிவல்ல. 15, 16 வயதுக்குப் பிறகே அரங்கேற்றம் செய்ய அனுமதிக்கிறேன். மனமும் உடலும் ஒரு சேர லயிக்கும்போதே நல்ல நடனம் வெளிப்படுகிறது. பக்தி அல்லது சிருங்கார ரசத்தை, ஒருவர் தான் தன்னிலிருந்து பிரிந்து அந்தப் பாத்திரத்தை உள்வாங்கித் தன்னை மறக்கும்போதுதான் வெளிப்படுத்த முடியும். அடவுகள் மிகமிக அவசியம். என் மாணவிகள் 10, 15 வருடம் கற்றாலும் முதலில் இருபது நிமிடம் அடவுகளைப் பயிற்சி செய்யவேண்டும். அரங்கேற்றத்துக்குப் பிறகும் நடனம் பயில்வதைத் தொடரவேண்டும் என்கிற வேண்டுகோளுடன்தான் அரங்கேற்றம் செய்கிறேன். அரங்கேற்றமான மாணவியரிடம் நான் பணம் வாங்குவது இல்லை.

கே: நீங்கள் பல்வேறுவகை நடனங்கள், பல்வேறு நடன அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல நடன நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறீர்கள் அதில் பல புதுமைகளும் நிகழ்த்தியிருக்கிறீர்கள். அதுகுறித்துச் சொல்லுங்கள்.

ப: நடனக் கல்வி நிலையமாக இயங்கி வந்த எங்கள் பள்ளியை, 1994ல் ‘நாட்யா டான்ஸ் தியேட்டர்’ என்று மாற்றி, அரங்கேற்றம் செய்த மாணவிகளைக் கொண்டு அமெரிக்கா முழுதும் நிகழ்ச்சிகள் நடத்தத் தொடங்கினோம். கென்னடி அரங்கம், ஸ்மித்சோனியன் அரங்கம் (வாஷிங்டன்), ஹெம் அரங்கம் (பாஸ்டன்) இன்னும் பல பிரபல அரங்கங்கங்களில் ஆடி இருக்கிறார்கள். Looking Glass Theater அமைப்பினர் 21 நாட்கள் music opera நடத்தினார்கள். சிகாகோ தியாகராஜ உற்சவத்தில் சித்ரவீணைக் கலைஞர் இசையமைக்க நாங்கள் நடனம் ஆடினோம். ஜூலை 31 அன்று மாடர்ன் டான்ஸ் கம்பெனியுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்த உள்ளோம். அதில் ஜாஸ் இசை, மாட்சா, ரவிஷங்கர் போன்றோரின் இசை இடம்பெறுகிறது. இதுபோன்று ஏராளமான நிகழ்ச்சிகளை இங்கும் வெளிநாடுகளிலும் நடத்தியிருக்கிறோம்.

கே: ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறீர்கள். ஒரு செவ்வியல் கலையான பரதத்தை, சினிமா இசையுடன் சேர்த்து உருவாக்கும் முயற்சி அக்கலையின் செவ்வியல் தன்மையைச் சிதைக்கக் கூடுமா?

ப: நல்ல கேள்வி. பரதத்தை உருவாக்கிய பரத முனியே வேதங்களை மக்களிடம் கொண்டுசெல்ல ஒலி, ஒளி வடிவில் உருவாக்கியதே பரதம். பரதம் நான்கு முக்கிய லட்சணங்களைக் கொண்டது: லௌஷ்டகம், நிற்கும் நிலை, முத்திரை, அங்கக்ஷேத்திரம் என்பன அவை. கை எப்போது, எந்த அளவு உயர்த்தப்பட வேண்டுமோ, எவ்வளவு அசைவுகள் தர வேண்டுமோ அதைச் சரியான அளவில் செய்ய வேண்டும். இதுதான் இக்கலையின் இலக்கணம், மரபு. இதில் வழுவாது இருப்பதுதான் முக்கியம். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்படும் நடனங்களில் பழைய பதங்களையோ, கீர்த்தனைகளையோ உபயோகிப்பது கடினம். மனிதர் நடுவே வித்தியாசம் இல்லை என்பதை நந்தனார் சரித்திர நாட்டிய நாடகமாகக் கொடுக்கும்பொழுது மிகமிக மெதுவாக ஊர்ந்து செல்வது போல் ஆடினால் பார்ப்பவர்களுக்கு அலுத்துவிடும். அதற்குப் புதிய உத்திகள் தேவைப்படுகின்றன. செவ்வியல் நேர்த்தி மாறாமல், பரத எல்லைகளுக்கு உட்பட்டு, மரபுமீறாமல் இக்கலையை வழங்குவது சாத்தியம். வழிவழியாகக் கற்றதை எந்தப் புதுமையும் செய்யாமல் தருகிறபோது ஆடுபவர்களிடம் தொய்வும் பார்ப்பவர்களிடம் சலிப்பும் வர வாய்ப்புள்ளது.

