இமையம்
தலித்துகளின் வாழ்வை, அவர்களது துயரங்களை, அவர்களது எதிர்நீச்சலை உணர்ச்சிப் பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப்புகளில் முன்வைப்பவர் இமையம். கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூரில் வெங்கட்டன், சின்னம்மாள் தம்பதியினருக்கு 1966ல் மகனாகப் பிறந்தவர். இயற்பெயர் அண்ணாமலை. உயர்நிலைப் படிப்பை முடித்தபின் ஆசிரியர் பயிற்சிப் பணியை நிறைவு செய்து விருத்தாசலத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.

இமையம் எதிர்கொண்ட வாழ்வியல் அனுபவங்களும், சமூக முரண்பாடுகளும் அவருக்குள் பல கேள்விகளை எழுப்பின.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajanவிருப்பமின்றித் திணிக்கப்படும் சூழல்களாலும், சந்தர்ப்பங்களாலும் அமையும் மனிதர்களின் வாழ்வு குறித்தும், சமூகம் குறித்தும் பல சிந்தனைகள் தோன்றின. எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக ஏன் அமைவதில்லை; எப்படியோ இருக்க வேண்டிய வாழ்க்கை ஏன் இப்படிச் சீர்கெட்டு இருக்கிறது போன்ற சிந்தனைகளே இமையத்தின் படைப்பூக்கத்திற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

”என் எழுத்தின் நோக்கம் மனித வாழ்வின் அத்தனை மேன்மைகளையும் இழிவுகளையும் இயற்கையின் முன் மனிதன் தோற்றுப்போகும் கணங்களையும் வாழ்வின் வெற்றுத் தன்மையையும் புரிந்து கொள்வதற்கான முயற்சியே” என்று குறிப்பிடும் இமையத்தின் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’, 1994ல் வெளியாகிப் பபரப்பை ஏற்படுத்தியது. “சிடுக்கு மொழிகள் ஏதுமின்றி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையை, இயல்பாக, உள்ளதை உள்ளவாறு கூறும் நூல்” என விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது. அடித்தட்டுச் சமூகமான வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டிய அந்தப் புதினம், பலத்த விவாதத்துக்கும் ஆட்பட்டது. “இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவல் இலக்கிய வெளிப்பாட்டு முறைக்காக அல்லாமல் உள்ளடக்கத்திற்காகவும், தான் தேர்ந்துகொண்ட வெளிப்பாட்டு முறையின் சாத்தியங்களுக்காகவும் வெளிப்படுத்திய வாழ்க்கைக்காகவும் பேசப்பட்டதில் வியப்பில்லை. இந்நாவலின் வெளிப்பாட்டு முறையை வழக்கொழிந்துபோன ஒன்று என்று சொன்னவர்களையும் இந்த நாவலைப் பொருட்படுத்தி விவாதிக்க வைத்தது இந்த நாவலின் சாதனை” என்கிறார் விமர்சகர் அரவிந்தன். இந்நூல் பின்னர் இதன் முக்கியத்துவம் கருதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

##Caption##தொடர்ந்து 1999ல் ’ஆறுமுகம்’ புதினம் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கதா பதிப்பகம் மூலம் வெளியானது. இமையத்தின் மூன்றாவது புதினமான ‘செடல்’ 2006ல் வெளிவந்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த, பொட்டுக்கட்டி விடப்பட்ட ஒரு தேவதாசிப் பெண்ணின் வாழ்க்கையைக் கூறும் செடல், தமிழில் வெளியான தலித் நாவல்களில் மிக முக்கியமானது. “இன்றைய தமிழ் நாவலுக்கு செடல் ஒரு மிகவும் முக்கியமான பங்களிப்பு என்று சொல்லவேண்டும். தலித் சமூகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாத பல விஷயங்களை நமக்கு முதல் தடவையாகச் சொல்கிறது” என்று கூறும் பிரபல விமர்சகர் வெங்கட் சாமிநாதன், “இந்த மாதிரியான அனுபவங்களும், மனிதர்களும், அவர்கள் கொண்டுள்ள மதிப்புகளும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரசினைகளும் தமிழ் நாவலில் வெளிவருவது நம் சூழலுக்கு, சிந்தனைக்கு, ஆரோக்கியமான விஷயம்” என்கிறார்.

