டாக்டர் இரா. நாகசாமி
டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்டசோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர். இவர் மேற்கொண்ட மாமல்லபுரம் பற்றிய ஆராய்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர். இவரது கட்டுரைகளை உலக அளவில் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்த்து யுனெஸ்கோ பதிப்பித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருதத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மத்திய அரசின் பல கலை, பண்பாட்டுக் குழுக்களில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். உலக நாடுகள் பலவற்றிலும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தமிழகத்தின் பண்டைச் சிறப்பை, நாகரிகத்தை உலகுக்குச் சான்றுகளோடு அடையாளம் காட்டியவர். பார்க்க: tamilartsacademy.com அவரைத் தென்றலுக்காகச் சந்தித்துப் பேசியதிலிருந்து....


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajanகே: வரலாற்றுத் துறையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

ப: எனது சொந்த ஊர் கொடுமுடி. அங்குதான் எனது பள்ளிப் பருவம் கழிந்தது. விடுதலைப் போராட்ட உணர்வு மக்களிடையே ஓங்கியிருந்த நேரம் அது. எனது வரலாற்று ஆசிரியர் தேசீயவாதி. வரலாற்றை அவர் உணர்வு பொங்கச் சொல்லிக் கொடுப்பார். பாடத்தோடு தேசீய உணர்வையும் சேர்த்து ஊட்டினார். எங்கள் பகுதியில் நிறைய தேசபக்தர்கள் இருந்தார்கள். அவர்கள் உணர்ச்சி பொங்க பாரதியார் பாடல்களைப் பாடிக்கொண்டே ஊர்வலமாகப் போவார்கள். கூட்டங்கள் நடத்துவார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் கல்கி ‘பார்த்திபன் கனவு’, ‘தியாக பூமி’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற நாவல்களைத் தொடராக எழுதிக்கொண்டிருந்தார். இப்படி ஆசிரியர்களால், தேசீயவாதிகளால், எழுத்துக்களால் என மூன்று விதங்களில் எனக்கு வரலாற்றில் ஈடுபாடு ஏற்பட்டது.

கே: தொல்பொருள் ஆய்வுப் பணிக்கு வந்தது எப்படி?

ப: முதலில் வேறொரு பணியில் இருந்தேன். அப்போது, சென்னை அருங்காட்சியகத்தின் கலைப்பிரிவுக்குத் தலைவர் ஒருவரை நியமிக்க இருப்பதாக அறிந்தேன். நான் எம்.ஏ. வகுப்பில் சம்ஸ்கிருதத்தை முதல் மொழியாக எடுத்துப் படித்திருந்தேன். அக்காலத்தில் இருந்த அறிஞர்களும், கலைப்பிரிவின் தலைமைப் பதவி வகிப்பவர்களுக்கு சம்ஸ்கிருதத்திலும், பிராந்திய மொழியிலும் நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும் என்று விதிமுறை வைத்திருந்தார்கள். அது ’ஊழல்’ என்பதையே கேள்விப்பட்டிராத 1955-58ம் வருட காலகட்டம். அப்போது பரிந்துரை, பணம் வாங்கிக் கொண்டு பதவியில் அமர்த்துவது எல்லாம் கிடையாது. எனக்கு ஒரு தகுதித் தேர்வு வைத்தார்கள். நான் அதில் தேர்ச்சி பெற்றேன். அதன்படி அந்தப் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னைத் தேர்ந்தெடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். அந்தக் காலத்தில் கிறிஸ்தவர், ஹிந்து என்ற வேற்றுமைகள் கிடையாது. திறமைக்குத்தான் முழு மதிப்பு. அப்போது எனக்குச் சம்பளம் 35 ரூபாய். ஆனால் அந்தக் காலத்தில் அந்த வேலையில் இருந்த இன்பம், ஆர்வம் இவற்றைப் பணத்தால் எடை போட்டுப் பார்க்க முடியாது.

##Caption## கே: சென்னை அருங்காட்சியகப் பணி அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்!

