ஜூலை 2010: வாசகர் கடிதம்
தென்றல் ஜூன் 2010 இதழில் திருமணம் என்பது உடல் உறவு மட்டுமல்ல என்று சிநேகிதிக்கு மிக அழகாக, விளக்கமாக டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் பதில் கூறி உள்ளார். தன் மாமியார் பற்றி வருந்தி சிறிது கோபமுடன் எழுதிய நண்பிக்கு மிக அன்புடன் எழுதிய பதில் கண்டு மிகப் பெருமையாக இருக்கின்றது அந்தத் தாய் (மாமியார்) தன் மகனைத் தனியாக இருபது ஆண்டுகள் வளர்த்து, திருமணம் செய்து வைத்துவிட்டுத் தனிமரம் ஆன பின்னர்தான் துணை தேடினார்கள் என்று படிக்கவும் மிகப் பெருமையாக இருக்கின்றது. தென்றல் இதழுக்கு வாழ்த்துக்கள்.

பாலகிருஷ்ணன்
சிகாகோ, இல்லினாய்.

*****


ஜூன் மாதத் தென்றலை இப்போதுதான் படித்து முடித்தேன். என்ன அற்புதமான விருந்து! இந்த இதழ் முன்னெப்போதையும் விட மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த இதழின் ‘அன்புள்ள சிநேகிதியே’வும் இதுவரை வந்தவற்றிலேயே மிகச் சிறப்பு. அவர் கொடுத்துள்ள அறிவுரை அற்புதம். சுகி சிவம் நேர்காணல், எல்லே சுவாமிநாதன் கதை எல்லாமே பிரமாதம். பாராட்டுகள்.

மாலா பத்மநாபன்,
கலி.

*****


தென்றல் பத்திரிகையின் ரசிகை நான். அந்தக் கால சுதேசமித்திரன் முதல் சமீப காலத்திய மாத இதழ்கள் வரை பலவற்றைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். மூன்று வருடங்களுக்கும் முன் க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்துகொண்ட என் மகள்மூலம் தென்றல் எனக்கு அறிமுகம் ஆயிற்று. படித்ததும் எனக்கு அளப்பரிய சந்தோஷம். மூன்று வருடங்களாகக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து அந்த எண்ணம் இன்றுதான் ஈடேறுகிறது. தென்றலை விமர்சிப்பது என்பது ஊமை பேச நினைப்பது போலத்தான். அதனால் விமர்சிப்பதை விட மனமாரப் படித்துப் பரவசமடையவே விரும்புகிறேன். இத்தகைய உயர்ந்த பத்திரிகையைத் தந்து எல்லோருக்கும் சந்தோஷம் அளிக்கும் தங்கள் முயற்சியை மனமாரப் பாராட்டுகிறேன்.

ரங்கநாயகி,
டொலடோ, ஒஹையோ

*****


மே மாதத் தென்றல் இதழைப் படித்தேன். ஒரு புதையலைக் கண்டெடுத்த அளவு எனக்குச் சந்தோஷம் ஏற்பட்டது. சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும், கதைகளும் வேறு பல அழகிய அம்சங்களும் கொண்ட இந்தத் தமிழ் பத்திரிகை அமெரிக்காவிலேயே அச்சிடப்படுவது குறித்து மிகவும் ஆனந்தம்.

குறிப்பாக ‘மருமகன், மகன், நான்’ என்ற சிறுகதை என்னைக் கவர்ந்தது. இந்த அனுபவம் எல்லாப் பெற்றோருக்கும் பொதுவாக வருவதுதான். முதலில் பிள்ளைகளும் மருமகள்களும் நம்மை மதித்து ஒரு வார்த்தை கேட்கவில்லையே என்று பெரிய அதிர்ச்சியாக இருக்கும். கோபம் பொத்துக்கொண்டு வரும். மேல்நாட்டவர் இந்த நிலையைத்தான் “I am part of the furniture" என்கிறார்கள்.

பார்வதி ராமன்
டேடன், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com