தமிழ் தலித் இலக்கியத்தில் யதார்த்தத்தை, அதன் அழகியலை நிறுவிய முக்கியமான படைப்பாளி என்று இமையத்தைச் சொல்லலாம். தலித் சமூகங்களின் சடங்குகள், அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்த பிரசாரப் பொய்மைகளுக்கு மாற்றாக இமையத்தின் படைப்புக்கள், அதன் யதார்த்தத்தை, உண்மையை, மிகைப்படுத்தாமல் இயல்பாக முன்வைக்கின்றன. தேர்ந்த பாத்திரப் படைப்புகளோடு, துல்லியமான சித்திரிப்புடனும், கவனமான மொழிக் கட்டுப்பாட்டுடனும் ஆக்கப்பட்டவை இமையத்தின் படைப்புக்கள். கட்டுப்பாடுகள், எல்லைக்கோடுகள், வரையறைகள், கோட்பாடுகள், இசங்கள் அனைத்தும் படைப்பை ஊனப்படுத்தவே செய்யும் என்ற கருத்திற்கேற்ப, அவை எதுவுமே இமையத்தின் படைப்புகளில் இல்லை.

மனித உறவின் மையத்தை மட்டுமே இலக்கியம் பேச வேண்டும் என்பதே இமையத்தின் கருத்து. அவற்றையே மையமாகக் கொண்ட இமையத்தின் முக்கியமான சிறுகதைத் தொகுப்பான ‘மண்பாரம்’ 2004லும், ‘வீடியோ மாரியம்மன்’ 2008லும் வெளியாகின. இச்சிறுகதைகள் புற அலங்காரங்கள், குழப்பமான நவீன இலக்கிய உத்திகள் என்று ஏதுமில்லாமல் இயல்பாக நிஜ வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

தலித் இலக்கியம் பற்றி இமையம், “தலித் வாழ்க்கை என்பதும் தலித் இலக்கியம் என்பதும் நவீனத்துவம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடோ தத்துவமோ அல்ல; தலித் இலக்கியம் என்பது ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை அல்ல. கதை அல்ல; பெரும் திரளான ஓர் இனத்தின் பண்பாடு, ஒழுக்க நெறிகள், வரலாறு, மொழி, குறியீடு, அடையாளம் எனலாம். அதன் அடிப்படைக் கலாசார மீறல், கலக வெளிப்பாடு, சமூக, புராணிக மதிப்பீடுகளின் மீதான, சமூகக் கட்டுமானங்களின் மீதான எதிர்ப்பு எனலாம். தலித் இலக்கியம் என்பது அடிப்படையில் ஒரு வாழ்க்கை - வாழ்க்கை முறை“ என்று கூறுகிறார். மேலும் அவர், “தலித்துகளின் வாழ்க்கை என்பது கையேந்துதல், கூப்பாடு, ஒப்பாரி, அழுகை, அசிங்கம் மட்டும்தானா? தலித்துகளின் வாழ்க்கையில் சிரிப்பு, சந்தோஷம், விளையாட்டு, கலைகள் இல்லையா? தலித்துகளுக்கென்று பண்பாடு, வரலாறு, மொழி, ஒழுக்க நெறிகள், கூட்டு வாழ்வு எனச் செழுமையான பகுதிகளே இல்லையா? இப்பகுதிகளைத் தலித் எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதில்லை? இவற்றை ஏன் இன்றைய சந்தை கோருவதில்லை?” என்று எழுப்பும் வினா சிந்திக்க வேண்டிய ஒன்று.