ப: அது ஒரு மாபெரும் அருங்காட்சியகம். உலகெங்கிலும் இருந்து பெரிய அறிஞர்கள், கலைஞர்கள் அங்கு அடிக்கடி வருவார்கள். அவர்களுக்கு நமது கலைகள், கலைப் படைப்புகள், வரலாறு பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அதற்காக நான் நிறையப் படித்து, அறிய வேண்டியதாயிற்று. அவர்களின் கேள்விகளிலிருந்து எதைக் கூர்ந்து நோக்குகிறார்கள், அவர்களது ஆர்வங்கள் என்ன என்பவற்றைக் கற்க முடிந்தது. சென்னை அருங்காட்சியகத்தில் ஆங்கிலமே முதலில் பயன்பாட்டு மொழியாக இருந்தது. நான் பதவிக்கு வந்த பின்னர் தமிழில் துணைநூல்கள், வழிநூல்கள் என்று தொகுத்து கலைச்செல்வங்கள் என்ற பெயரில் அவற்றைக் கொண்டுவந்தேன்.

கே: தமிழகத் தொல்லியல் ஆய்வுத் துறைத் தலைவரானது எப்படி?

ப: மத்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை நாட்டின் முக்கியமான சில நினைவுச் சின்னங்களைத் தம் பொறுப்பில் எடுத்துப் பராமரித்து வந்தது. மத்திய அரசால் பராமரிக்கப்படாத, பிற பகுதிகளிலுள்ள தொல்பொருள் பணிகளைச் செய்ய ஒவ்வொரு மாநில அரசிலும், ஒரு தனித்துறையை உருவாக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய அரசின் Director General of Archeology ஆக இருந்தவரும், மிகச் சிறந்த அறிஞரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான டி.என். ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் விசேஷ அதிகாரியாக நியமனம் செய்யப் பெற்றார். அவருக்கு உதவி அதிகாரியாக என்னை நியமனம் செய்தார்கள். அவர் மூன்று வருடம் பணியில் இருந்தார். அவருக்குப் பின் நான் அந்தப் பணியை ஏற்றேன். 1966ல் தமிழக அரசு, தமிழ்நாடு அரசு தொல்லியல் பாதுகாப்புத் துறை நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. அதன்படி தமிழகத்திற்கு முதன்முறையாக அத்துறையின் இயக்குனராக நான் நியமிக்கப்பட்டேன்.

கே: தமிழகத்தில் நீங்கள் செய்த முதல் அகழ்வாய்வுப் பணி எது?

ப: தொல்லியல் துறை என்பது பண்டைக்கால கல்வெட்டுகள், கோயில்கள், சிற்பங்கள், செப்புப் பட்டயங்கள், அரண்மனைகள், நடுகற்கள் போன்ற சான்றாதாரங்களை அடிப்படையாக வைத்து, விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளைச் செய்து உண்மைகளை அறிவிக்கும் துறை. நான் பொறுப்பேற்றுக் கொண்டதும் முதன்முதல் செய்த அகழ்வாய்வுப் பணி பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டை ஆய்வுதான். எனது இளம்வயதில் ’கட்ட பொம்மு கதை’ நாட்டுப்பாடல் வடிவில் ஆனந்த விகடனில் வெளிவந்து என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவன் வாழ்விடத்தை ஆய்வு செய்யத் தீர்மானித்தேன். ஆய்வுக்காக நான் பாஞ்சாலங்குறிச்சி சென்றபோது அங்கே வெறும் மண்மேடுதான் இருந்தது. கட்டபொம்மன் வாழ்ந்த கோட்டை முழுக்க முழுக்கச் செங்கல்லால் கட்டப்பட்ட கோட்டை. அதை வெள்ளைக்காரர்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கியிருந்தனர். போரில் இறந்த சில வெள்ளைக்காரர்களின் நினைவுச் சின்னங்கள் மட்டும் அருகே இருந்தன. ஊர் மக்கள் கட்டபொம்மன் கோட்டையின் இடிபாடு மீதே ஒரு கோட்டை கட்டித் தர வேண்டுமென்று சொன்னார்கள். “அவன் வாழ்ந்த இடம் அப்படியே போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அதனால் அதை அகழ்வாய்வு செய்து, அது அப்போது இருக்கும் நிலையிலேயே வைத்திருப்பதுதான் வரலாற்றுச் சான்றாக இருக்கும். அருகிலேயே மற்றொரு மண்டபத்தை அவன் நினைவாக எழுப்புவோம்” என்று முதலமைச்சர் கலைஞர் கூறினார். அப்படி உருவானதுதான் கட்டபொம்மன் அரண்மனை. அது உருவாக முதல்வர் கலைஞர் மிகவும் அக்கறையொடு ஒத்துழைத்தார். அவரே அந்தக் கோட்டையைத் திறந்து வைத்தார்.