கே: இந்தத் தலைமுறையைச் சேர்ந்த உங்கள் மகள் கிருத்திகாவும் ஒரு நல்ல நடனக் கலைஞர். அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்.

##Caption## ப: கிருத்திகா ஒரு சிறந்த நர்த்தகி, நல்ல நடன அமைப்பாளர். தன்னுடைய பதினாறாவது வயதில் அரங்கேற்றம் செய்தவர். கிருத்திகா நடனத்திற்காகப் பல பரிசுகளை வென்றவர். உலகப்புகழ் பெற்ற செல்லோ இசைக்கலைஞர் யோ யோ மா செல்லோ வாசிக்க அதற்கு 13,000 பேர் கலந்து கொண்ட விழாவில் நடனம் ஆடியிருக்கிறார். தன்னுடைய இளங்கலைப் பட்டத்தையும், பணியையும் விட்டுவிட்டுத் தன்னை நாட்டியத்திற்கே அர்ப்பணித்துக் கொண்டவர். ராம் சீதா என்ற பெயரில் அவர் நடத்திய நாட்டிய நிகழ்ச்சிக்காக அவருக்கு ஜெஃபர்ஸன் விருது பரிந்துரைக்கப்பட்டது.

நியூ ஆர்லியன்ஸ் சூறாவளியில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டுமுகமாக வாஷிங்டனில் ஒரு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதைய ஜனாதிபதி பில் கிளின்டன் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்கான நடனத்தை மிக நேர்த்தியாகப் பலமணி நேரம் உழைத்து அமைத்திருந்தார். பல நடனங்கள் நடைபெற்றன. கிருத்திகா பங்குபெறுவதற்கு முன்னரே கிளிண்டன் கிளம்பப் போவதாக அறிவிக்கப்பட்டது. கிருத்திகா நிகழ்ச்சி அமைப்பாளரைச் சந்தித்து தங்களின் சாஸ்திரீய நடனம் பற்றியும், பல மணி நேரப் பயிற்சி பற்றியும் கூறி, கிளின்டன் எதிரில் தன் நடனம் நிகழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை அறிந்த கிளின்டன் நடனத்தை இருந்து ரசித்துப் பார்த்ததோடு கிருத்திகாவைப் பாராட்டியும் சென்றார்.

கே: இந்தியாவில் இருப்பதுபோன்றே இங்கும் இசை நடனத்திற்கான போட்டிகள், உற்சவங்கள், விழாக்கள் நிகழ்கின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புக்கள் அதற்கான நடுவர்களை இன்றளவும் இந்தியாவில் இருந்து வரவழைக்கிறார்கள். ரசிகர்களும் காண ஆர்வத்துடன் செல்கின்றனர். இதற்குக் காரணம் என்ன?

ப: அவர்கள் தொழில் வல்லுனர்கள் என்கிற அடையாளமே காரணம். இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு உள்ள தொழில்முறை ஆர்வம் (professionalism) இங்குள்ளவர்களுக்கு இல்லை. அந்த அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை அல்லது அந்த உயரத்தை இன்னும் எட்டவில்லை என்றே கூறலாம். இங்குள்ள நமது அமைப்புகள் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இருப்பிட, பயணச் செலவுகளை ஏற்றுக் கொள்வதைப் போல் உள்நாட்டுக் கலைஞர்களின் செலவுகளை ஏற்பதில்லை. தமிழ் மன்றங்களும் மற்ற நுண்கலை அமைப்புகளும் இங்குள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தி நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போழுதுதான் தொழில்துறை வல்லுனர்கள் என்கிற அடையாளம், அங்கீகாரம் எங்களுக்கும் கிடைக்கும்.