##Caption## தனது படைப்புகள் பற்றி இமையம், “என்னுடைய வாழ்க்கைதான் என்னுடைய எழுத்துகள். நான் பிறந்து வளர்ந்த ஊர், அந்த ஊருக்குரிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை, அந்த ஊருக்குரிய சட்டதிட்டங்கள், ஒழுக்க முறைகள், அறங்கள், நீதி நியமங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் இவை கொண்டதுதான் என்னுடைய படைப்புலகம். இதிலிருந்துதான் ஆரோக்கியம், தனபாக்கியம், செடல் போன்றவர்கள் வருகிறார்கள். என் மூளையிலிருந்து உருவானவர்கள் என்று என் எழுத்தில் எவரும் இல்லை. வாழ்க்கையிலிருந்து விலகியதோ அந்நியப்பட்டதோ அல்ல இலக்கியம்” என்கிறார்.

அக்னி அக்‌ஷரா விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, மத்திய அரசின் கலாசாரத் துறை வழங்கிய ஜூனியர் ஃபெல்லோஷிப், திருப்பூர் தமிழ்ச்சங்க பரிசு, அமுதனடிகள் விருது போன்ற பலவற்றைப் பெற்றுள்ள இமையம், தமிழக அரசால் வழங்கப்படும் திரு.வி.க. விருதையும் பெற்றுள்ளார்.

தன் எழுத்தைப் பற்றி இமையம், “என் எழுத்தைப் படித்துவிட்டுச் சமூகம் மட்டுமல்ல; ஒரே ஒரு மனிதனாவது மாறிவிடப்போகிறானா? என் எழுத்தால் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று தெரிந்த பிறகும் மூன்று நாவல்களையும் இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஏன் எழுதினேன்? எழுத்தாளன் என்கிற அந்தஸ்திற்காகவா? பணத்திற்காக, விளம்பரத்திற்காக, புகழுக்காகவா? பிறரைக் காட்டிலும் மகத்தான வாழ்வை வாழ்ந்தேன். அதற்கான அடையாளம் வேண்டும் என்பதற்காகவா? குரலற்றவர்களின் குரலை எதிரொலிக்க வேண்டும் என்னும் கோட்பாட்டுக் கடமையா? இதில் எதுவுமே இல்லை. வாழ்வு குறித்து, சமூகம் குறித்து, சிந்திக்கவைப்பதால் எழுதுகிறேன். எழுதுவதால் கூடுதலாக அக்கறைகொண்டு சிந்திக்கிறேன் என்பதுதான் சரி. நான் வாழ்கிற இந்தச் சமூகத்தின் மீது, சமூக உளவியல்மீது, வாழ்க்கை முறைமீது, சமூக நடைமுறைமீது, நீதி நியமங்கள்மீது எனக்குக் கொஞ்சம் கேள்விகளும் விமர்சனங்களும் இருக்கின்றன. இதுதான் என் எழுத்து” என்கிறார் தயக்கமின்றி.

"ஓர் இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் கலாச்சாரம்தான் என்றால், தலித் எழுத்தாளர்களின் நோக்கம் தலித் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் அதன் செறிவான பகுதிகளை, கூறுகளைப் பூரணமாக உள்வாங்கி, அவற்றை இலக்கியப் படைப்பின் மூலம் அடுத்தடுத்த காலகட்டத்துக்குக் கடத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உலகத் தரத்துக்கு மட்டுமல்ல, இந்திய, தமிழ்த் தரத்துக்குக்கூடத் தலித் இலக்கியம் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான்" என்ற இமையத்தின் தலித் இலக்கியம் குறித்த வெளிப்படையான கருத்து இலக்கியவாதிகள் சிந்திக்க வேண்டிய ஒன்று.

சோ. தருமன், ராஜ்கௌதமன், பாமா, சிவகாமி போன்ற தலித் எழுத்தாளர்கள் வரிசையில் இமையம் மிக முக்கிய இடம் பெறுகிறார். அப்படித் தனிமைப்படுத்தாமல் சொல்ல வேண்டுமென்றால் தற்காலத் தமிழ் படைப்பாளிகளில் இமையமும் ஒரு சிகரம் என்பதில் சந்தேகம் இல்லை.

அரவிந்த்

© TamilOnline.com