கே: சேர மன்னர்களின் காலம் குறித்து ஆய்வு செய்திருக்கிறீர்களல்லவா?

ப: ஆம். கரூருக்குப் பக்கத்தில் அருகிலுள்ள புகளூரின் வேலாயுத மலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் தொன்மையான மூன்று சேர மன்னர்கள் பற்றிய தலைமுறைக் குறிப்பு இருந்தது. ”கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ இளங்கோ ஆகி அறிவித்த கல்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எழுத்து முறையை ஆராய்ந்து பார்த்ததில் அது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்பது தெரிய வந்தது. பின்னர் அதை அரசுக்குத் தெரிவித்து தொல்பொருள் துறைவசம் எடுத்துக்கொண்டு, வேலி போன்றவை அமைத்துச் சீர் செய்தோம். தற்போது அது தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் சின்னமாக உள்ளது. தமிழகத் தொல்லியல் வரலாற்றில் கிடைத்த, சேர மன்னர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமான மிக முக்கியமானதொரு கல்வெட்டு அது.

கே: சங்கப்பாடல்கள் எல்லாமே கற்பனை, உயர்வு நவிற்சி மிகுந்தவை என்று சிலர் கருதுகின்றனர். அது சரியா?

ப: இலக்கியம், செய்யுள், கவிதை என்ப்வை வெறும் statement அல்ல. சொல், பொருள் நயம் கூட்டி அழகுபடுத்திச் சொல்லப்படுபவை. அதில் உயர்வு நவிற்சி இருக்கத்தான் செய்யும். அதற்காக ஒட்டுமொத்த இலக்கியமுமே கற்பனை, உயர்வு நவிற்சி மட்டுமே என்று கூறுவது சரியல்ல. அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், அவர்களது வாழ்க்கைக் குறிப்புக்கள், முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள் எனப் பல விஷயங்கள் இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளன. அவை உண்மைதான் என்பதற்கு ஆதாரம் என்ன என்று காட்டும் ஏராளமான கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. சான்றாக, இப்போது சொன்ன சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைக் குறித்த கல்வெட்டைச் சொல்லலாம். அந்த மூன்று சேர மன்னர்களின் பெயர்கள் கொண்ட பாடல்கள் பதிற்றுப்பத்தில் உள்ளன. ஆக, இந்தக் கல்வெட்டின் மூலம் அந்தப் பாடல்கள் உண்மை என்பது தெரியவருகிறது. பதிற்றுப்பத்தை நாம் கற்பனை என்று ஒதுக்கி விட முடியுமா?

அதுபோல மதுரைக்குப் பக்கத்தில் உள்ள மீனாட்சிபுரம் (மாங்குளம்) கல்வெட்டில் ‘நெடுஞ்செழியன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதன் எழுத்தமைதியை வைத்துப் பார்க்கும்போது அது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிகிறது. நம்முடைய சங்க இலக்கியங்களிலும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று பல நெடுஞ்செழியன்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆக நெடுஞ்செழியனை நாம் கற்பனை என்று ஒதுக்கிவிட இயலுமா?