அமெரிக்கா முழுவதும் உள்ள பரத ஆசிரியர்களை அழைத்து அவர்கள் கற்பிக்கும் முறை, அவர்கள் பாணி ஆகியவை குறித்து கருத்தரங்கம் நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். நடனத்தில் புதுமை புகுத்த வேண்டும். இதில் தொய்வு வரக்கூடாது என்பதில் விழிப்பாக இருக்கிறேன். இந்தக் கலை அடுத்தடுத்த தலைமுறையைச் சென்றடைய வேண்டுமென்றால் இங்குள்ள கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

கே: அமெரிக்காவில் நமது கலைகளுக்கான விமர்சனச் சூழல் எப்படி இருக்கிறது?

ப: இந்தியாவில் இசைக்கும் நடனத்திற்கும் இருக்கும் விமர்சகர்கள் போன்று இங்கு இல்லை. இதனால் ஒப்பீட்டளவில் பரத நிகழ்ச்சிகளின் நேர்த்தி மக்களுக்குத் தெரிய வராமல் போகிறது. நல்ல விமர்சகர்கள் வர வேண்டும்.

கே: எதிர்காலச் சந்ததியினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ப: பரதம் ஒரு மொழி. அதன் மூலம் எந்தவித உயர்ந்த விழுமியங்களையும் கொண்டு செல்ல முடியும். கலையை கலையாகப் பாருங்கள். மேடையேறுவது மட்டுமே குறிக்கோள் என்று இருப்பது, அது இயலாவிட்டால் ஆசிரியரை மாற்றுவது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள். இவ்வரிய கலை அடுத்த தலைமுறைகளுக்குச் செல்ல வேண்டும்.

உரையாடல்: நித்யவதி சுந்தரேஷ்

*****


அமெரிக்காவில் அப்படியல்ல
ஒருமுறை சிகாகோவில் அமெரிக்கப் பள்ளி ஒன்றில் நம் நடனத்தை அறிமுகப்படுத்தி, இந்தியா அதன் மொழி, கலாசாரம் பற்றிச் சொல்லச் சென்றபோது சில மாணவர்கள் மேசைமீது அமர்ந்திருந்தனர். சிலர் சாப்பிட்டுக் கொண்டும், கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடியும் இருந்தனர். அருகில் இருந்த ஆசிரியரிடம் எங்கள் ஊரில் ஓர் ஆசிரியரை இவ்வாறு நடத்துவதில்லை. அது மரியாதைக் குறைவானது என்றேன். அவர் இந்த நாட்டில் ஆசிரியர், மாணவர் உறவுமுறை அப்படியில்லை. இந்தக் குழந்தைகளுக்கு அது தெரியாது. தான் கற்றதைத் தன்னிடம் கற்க வரும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது அல்லது ஒர் கடத்தியாகச் செயல்படுவது என்பதே ஆசிரியப்பணி. பெயர் சொல்வதோ, அமரும் முறையோ அக்குழந்தைகளின் சவுகரியமே தவிர மரியாதைக்குறைவல்ல என்றார். எனக்கும் சரியென்றே பட்டது. என்னை நானே மாற்றிக்கொண்டேன். என் அணுகுமுறையும் மாறியுள்ளது. ஓர் ஆசிரியர் ஒரு நல்ல நண்பனாக இருந்து கற்பித்தலே இங்கு ஏற்புடையதாக உள்ளது.

*****


மேற்கத்திய நடனம் நடக்கும் அதே மேடையில் பரதத்தையும் நடத்தலாமா?
என் கலாசாரத்தை, பக்தியை, பாவத்தை நான் என் கலையின்மூலம் கொண்டு செல்கிறேன். அங்கே பாலே, ஐரிஷ் நடனத்தைப் பார்க்க வருபவர்கள் பரதத்தையும் பார்க்கிறார்கள். அன்றைக்கு பரதம் என்கிற கலையின் அறிமுகம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அடுத்தமுறை அவர்கள் பரதத்தையே தேடிச்சென்று பார்க்கலாம். இதன்மூலம் இந்தப் பாரம்பரியமிக்க கலையை மிக அதிகமான மக்களிடம் கொண்டுசெல்ல முடிகிறது. மேலும், யோகப்பயிற்சி மூலம், தியானத்தின் மூலம் எந்த அமைதி உடலுக்கும் மனதிற்கும் கிடைக்குமோ அந்தப் பலன் பரதத்தின் மூலம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட அரிய பொக்கிஷத்தை நான் எல்லா இடங்களுக்கும், பல்வேறு தரப்பினருக்கும் கொண்டு செல்கிறேன்.

© TamilOnline.com