##Caption## கடையெழு வள்ளல்களில் ஒருவன் அதியமான் நெடுமானஞ்சி. புறநானூற்றுப் பாடல்கள் மூலம் இவன் சங்க காலத்தில் வாழ்ந்தது தெரிய வருகிறது. ஜம்பை என்ற ஊரில் ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பழமையான கல்வெட்டான அதில் “ஸதியபுதோ அதியன் நெடுமானஞ்சி ஈத்த பாளி” என்று குறிக்கப்பட்டிருக்கிறது. ஆக அதியமான் நெடுமானஞ்சி என்னும் மன்னன் சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறான். அவன் பொய்யோ, கற்பனையோ இல்லை. சங்கப் பாடல்களும், நமக்குக் கிடைத்திருக்கும் கல்வெட்டுக் குறிப்புகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதால், அவை பொய்யோ கற்பனையோ கிடையாது என்ற முடிவிற்கு நாம் வரலாம். மேலும் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த அறிஞர்கள், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் சில குறிப்புகளை எழுதியிருக்கின்றனர். அவற்றின் காலங்களை அந்தந்த நாட்டு ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள். அதில் ‘கவேரி செம்போரியம்’ என்று காவிரிப் பூம்பட்டினத்தைக் குறித்திருக்கிறார்கள். அதில், பல நாட்டவர்கள் வந்து செல்லும் ஒரு வியாபாரத் தலமாக அது திகழ்ந்தது என்று குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். காவிரிப் பூம்பட்டினம் சிறந்த வணிகத் தலமாகத் திகழ்ந்தது; பல கப்பல்கள் வந்து இறங்கின; பல தேசத்தவரும் அங்கு வந்து வாணிகம் செய்தனர்; அங்காடிகள் மூலம் வியாபரம் நடந்தது என்று கூறும் நமது நாட்டு இலக்கியக் குறிப்புகளுடன் இது ஒத்துப் போகிறதல்லவா?

இது தவிர நமக்கு இங்கு ஏராளமான தங்கக் காசுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் பாதிக்குமேல் ரோமானியக் காசுகள். அந்த நாணயத்தை வெளியிட்ட அரசனின் தலை அதில் பொறிக்கப்பட்டிருகிறது. அவன் பெயர் அதில் குறிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அந்த நாணயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் கிடைக்கும் குறிப்புகளும் அவர்கள் நம்முடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறது. அந்த நாணயத்தைப் பார்த்து, இங்கிருக்கும் சேர மன்னன், போரில் தனது வெற்றியைக் குறிக்கும் வண்ணம் அதே போன்ற ஒரு நாணயத்தை வெளியிட்டிருக்கிறான். அதில் அவன் தன் உருவத்தைப் பொறித்திருக்கிறான். மறுபக்கத்தில் ‘கொல்லிப் புறையன்’ என்று தன் பெயரையும் பொறித்திருக்கிறான். பொறையன் என்ற பெயர் அக்காலத்தில் புறையன் என்றும் வழங்கப்பட்டிருக்கிறது. ’கொல்லிப் புறையன்’ என்பதற்கு கொல்லியை வென்ற பொறையன் என்பது பொருள். அவன்தான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன். அவன் திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியுடன் சேர்ந்து கொண்டு, வல்வில் ஓரி மீது படையெடுத்து, அவன் ஆண்ட கொல்லிமலையை வென்றான். சிலம்பும் அம்மன்னனை, ’கொல்லியை ஆண்ட குடவர் கோவே’ என்று சிறப்பித்துக் கூறுகிறது. சங்க இலக்கியத்தின் பல பாடல்களிலும் அவன் ’பொறையன் கொல்லி’ என்று சிறப்பித்து போற்றப்படுகிறான். அவன் தனது கொல்லி வெற்றியைக் கொண்டாடும் முகமாக வெளியிட்ட காசுதான் அது. அதில் உள்ள எழுத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்து. ஆக இதுபோன்ற சான்றுகளின் அடிப்படையிலும், வரலாற்று ஆதார உண்மைகளின் அடிப்படையிலும் சங்கப்பாடல்கள் அனைத்துமே கற்பனை அல்ல என்பதும், அவை 2000 ஆண்டுகள் பழமையானவை என்பதும் தெரிய வருகிறதல்லவா?

கே: அப்படியானால் முற்காலத் தமிழர் நாகரிகத்தைப் பிற இந்திய, உலக நாகரிகங்களிடமிருந்து உயர்ந்த ஒன்று என்று கூறலாமா?

ப: அப்படியல்ல. அந்தந்த நாட்டிற்கு அவரவர் நாகரிகம் உயர்ந்தது. நாம்தான் உயர்வு, பிறர் தாழ்வு என்று கூறுவதற்கில்லை. அது தவறான போக்கு. நம்முடைய வரலாறு மிகவும் சிறப்புடையது; பெருமைப்படத் தக்கது; 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனித்துவத்துடனும், உயர்வுடனும் விளங்கி வந்த ஒன்று என்பது உண்மை. மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்று சொல்வதை விட, நாம் யாரையும் விடத் தாழ்ந்தவர்கள் அல்ல என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


பாரதி பிறந்த வீட்டில் வெடிமருந்து
பாரதி பிறந்த வீடு எட்டயபுரத்தில் அன்று கேட்பாரற்று இருந்தது. தீப்பெட்டி தயாரிக்க உதவும் வெடிமருந்துப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கும் கிடங்காக இருந்தது. அதை எப்படியும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டேன். அரசைத் தொடர்பு கொண்டு, அதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி அனுமதி பெற்றேன். பாரதியார் பிறந்தபோது அந்தவீடு எப்படி இருந்ததோ, அதே தோற்றத்துடன், அந்தப் பழமை மாறாமல், அந்த வீட்டைச் சீர் செய்து பாதுகாத்தோம். அது இன்னமும் அப்படியே இருக்கிறது. அதை மட்டும் அன்று செய்யாமல் விட்டிருந்தால் அந்த வீடு என்றாவது வெடித்திருக்கும், காரணம் அதில் வைக்கப்பட்டிருந்தது அத்தனையும் வெடிமருந்துப் பொருட்கள். பாரதியார் பிறந்த வீட்டைப் பாதுகாத்த மனநிறைவு எனக்கு உண்டு.

*****


லண்டனுக்குப் போன நடராஜர்
பத்தூர் என்ற ஊரில் உள்ள ஆலயத்தின் நடராஜர் சிலை ஒன்று திருட்டுப் போய் விட்டது. லண்டனில் அது கண்டுபிடிக்கப்பட்டு, அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்தியாவிலிருந்து சாட்சி சொல்வதற்காக நான் அனுப்பப்பட்டேன். கோர்ட்டில் வாதங்கள் நடந்தது. இது உங்கள் நாட்டிற்குத்தான் சொந்தமானது என்று எப்படிக் கூறுகிறீர்கள் என்று நீதிபதி பல குறுக்குக் கேள்விகளைக் கேட்டார். நம்மிடம் அப்போது அதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. இருந்தாலும் நான் நமது கல்வெட்டுச் சான்றுகளையும், கோயில் பற்றிய அறிவையும், நமது பண்பாடு, கலைகள் பற்றியும் நீதிபதியிடம் விளக்கிக் கூறினேன். இது நம் நாட்டைச் சேர்ந்ததுதான் என்பதை மற்ற ஆலயங்கள், சிலைகளை ஒப்பிட்டுக் காட்டி நிரூபித்தேன். அதைக் கேட்ட அந்நாட்டு நீதிபதி மிகவும் வியந்து என்னைப் பாராட்டினார். Unparalleled Expert in this field என்று அவர் தன் தீர்ப்பில் என்னைப்பற்றி எழுதினார். உடனடியாகச் சிலையை நம்மிடம் ஒப்படைக்கத் தீர்ப்புக் கூறினார். ஆனால் எதிர்த்தரப்பினர் பிரபுக்கள் சபையில்மேல்முறையீடு செய்தனர். அதில் இருந்த மூன்று முதிர்ந்த நீதிபதிகள், இதில் விவாதிக்க ஏதுமில்லை, சாட்சியங்கள் எல்லாம் மிக வலுவாக உள்ளன என்று கூறி வழக்கை ஏற்க மறுத்து விட்டனர். பின்னர் வழக்கு ப்ரிவி கவுன்சிலுக்குப் போனது. அந்த நீதிபதியும் இந்த வழக்கு நடந்த விதம் மிகச்சரி, இனி இதில் விவாதிக்க ஏதுமில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். நடராஜரும் நம் ஊருக்குத் திரும்ப வந்தார்.

*****


அடுத்த இதழில் முடிவடையும்.

© TamilOnline.com